Tuesday 20 August 2019

மொழி உரிமையை காக்க அணி திரள்வோம்- மலேசிய இந்தியர் குரல்

ரா.தங்கமணி

ஷா ஆலம்-
தமிழ், சீனப்பள்ளிகளில் ‘ஜாவி’ அரபு மொழியை திணிப்பதற்கு அரசாங்கம் முன்னெடுத்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நடத்தப்படவுள்ள 'புரட்சி' பேரணிக்கு மலேசிய இந்தியர் குரல் முழுமையான ஆதரவு வழங்குவதாக அதன் சிலாங்கூர் மாநிலத் தலைவர் மு.மணிமாறன் தெரிவித்தார்.

தாய்மொழி என்பது நமது உரிமையாகும். அதனை விட்டுக் கொடுக்கும் போக்கை நாம் ஒருபோதும் சகித்துக் கொண்டிருக்க முடியாது. ‘ஜாவி’ அரபு மொழியை கட்டாயமாக தமிழ்,சீனப்பள்ளிகளில் திணிக்கும் நடவடிக்கையை முன்னெடுக்கும் அரசாங்கத்திற்கு நமது எதிர்ப்பின் பலத்தை காட்ட வேண்டியுள்ளது.

அவ்வகையில் வரும் 23ஆம் தேதி பிரிக்பீல்ட்ஸ் நீரூற்று வளாகத்தில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ள எதிர்ப்புப் பேரணிக்கு பொதுமக்கள் திரளாக வர வேண்டும்.
இந்த பேரணி நமது உரிமை நிலைநாட்டுவதற்காக நடத்தப்படும் பேரணியாகும். இதில் அரசியல் வேறுபாடுகளை களைந்து இந்தியர் என்ற உண்ரவுடன் மட்டும் பங்கேற்போம். 
அரசியலில் முரண்பட்ட கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் உரிமையை காப்பதில் ஓர் அணியில் திரள்வோம் என்பதை புலப்படுத்துவோம் என்று மணிமாறன் மேலும் கூறினார்.

'புரட்சி' பேரணி மொழியை காப்பதற்காக நடத்தப்படுகின்ற பேரணியாகும். இதில் அரசியல் லாபம் தேட வேண்டாம். இந்தியர் என்ற உணர்வுடன் நாம் செயல்பட்டாலே போதுமானது என்று மலேசிய இந்தியர் குரல் இயக்கத்தின் தேசியச் செயலாளர் ஆனந்த், இளைஞர் பகுதித் தலைவர் தேவன் ஆகியோர் குறிப்பிட்டனர்.

இந்த செய்தியாளர் சந்திப்பின்போது உடனிருந்த பேரணி ஏற்பாட்டாளர்களில் ஒருவரான உமாகாந்தன் கூறுகையில், பங்கேற்பாளர் அனைவரும் கறுப்பு நிற உடையணிந்து வர வேண்டும் எனவும் அதுவே நமது எதிர்ப்பின் முதல் அடையாளம் என்று கூறினார்.

No comments:

Post a Comment