Thursday 1 August 2019

ஹீவூட், சுங்கை ரேலா தோட்டத் தமிழ்ப்பள்ளிகளின் நிலையென்ன? மணிமாறன் கேள்வி

ரா.தங்கமணி

சுங்கை சிப்புட்-
கடந்த தேமு ஆட்சியின் போது தொடங்கப்பட்ட இரு தமிழ்ப்பள்ளிகளின் இன்றைய நிலை என்ன? என்று சுங்கை சிப்புட் மஇகா தொகுதிச் செயலாளர் கி.மணிமாறன் கேள்வி எழுப்பினார்.
சுங்கை ரேலா தோட்டத் தமிழ்ப்பள்ளியின் புதிய கட்டடம்
தேசிய முன்னணி ஆட்சி அதிகாரத்தில் இருந்தபோது சுங்கை சிப்புட் மஇகா ஏற்பாட்டில் சுங்கை ரேலா தோட்டத் தமிழ்ப்பள்ளி இட மாற்றம், ஈவூட் தோட்ட தமிழ்ப்பள்ளி புதிய கட்டடம் நிர்மாணிப்பு ஆகியவை மேற்கொள்ளப்பட்டது. முன்னாள் கல்வி துணை அமைச்சர் டத்தோ ப.கமலநாதன் பெரும் முயற்சியில் இப்பள்ளிகளுக்கான அங்கீகாரம் கிடைக்கப்பெற்றது.

இதில் சுங்கை ரேலா தோட்டத் தமிழ்ப்பள்ளி சுங்கை குருடா தோட்டத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டு 95 விழுக்காடு நிறைவு பெற்ற நிலையில் இன்னமும் இப்பள்ளி எப்போது பயன்பாட்டுக்கு வரும் என்பது தெரியவில்லை.
30% மட்டுமே நிறைவு பெற்றுள்ள ஈவூட் தோட்டத் தமிழ்ப்பள்ளி
அதேபோன்று ஈவூட் தோட்டத் தமிழ்ப்பள்ளி நிர்மாணிப்புப் பணி கடந்த தேசிய முன்னணி ஆட்சியின்போதே தொடங்கப்பட்ட போதிலும் இதுவரை 30 விழுக்காடு நிர்மாணிப்புப் பணிகளே நிறைவு பெற்றுள்ளன.  கடந்தாண்டு டிசம்பர் மாதமே பூர்த்தியாகியிருக்க வேண்டிய இப்பள்ளியி நிர்மாணிப்புப் பணிகளில் இன்னமும் காலதாமதம் ஏற்படுவது ஏன்?
மணிமாறன்
அவ்வப்போது நிர்மாணிப்புப் பணிகள் தொடங்கப்படுவதும் பிறகு நிறுத்தப்படுவதும் தொடர்கதையாகின்ற நிலையில் இப்பள்ளியின் நிர்மாணிப்புப் பணிகள் எப்போது நிறைவு பெறும் என்பதற்கு பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கத்தை சார்ந்திருக்கும் தலைவர்கள் பதிலளிப்பார்களா?

இவ்விரு பள்ளிகளின் விவகாரம் தொடர்பில் அன்று மஇகாவையும் தேசிய முன்னணியையும் கேள்விகளால் துழைத்தெடுத்த தலைவர்கள், சமூகநலவாதிகள் எல்லாம் எப்போது எங்கே போனார்கள்?

இப்பள்ளிகளின் விவகாரம் தொடர்பில் இப்போது வாய் திறந்து கேள்வி கேட்க அஞ்சுவது ஏன்? என்று கேள்வி எழுப்பிய மணிமாறன், இப்பள்ளிகளின் நிலவரம் குறித்து கல்வி அமைச்சு தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

No comments:

Post a Comment