Tuesday 20 August 2019

தாய்மொழிப்பள்ளிகளில் ‘ஜாவி’ மொழி; 'புரட்சி' பேரணிக்கு முழு ஆதரவு- கணபதிராவ்

ரா.தங்கமணி

ஷா ஆலம்-
தாய்மொழிப் பள்ளிகளான தமிழ், சீனப்பள்ளிகளில் ‘ஜாவி’ அரபு மொழியை கட்டாயப்படுத்தி திணிப்பதற்கு அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கைக்கு எதிராக ஒன்றுப்பட்ட அரசு சாரா அமைப்புகள் நடத்தும் 'புரட்சி' பேரணிக்கு தாம் முழு ஆதரவு வழங்குவதாக சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் தெரிவித்தார்.
வரும் 23ஆம் தேதி பிரிக்பீல்ட்ஸ் நீருற்று வளாகத்தில் இரவு 7.30 மணிக்கு நடத்த திட்டமிடப்பட்டுள்ள இந்த பேரணி தாய்மொழியை கட்டி காப்பதற்காக நடத்தப்படுகின்ற ஓர் அமைதி பேரணியாகும்.

அரசு சார்பற்ற தமிழ், சீன அமைப்புகள் ஒன்றிணைந்து நடத்தும் இப்பேரணிக்கு போலீஸ் அனுமதி பெறப்பட்டுள்ள தமிழ்ப்பள்ளிகளில் ‘ஜாவி’ அரபு மொழி திணிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படக்கூடாது என்பதை அரசாங்கத்திற்கு உணர்த்தும் வகையில் இவ்வாறான பேரணி நடத்தப்படுகிறது.

இவ்விவகாரத்தில்ஆரம்பம் முதலே மக்களின் கருத்துகளை கேட்காமல் அரசாங்கம் முன்னெடுத்த நடவடிக்கையால் இந்திய, சீன சமூகத்தில் மிகப் பெரிய கொந்தளிப்பு ஏற்பட்டது. தாய்மொழி பள்ளிகளில் பிற மொழிகள் போதிப்பதை எதிர்க்கவில்லை.

மாறாக, கட்டாயமாக திணிப்பதைதான் எதிர்க்கிறோம் என்பதை உணர்த்துவதற்காக நடத்தப்படும் இந்த பேரணிக்கு முழுமையான ஆதரவை வழங்குவதோடு மிக அமைதியான முறையில், யாருக்கும் பங்கம் ஏற்படாத வகையில் இந்த பேரணியை வெற்றிகரமாக நடத்துவதில் ஏற்பாட்டாளர்கள் கவனமாக செயல்படுவதோடு பங்கேற்பாளர்களும் எவ்வித அசம்பாவிதத்திற்கும் இடமளிக்காமல் மிக பொறுமையோடு செயல்பட வேண்டும் என்று கணபதிராவ் கேட்டுக் கொண்டார்.

No comments:

Post a Comment