Wednesday 4 November 2020

பட்ஜெட் சிலாங்கூர் 2021:இந்திய சமுதாயத்திற்காக வெ.13 மில்லியன் ஒதுக்கீடு- கணபதிராவ்

ரா.தங்கமணி

ஷா ஆலம்-

சிலாங்கூர் மாநில அரசு அறிவித்துள்ள 2021ஆம் ஆண்டுக்கான வரவு- செலவு திட்டத்தில் இந்திய சமூகத்தின் மேம்பாட்டுக்காக பல்வேறு திட்டங்களுக்கு 13 மில்லியன் வெள்ளி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் தெரிவித்தார்.

கடந்த வாரம் மாநில மந்திரி பெசார் டத்தோஶ்ரீ அமிருடின் சாரி மாநில பட்ஜெட்டை அறிவித்தார். அதில் அனைத்துத் தரப்பினரையும் சார்ந்திருக்கும் வகையில் பட்ஜெட் வகுக்கப்பட்டுள்ளது.

இந்திய சமுதாயத்திற்காக தமிழ்ப்பள்ளி, ஆலயம், கல்வி உதவி நிதி, தொழில் முனைவர் மேம்பாடு, சமூக உதவி என பல்வேறு திட்டங்களுக்கு இந்த பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்ப்பள்ளிகளுக்கு 50 லட்சம் வெள்ளி, இந்திய மாணவர்களுக்கான பேருந்து கட்டணம், 2000 வெள்ளிக்கும் குறைவான குடும்ப வருமானத்தை கொண்டிருக்கும் உயர்கல்வி மாணவர்களுக்கான கல்வி உதவிநிதி,  தமிழ்ப்பள்ளி மாணவர்களின் அறிவியல், புத்தாக்கத் திறன் நடவடிக்கை ஆகியவற்றுக்கு 20 லட்சம் வெள்ளி, இந்து, சீக்கிய  ஆலயங்களுக்காக 20 லட்சம் வெள்ளி, இந்திய தொழில் முனைவர்களை உருவாக்கும் நோக்கத்திற்காக 10 லட்சம் வெள்ளி, இந்திய சமூகத்தின் சமூக, பொருளாதார நடவடிக்கைகளுக்காக 5 லட்சம் வெள்ளி, தீபாவளி பெருநாள் காலங்களில் வழங்கப்படும் பற்றுச்சீட்டுகளுக்கு 20 லட்சம் வெள்ளி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

13 மில்லியன் வெள்ளியை உள்ளடக்கிய உதவித் திட்டங்கள் இந்திய சமுதயத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில் சிலாங்கூர் மாநில அரசு இந்தியர்களை ஒருபோதும் கைவிட்டதில்லை என்பதை இதன்மூலம் நிரூபணமாகிறது.

இதுதவிர்த்து அனைத்து இனத்தவர்களையும் உள்ளடக்கிய 4,000 வெள்ளிக்கும் குறைவான குடும்ப வருமானத்தை கொண்டிருப்போருக்கு இலவச குடிநீர் திட்டம், 60 வயதுக்கும் மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு பிறந்தநாள் பற்றுச்சீட்டு, 2000 வெள்ளிக்கும் குறைவான குடும்ப வருமானம் கொண்டுள்ள குடும்ப தலைவிகளை உள்ளடக்கிய ‘கிஸ்’ அட்டை திட்டம் என பல்வேறு திட்டங்களை மாநில பட்ஜெட் கொண்டுள்ளது என்று கணபதிராவ் மேலும் சொன்னார்.


No comments:

Post a Comment