Saturday 3 April 2021

டத்தோஶ்ரீ சரவணனுக்கு அமைச்சர் பதவியை கொடுத்தது பிரதமர் முஹிடினே

ரா.தங்கமணி

கிள்ளான்-

மஇகாவின் தேசிய துணைத் தலைவர் டத்தோஶ்ரீ எம்.சரவணனுக்கு அமைச்சர் பதவியை கொடுத்தது பிரதமர் டான்ஶ்ரீ முஹிடின் யாசினே. தேசிய முன்னணி அமைச்சர் பதவிக்கு டத்தோஶ்ரீ சரவணனின் பெயரை பரிந்துரை கூட செய்யவில்லை என்று மஇகாவின் தேசியத் தலைவர் டான்ஶ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

இன்று நடைபெற்ற மஇகாவின் 74ஆவது பொதுப் பேரவையில் பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியின் தலைவரான டான்ஶ்ரீ முஹிடின் யாசின் இயங்கலை வழி உரையாற்றியது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த டான்ஶ்ரீ விக்னேஸ்வரன்,  மஇகாவுக்கு  ஓர் அமைச்சர் பதவியை கொடுத்த டான்ஶ்ரீ முஹிடின் யாசினுக்கு நன்றி விசுவாசத்தை காட்டும் நோக்கிலேயே இந்த ஏற்பாடு செய்யப்பட்டது.

பக்காத்தான் ஹராப்பான் ஆட்சி கவிழ்க்கப்பட்டு பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணி அரசாங்கம் அமைந்தபோது அமைச்சரவையில் இடம்பெறுவோரின் தேமு பட்டியலில் மஇகாவின் ஒரே நாடாளுமன்ற உறுப்பினரான டத்தோஶ்ரீ சரவணனின் பெயர் இடம்பெறவில்லை.

ஆயினும் தமது அமைச்சரவையில் இந்தியர் பிரதிநிதித்துவம் இடம்பெறுவதை உறுதி செய்யும் வகையில் பிரதமர் டான்ஶ்ரீ முஹிடின் யாசின் சுய விருப்பத்தின் பேரிலே டத்தோஶ்ரீ சரவணனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டது. அதற்கு நன்றிக்கடனாகவே இன்றைய மாநாட்டில் பிரதமரின் சிறப்புரை இடம்பெற்றது என்று டான்ஶ்ரீ விக்னேஸ்வரன் மேலும் சொன்னார்.


No comments:

Post a Comment