Friday 2 April 2021

அரசியல் மேடைகளாக ஆலயங்கள் உருமாறி விடக்கூடாது- கணபதிராவ் வலியுறுத்து

ரா.தங்கமணி 

ஷா ஆலம்-

இந்தியர்களின் நலனில் அக்கறை காட்டும் சிலாங்கூர் மாநில அரசு இந்து ஆலயங்களின் மேம்பாட்டிற்காக இவ்வாண்டு வெ. 2.14 மில்லியன் நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது என்று அம்மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ. கணபதிராவ் தெரிவித்தார். 

கடந்த காலங்களில் வெ. 1 மில்லியன் நிதியும் பின்னர் வெ. 1.7 மில்லியன் நிதியும் வழங்கப்பட்டு வந்த நிலையில் இவ்வாண்டு வெ. 2.14 மில்லியன் வழங்கப்பட்டுள்ளது. 

ஆலயங்களின் மேம்பாட்டுக்காக வழங்கப்படும் இந்நிதியை கோபுரங்களை உயரே கட்டுவதில் மட்டும் கவனம் செலுத்தாமல் இந்திய சமூகத்தின் வளர்ச்சிக்கும் தனது பங்களிப்பை ஆலயங்கள் வழங்கிட வேண்டும். 

ஆலயங்கள் எப்போதும் சமய மையங்களாக விளங்கிட வேண்டுமே தவிர அரசியல் மேதைகளாக மாறிவிடக்கூடாது. 

யார், எவர்,  எந்த கட்சியை சேர்ந்தவர் என்ற பின்புலங்களை ஆராயாமல் அனைத்துத் தரப்பினருடனும் இணைந்து பணியாற்றும் பக்குவத்தை ஆலய நிர்வாகங்கள் ஏற்படுத்தி கொள்ள வேண்டும். 

அப்போதுதான் அனைத்துத் தரப்பினரையும் அரவணைத்துச் செல்லும் சமூக மையங்களாக ஆலயங்கள் திகழ்ந்திட முடியும் என்று இன்று சிலாங்கூர் மாநிலத்திலுள்ள ஆலயங்களுக்கு முதற்கட்டமாக மானியங்களை வழங்கும்  நிகழ்வில் உரையாற்றுகையில் கணபதிராவ் இவ்வாறு கூறினார். 

அதே வேளையில் கோவிட்-19 காலகட்டத்தில் வசதி குறைந்த மக்களுக்கு உணவுப் பொருட்களை வழங்கி தங்களது சமுதாய கடப்பாட்டை நிறைவு செய்த ஆலய நிர்வாகங்களுக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்வதாக அவர் மேலும் சொன்னார். 

இந்நிகழ்வில் 68 ஆலயங்களுக்கு காசோலைகளை கணபதிராவ் எடுத்து வழங்கினார்.

No comments:

Post a Comment