Thursday 22 October 2020

இந்தியர்களுக்கான உதவித் திட்டங்களில் சிலாங்கூர் மாநில அரசு என்றுமே முன்னோடி - கணபதிராவ்

ரா.தங்கமணி

ஷா ஆலம்-

இந்திய சமூகத்திற்கு அதிகமான ஒதுக்கீடுகளையும் மானியங்களையும் வழங்கி வருவதில் சிலாங்கூர் மாநில அரசு எப்போது முன்னோடியாக விளங்கி வருகிறது. ஆலயங்களுக்கு மட்டுமல்லாது  தமிழ்ப்பள்ளிகள், இந்திய மாணவர்கள் என பல்வேறு வகையில் இந்த உதவித் திட்டம் படர்ந்து கிடக்கிறது என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் தெரிவித்தார்.

வீ.கணபதிராவ்

இம்மாநிலத்திலுள்ள ஆலயங்களின் வளர்ச்சிக்காக இவ்வாண்டு 17 லட்சத்து 60 ஆயிரம் வெள்ளி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதில் 121 ஆலயங்களுக்கு 13 லட்சம் வெள்ளி வழங்கப்பட்ட நிலையில் மானிய கோரிக்கை விடுத்த 41 ஆலயங்களுக்கான 2 லட்சத்து 54 ஆயிரம் வெள்ளிக்கான காசோலை தமது அலுவலகத்தில் சம்பந்தப்பட்ட ஆலய தரப்பினர் பெற்றுக் கொள்ளலாம்.  பிகேபிபி நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணையினால் சம்பந்தப்பட்ட ஆலயங்களுக்கான மானியம் அலுவலகத்திலேயே வழங்கப்படுகிறது. எஞ்சிய ஆலயங்களின் விண்ணப்பங்கள் பரிசீலனையில் இருப்பதால் கூடிய விரைவில் அந்த மானியங்களும் விநியோகிக்கப்படும். 

ஆலயங்களுக்கு செய்யும்  உதவி தமிழ்ப்பள்ளிகளுக்கும் இந்திய மாணவர்களுக்கும் செய்யலாமே? என சில தரப்பினர் கேள்வி எழுப்பலாம். தமிழ்ப்பள்ளிகளையும் இந்திய மாணவர்களையும் சிலாங்கூர் மாநில அரசு ஒருபோதும் கைவிட்டதில்லை.

தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாட்டு நட வடிக்கைகளுக்காக 50 லட்சம் வெள்ளி ஒதுக்கீடு செய்யப்பட்டுகிறது. இந்நிதி பள்ளி நிர்வாகங்கள்  முன்வைக்கும் கோரிக்கைகளுக்கு ஏற்ப தேவையறிந்து வழங்கப்படுகிறது. 

கோப்புப் படம்

அதோடு தோட்டப் பாட்டாளி பிள்ளைகளின் கல்வி வளர்ச்சிக்கு உதவும் வகையில் வெ.2,000க்கும் குறைவான குடும்ப வருமானத்தைப் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு தலா 300 வெள்ளி பேருந்து கட்டணமாக வழங்கப்படுகிறது. இத்திட்டத்திற்காக 20 லட்சம் வெள்ளி ஒதுக்கப்பட்டுள்ள சூழலில் இவ்வாண்டு இந்நிதியை பெறும் மாணவர்களின் எண்ணிக்கை இவ்வாண்டு 3,500ஐ எட்டியுள்ளது.

அதுமட்டுல்லாது கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் உயர்கல்வி பயில்கின்ற 600க்கு அதிகமான மாணவர்களுக்கு நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. சிலருக்கு நிதியுதவி வழங்கப்பட்ட சூழலில் இன்னும் சிலரின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு அதுவும் கூடிய விரைவில் வழங்கப்படும். 

மேலும், ஆண்டுதோறும் யூபிஎஸ்ஆர் தேர்வில் சிறந்த மதிப்பெண்களைப் பெறும் மாணவர்களுக்கான பாராட்டு விழா இவ்வாண்டு கோவிட்-19 தொற்று காரணமாக நடத்த முடியாத சூழல் நிலவுகிறது. இதனை அடுத்தாண்டு நடத்துவதற்கு பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு இந்திய சமுதாயத்திற்கு ஆக்ககரமான நடவடிக்கைகளை சிலாங்கூர் மாநிலா அரசு முன்னெடுத்து வரும் நிலையில் இந்த உதவிகளை பெற விரும்பும் தரப்பினர் முறையான ஆவணங்களுடன் விண்ணப்பித்தால் உதவிகள் கிடைக்கப்பெறும். அதில் எவ்வித பாரபட்சமும் காட்டப்படுவதில்லை.

கோவிட்-19 வைரஸ் தொற்று பாதிப்பின்போது மக்கள் வீட்டுக்குள் முடங்கியபோது ஆலயங்களின் பங்களிப்பு இந்திய சமுதாயத்தைச் சென்றடைய வேண்டும் எனும் நோக்கில் மாநில அரசு அறிமுகப்படுத்திய 'அட்சயப் பாத்திரம்' திட்டத்தில் பங்கேற்று இந்திய மக்களுக்கு பல்வேறு வகையில் பொருளுதவிகள் வழங்கி உதவிய ஆலய நிர்வாங்களுக்கு தமது நன்றியை தெரிவித்துக் கொள்வதாக  கணபதிராவ் மேலும் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment