Thursday 9 July 2020

இரவோடு இரவாக ஶ்ரீ மதுரை வீரன் ஆலயம் உடைப்பு; இந்தியர்கள் கொந்தளிப்பு

அலோர் ஸ்டார்-

70 ஆண்டுகால வரலாற்றைக் கொண்டுள்ள அலோர் ஸ்டார், ஜாலான் ஸ்டேசன் அருகே இருந்த ஶ்ரீ மதுரை வீரன் ஆலயம் அதிகாலை வேளையில் உடைக்கப்பட்ட சம்பவம் இந்தியர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இன்று அதிகாலை வேளையில் அந்த ஆலயத்தை அலோர் ஸ்டார் மாநகராட்சி மன்ற அதிகாரிகள் உடைத்துள்ள சம்பவம் பெரும் கண்டனத்தை ஏற்படுத்தியுள்ளது.

இரவோடு இரவாக ஓர் ஆலயத்தை உடைக்க வேண்டிய அவசியம் என்ன ஏற்பட்டது? என்று சமூக ஊடகங்களில் பலர் கேள்வி எழுப்புகின்றன.

கெடா மாநிலத்தில் பக்காத்தான் ஹராப்பான் ஆட்சி கவிழ்ந்து பெரிக்காத்தான் நேஷனல் ஆட்சி அமைந்து இரு மாதங்கள் மட்டுமே கடந்துள்ள நிலையில் இந்தியர்களிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

கெடா மாநிலத்தில் தற்போது பாஸ் கட்சி ஆட்சி புரியும் சூழலில் இந்தியர்களின் பிரதிநிதியாக யாரும் இல்லாததால் இதுபோன்ற  அவலநிலை அரங்கேற்றப்படுகிறதா? எனும் கேள்வியும் இந்தியர்களிடையே எழுந்துள்ளது.

இதனிடையே, ஶ்ரீ மதுரை வீரன் ஆலயம்  உடைபட்ட சம்பவம் தனக்கு பேரதிர்ச்சி அளிப்பதாக கெடா மாநில மஇகா தொடர்புக்குழுத் தலைவர் டத்தோ எஸ்.ஆனந்தன் தெரிவித்தார்.


இந்த ஆலய விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் என்று கடந்த ஜூன் 30ஆம் தேதி மகஜர் வழங்கினோம். இவ்விவகாரம் குறித்து மாநில மந்திரி பெசார் விளக்கம் கோரப்படும் என்று அவர் சொன்னார்.

கேடிஎம் தொழிலாளர்களால் 1942ஆம் ஆண்டு இவ்வாலயம் இங்கு கட்டப்பட்டு வழிபாடு செய்யப்பட்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment