Wednesday 8 July 2020

சிறப்பு ஆலோசகர் பதவியை மஇகாவுக்கு வழங்குக- பொது இயக்கங்கள் கோரிக்கை

ரா.தங்கமணி

ஈப்போ-

பேரா மாநிலத்தில் மந்திரி பெசாரின் சிறப்பு ஆலோசகராக மஇகாவின் பிரதிநிதி நியமிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி  50க்கும் மேற்பட்ட சமூகநல இயக்கங்கள் பேரா மந்திரி பெசாரின் அலுவலகத்தில் இன்று மகஜரை சமர்ப்பித்தன.


இன்று மந்திரி பெசாரின் அலுவலகத்தில் திரண்ட குழுவுக்கு தலைமையேற்ற  டாக்டர் .ஜெயபாலன், தேசிய முன்னணி ஆட்சியின்போது சிறப்பு ஆலோசகர், சட்டமன்ற சபாநாயகர், சிறப்பு அதிகாரி ஆகிய பதவிகள் மஇகாவினருக்கு  வழங்கியது.

அப்பதவிகளின் மூலம் இந்திய சமுதாத்திற்கு தன்னால் ஆன சேவைகளை மஇகா மேற்கொண்டது.

தற்போது பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியில் அங்கம் வகிக்கும் மஇகாவுக்கு சிறப்பு ஆலோசகர்  பதவியை வழங்குவதற்கு இன்றைய மந்திரி பெசார் தயக்கம் காட்டுவது ஏன்?

மஇகாவுக்கு வழங்கப்பட்ட பதவிகளின் மூலம் இந்திய சமூக அமைப்புகளுக்கு நிதியுதவி, தமிழ்ப்பள்ளிகள் சார்ந்த பிரச்சினைகள், ஆலயப் பிரச்சினைகள், ஆலயங்களுக்கான நிதியுதவி, இந்தியர்களுக்கான வேலை  வாய்ப்புகள், சமூகநல உதவிகள்  என பல பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளன என்பதை மந்திரி பெசார் மறந்து விடக்கூடாது என்று ஜெயபாலன் வலியுறுத்தினார்.


அதோடு இந்தியர்கள் சார்ந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண இந்திய பிரதிநிதித்துவம் இருப்பதே சிறந்த தீர்வாக அமையும். அது மஇகா பிரதிநிதியாக அமைந்திருப்பதே  தேசிய அரசியல் நீரோட்டத்தில் வலுவானதாகவும் அமைந்திடும் என்று கார்த்திக் குறிப்பிட்டார்.

மேலும், இம்மாநிலத்திலேயே அதிகமான பொது இயக்கங்கள் உள்ள நிலையில் கோலாலம்பூரைச் சேர்ந்த பொது இயக்கத்தின் மூலம் மானியங்கள் வழங்கப்படுவதாக அறிகிறோம், எதற்காக வெளி மாநிலத்தைச் சேர்ந்த இயக்கத்தை வைத்து மானியங்கள் வழங்கப்பட வேண்டும் என்று அவர் கேள்வி எழுப்பினார்.

இவ்விவகாரத்தில் மாநில  மந்திரி பெசார் சிறந்ததொரு தீர்வை காண்பார் என்று தாங்கள் நம்புவதாக பொது இயக்கப் பிரதிநிதிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.

பொது இயக்கங்களின் மகஜரை மந்திரி பெசாரின் சிறப்பு அதிகாரி அசாட் சவ்வான் பெற்றுக் கொண்டார் என்று குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment