Sunday 27 January 2019

விவேகானந்தா தமிழ்ப்பள்ளி நிலத்தை உரிமையாக்கிக் கொள்வதா? வழக்கு தொடர்ந்தது வாரியக்குழு

ரா.தங்கமணி

பெட்டாலிங் ஜெயா-
பெட்டாலிங் ஜெயா விவேகானந்தா தமிழ்ப்பள்ளி அமைந்துள்ள நிலத்தை தமது பெயரில் மாற்றிக் கொண்ட கோலாலம்பூர் விவேகானந்தா ஆசிரமத்திற்கு எதிராக பள்ளி வாரியக்குழு நீதிமன்ற வழக்கை தொடுத்துள்ளது.

கடந்த 50  ஆண்டுகளாக (1959-209) பள்ளியின் மூன்று ஏக்கர் நிலம் பள்ளி பெயரிலேயே இருந்துள்ளது. ஆயினும் பள்ளி நில ஒப்பந்தம் காலாவதி ஆனதைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் பள்ளியின் நிலம் விவேகானந்தா ஆசிரமத்தின் பெயரில் மாற்றப்பட்டுள்ளது என்று பள்ளி வாரியக்குழுத் தலைவர் டாக்டர் செல்வம் செல்லப்பன் தெரிவித்தார்.

பள்ளி வாரியக்குழு 2016ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட போதிலும் இந்த நில ஒப்பந்த மாற்றம் 2012ஆம் ஆண்டில் நடந்துள்ளது. கோலாலம்பூர் விவேகானந்தா ஆசிரமம், பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் மூன்று முன்னாள் செயலவை உறுப்பினர்கள் ஆகியோர் கையொப்பமிட்டு இந்த பரிமாற்றம் நடைபெற்றது.

பள்ளியில் நான்கு மாடி கட்டட மேம்பாடு துரிதப்படுத்துவதற்காக இந்த பரிமாற்றம் செய்யப்பட்டது என தரவுகள் இருந்தபோதிலும் எந்தவொரு கட்டட மேம்பாடு வேலைகளையும் விவேகானந்தா ஆசிரமம் மேற்கொள்ளவில்லை.

அதோடு, கடந்த 2012இல் கல்வி அமைச்சு  6 மில்லியன் வெள்ளியை மூன்று பள்ளிகளுக்கு (பெட்டாலிங் ஜெயா விவேகானந்தா தமிழ்ப்பள்ளி, கோலாலம்பூர் விவேகானந்தா தமிழ்ப்பள்ளி, விவேகானந்தா இடைநிலைப்பள்ளி) ஆகியவற்றை வழங்கியதை வாரியக்குழு அறிந்துள்ளது.

1 வெள்ளி கட்டணத்தில் நடைபெற்றுள்ள நில பரிமாற்றம் முறையாக நடைபெறவில்லை என குறிப்பிட்ட அவர், பள்ளியின் நிலம் பள்ளிக்கே உரிமையாக்கப்பட வேண்டும். அதை ஒருபோதும் பிறர் உரிமை கொண்டாடக்கூடாது என்பதில் பள்ளி வாரியம் உறுதியாக உள்ளது.

2012இல் பள்ளியின் மேம்பாட்டிற்காக வழங்கப்பட்ட 6 மில்லியனிலுள்ள பகுதியை கோலாலம்பூர் விவேகானந்தா ஆசிரமம் பள்ளிக்கே கொடுக்க வேண்டும் என இந்த வழக்கில் கோரப்பட்டுள்ளதாக அவர் சொன்னார்.

கோலாலம்பூர் விவேகானந்தா ஆசிரமம், பெற்றோர் ஆசிரியர் சங்க மூன்று செயலவை உறுப்பினர்கள், சிலாங்கூர் மாநில நில உரிம பதிவு இலாகா ஆகிய 5 எதிர்தரப்பு வாதங்களுடன் இந்த நீதிமன்ற வழக்கு நடைபெறவுள்ளது.

மேலும், இவ்வழக்கில் பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கமும் உடன் வழக்கு தொடுத்தவராக 12.2.2019இல் பள்ளி வாரியத்துடன் அனுமதி கோரியுள்ளனர் என்று செல்வம்  செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

இந்த செய்தியாளர் சந்திப்பில் வாரியக்குழு துணைத் தலைவர் ஆர்.ஜெகா, பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் என்.ராஜேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment