Tuesday 15 January 2019

இருமுறை மட்டுமே ரயில் சேவை; இவ்வளவு பெரிய ரயில் நிலையம் இருந்தும் என்ன பயன்?

ரா.தங்கமணி

சுங்கை சிப்புட்-
கோலாலம்பூரிலிருந்து வருகை தரும் இதிஎஸ் எனப்படும் மின்சார ரயில் சேவை துரிதமாக செயல்படாததால்   பல்வேறு சிரமங்களை தாங்கள் எதிர்கொள்வதாக சுங்கை சிப்புட் குடியிருப்பாளர்கள் குறைபட்டுக் கொண்டனர்.

கோலாலம்பூரிலிருந்து பாடாங் பெசார் நோக்கி செல்லும் இதிஎஸ் ரயில் காலை, இரவு நேரம் என இரு முறை மட்டுமே இங்கு பயணிகளை ஏற்றுவதற்கு நிறுத்தப்படுகிறது.

முன்பு நான்கு முறை இங்கு நிறுத்தப்பட்டு பயணிகளை ஏற்றிச் சென்ற போதிலும் இப்போது இரு முறை மட்டுமே பயணிகள் ஏற்றுவதால் பெரும்பாலானோர் ஈப்போ ரயில் நிலையத்தை தங்களது நிறுத்த முனையமான தேர்ந்தெடுக்கின்றனர்.

தலைநகரில் வசிக்கும், பணியாற்றி வரும் எங்களது பிள்ளைகள்/உறவினர்கள் சுங்கை சிப்புட்டிற்கு வர வேண்டுமானால் ஈப்போ நிலையத்திலேயே இறங்க வேன்டிய கட்டாய சூழல் நிலவுகிறது.
ராமன்

இதனால் இங்கிருந்து ஈப்போவுக்கு  40 நிமிடங்கள் பயணம் செய்து அவர்களை ஏற்றி வர வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் என்று  தாமான் துன் சம்பந்தனைச் சேர்ந்த நா.உ.இராமன் கூறினார்.

பொதுவாக வேலை நேரம் முடிந்த பின்னரே ரயில் பயணத்தை பலர் மேற்கொள்கின்றனர். ஆனால் காலையிலும் இரவிலும் மட்டுமே சுங்கை சிப்புட்டிற்கு ரயில் சேவை விடுவதால் ஈப்போவிவிலேயே பிள்ளைகள் இறங்கி விடுகின்றனர்.
மணிராஜா

இரவு எத்தனை மணி ஆனாலும் அவர்களை சென்று ஏற்றி வர வேண்டும். இல்லையேல் வாடகை கார் கட்டணமே 50 வெள்ளி வரை செலுத்த வேண்டிய நிலை உள்ளது என்று கி.மணிராஜா குறிப்பிட்டார்.

எனது பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் கோலாலம்பூரில் உள்ளனர். அவர்கள் இங்கு வர வேண்டுமானால் ஈப்போவில் இறங்கிய பின்னர் தான் இங்கு வர வேண்டியுள்ளது.  சுங்கை சிப்புட்டிற்கு நேரடி சேவை விட்டிருந்தால் அவர்கள் இங்கேயே இறங்கி கொள்வர் என்று மூதாட்டி சு.ஜானகி கூறினார்.
திருமதி ஜானகி

கோலாலம்பூரிலிருந்து தொடங்கும் ரயில் சேவை பிற்பகல் 1.00 மணிக்கும் இரவு 8.50 மணிக்கு மட்டுமே நிறுத்தப்படுகிறது. இதனால் இந்த ரயில் சேவையை பயன்படுத்துவதைக் காட்டிலும் பெரும்பாலானோர் ஈப்போ ரயில் நிலையத்திலேயே இறங்கி விடுகின்றனர்.

சுங்கை சிப்புட்டை விட மக்கள் தொகையில் குறைவான எண்ணிக்கைக் கொண்ட கோலகங்சார் ரயில் நிலையத்தில் 20 முறை ரயில் நிறுத்தப்படுகின்றபோது சுங்கை சிப்புட்டில் 4 முறை என ரயிலை நிறுத்தி பயணிகளை ஏற்ற முடியாதா? என்று சுங்கை சிப்புட் மஇகா செயலாளர் கி.மணிமாறன் கேள்வி எழுப்பினார்.
கி.மணிமாறன்

இத்தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.கேசவன் ரயில் நிலைய அதிகாரிகளின் விளக்கத்தை மக்களுக்கு விளக்க வேண்டாம். மாறாக இருமுறை என உள்ள ரயில் சேவையை பல மடங்காக நீட்டிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மக்கள் பிரதிநிதி என்பதை மறந்து அதிகாரிகள் 'தபால் ஊழியராக' கேசவன் நடந்து கொள்ளக்கூடாது. மக்கள் பிரச்சினைகளை தீர்க்கத்தான் அவரை தங்களின் பிரதிநிதியாக மக்கள் தேர்ந்தெடுத்துள்ளனர். அதனை மறந்து விட வேண்டும்.
எஸ்.கேசவன்

பல லட்சம் வெள்ளி செலவு செய்து கட்டிய ரயில் நிலையம் மக்களுக்கு பயன்பாட்டுக்கு ஏற்புடையதாக அமையவில்லையென்றால் வீணாவது மக்கள் பணம்தான் என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என்று மணிமாறன் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment