Wednesday, 12 December 2018

மக்கள் பொறுமை காக்க வேண்டும்- டத்தோஶ்ரீ அன்வார்

கோலாலம்பூர்-
முந்தைய தேசிய முன்னணி அரசாங்கம் மேற்கொண்ட மக்கள் உதவித் திட்டங்களை போல தற்போதைய பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம் மேற்கொள்வதற்கு ஏதுவாக நாட்டின் பொருளாதாரம் வலுபெறும் வரையிலும் மக்கள் பொறுமை காக்க வேண்டும் என்று டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

நாட்டின் பொருளாதாரச் சூழலை கருத்தில் கொண்டே பல்வேறான மக்கள் நலத் திட்டங்கள் கட்டாயத்தின் பேரில் நிறுத்தி வைக்கப்பட்டது.

முன்பு நான் நிதியமைச்சராக பதவி வகித்தபோது நாட்டின் பொருளாதாரம் 9 விழுக்காட்டை எட்டியிருந்தது. ஆனால் இப்போது நாட்டின் பொருளாதார விகிதாச்சாரம் 45 விழுக்காட்டிலேயே உள்ளது.

பிரபலம் அடைய வேன்டும் என்பதற்காக தேசிய முன்னணி செய்தது போன்று நலத் திட்டங்களை மேற்கொள்ளலாம். அதனால் நாட்டின் கடன் மட்டுமே அதிகரிக்கும்.

நாட்டின் கடன் அதிகளவு இருப்பதையும் புதிய கடன் பெறுவதையும் நாம் விரும்பவில்லை என்று போர்ட்டிக்சன் நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

அருள் கந்தா கைது

கோலாலம்பூர்-
1எம்டிபி நிறுவனத்தின் முன்னாள் தலைவர்  அருள் கந்தாவை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் இன்று கைது செய்தது.

2016 பிப்ரவரியில் 1எம்டிபி நிறுவனத்தின் இறுதி கணக்கறிக்கையில் சில சாரம்சங்களை நீக்கியது தொடர்பில் இன்று காலை 9.45 மணியளவில் அவர் கைது செய்யப்பட்டார்.

அருள் கந்தா கைது செய்யப்பட்டுள்ளது உண்மைதான். நாளை காலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படும் வேளையில் முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப்புடன்  இவர் மீது குற்றஞ்சாட்டப்படவுள்ளது.

அருள் கந்தாவில் கைது நடவடிக்கையை காலை 10.35 மணியளவில் அவரின் வழக்கறிஞர்கள் உறுதிபடுத்தினர்.

Tuesday, 11 December 2018

சொத்துகளே இல்லை; எப்படி அறிவிப்பது? - வேதமூர்த்தி

கோலாலம்பூர்-
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திடம் (எம்ஏசிசி) அறிவிப்பதற்கு தன்னிடம் எவ்வித சொத்துகளும் இல்லை என்று பிரதமர் துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி அறிவித்துள்ளார்.

என்னிடம் சொத்துகள் இல்லை. என்னுடைய மாத வருமானத்தை மட்டுமே அறிவிக்கிறேன்.

என்னுடைய வாழ்நாள் முழுவதும் போராட்டத்திலேயே கழிந்து விட்டது. என்னுடைய வருமானம் அனைத்தும் ஏழ்மையிலுள்ள இந்திய சமுதாயத்தின் மேம்பாட்டிற்காகவே என்னுடைய வருமானம் செலவிடப்பட்டுள்ளது.

எவ்வித சொத்துடையும் என்னிடம் கிடையாது. 15 ஆண்டுகளாக நான் வழ்க்கறிஞர் தொழிலை மட்டுமே செய்து கொண்டிருக்கிறேன். சாதாரண நிலையிலேயே நான் உள்ளேன் என்று நாடாளுமன்ற வளாகத்தில் பேசும்போது வேதமூர்த்தி கூறினார்.

ஊராட்சி மன்றத் தேர்தல் சாத்தியமில்லை- துன் மகாதீர்

கோலாலம்பூர்-
ஊராட்சி மன்றத் தேர்தல் நடத்துவது சாத்தியம் இல்லாத ஒன்று என பிரதமர் துன் மகாதீர் கருத்து தெரிவித்துள்ளார்.

ஊராட்சி மன்றத் தேர்தல் நடத்துவது தவறானதும், வேறுபாடு உண்டாக்குவதாகவும் அமைந்து விடும்.

நகர்ப்புற சூழலும் உட்புறப் பகுதி சூழலும் வேறுபாடு நிறைந்தவை. இதனால் இனங்களுக்கிடையிலான வேறுபாடு உண்டாகலாம் என்று துன் மகாதீர் கூறினார்.

மக்களவையில் சிவராஜ் அமரலாம்- சபாநாயகர்


கோலாலம்பூர்-

மேல் முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பு வரும் வரையிலும் நாடாளுமன்றத்தில் அமர்வதற்கு கேமரன் மலை நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவராஜ் அனுமதிக்கப்படுவார் என்று மக்களவை சபாநாயகர் டத்தோ முகமட் அரிஃப் முகமட் யூசோப் தெரிவித்தார்.

தேர்தலின் போது பண முறைகேட்டு நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறி சிவராஜின் தேர்தல் வெற்றி செல்லாது என்று தேர்தல் நீதிமன்றம்  தீர்ப்பளித்தது. தேர்தல் நீதிமன்றத்தின் முடிவை எதிர்த்து சிவராஜ் மேல் முறையீடு செய்துள்ளார்.

இதனிடையே, கடந்த 5ஆம் தேதி மக்களவையிலிருந்து வெளியேறுமாறு சிவராஜுக்கு மக்களவை சபாநாயகர் உத்தரவிட்டார்.

மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பு வரும் வரையில் சிவராஜின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி செல்லுபடியாகும் என்பதால் அவர் மக்களவையில் அமரலாம் என்று டத்தோ முகமட் அரிஃப் கூறினார்.

அதிகார துஷ்பிரயோகம்; 2 மணிநேரம் நஜிப் கைது

கோலாலம்பூர்-

1எம்டிபி விவகாரம் தொடர்பான விசாரணைக்காக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திற்கு சென்ற முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக் கைது செய்யப்பட்ட 2 மணி நேரத்திற்கு பின்னர் ஆணையத்தின் உத்தரவாதத்தின் பேரில் விடுவிக்கப்பட்டார்.

பிரதமராக பதவி வகித்தபோது தமது அதிகாரத்தை பயன்படுத்தி 1எம்டிபி கணக்காய்வு அறிக்கையில் மாற்றம் செய்த குற்றஞ்சாட்டின் பேரில் நஜிப் கைது செய்யப்பட்டார்.

இன்று காலை 11.00 மணியளவில் கைது செய்யப்பட்ட டத்தோஶ்ரீ நஜிப் பிற்பகல் 1.21 மணியளவில் விடுவிக்கப்பட்டார்.

டத்தோஶ்ரீ நஜிப் இன்று விடுவிக்கப்பட்டாலும் 2009ஆம் ஆண்டு மலேசிய ஊழல் தடுப்பு சட்டத்தின் செக்‌ஷன் 23 (1)இன் கீழ் விசாரிக்கப்படுவார் என அறியப்படுகிறது.

Monday, 10 December 2018

சிலாங்கூர் மாநில ஜசெக தலைவரானார் கோபிந்த் சிங்

ரா.தங்கமணி

பெட்டாலிங் ஜெயா-
இன்று நடைபெற்ற சிலாங்கூர் மாநில ஜசெக தேர்தலில் தகவல் தொடர்பு, பல்லூடக அமைச்சர் கோபிந்த் சிங் மாநில தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

2018- 2020 வரைக்குமான நிர்வாக செயற்குழுவுக்கான தேர்தல் இன்று பெட்டாலிங் ஜெயா, சிவிக் சென்டரில் நடைபெற்றது.

இதில் துணைத் தலைவராக என் யோங் ஹியான் வா, உதவித் தலைவர்களாக இங் சுவி லிம், வீ.கணபதிராவ், செயலாளராக ரோனி லியூ, துணைச் செயலாளராக ஒங் கியான் மிங், பொருளாளராக இங் ஸி ஹான், துணை பொருளாளராக லீ சிங் ஹுங், நிர்வாகச் செயலாளராக பிர்யான் லாய், நிர்வாக துணைச் செயலாளராக தீ பொன் ஹோக், லாவ் வெங் சான் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

Sunday, 9 December 2018

2,000 ஏக்கர் நிலத்தில் வருமானம் ஈட்ட ஈராண்டுகள் ஆகலாம்- டத்தோ சகாதேவன்

கோ.பத்மஜோதி

ஈப்போ-
பேரா மாநில தமிழ்ப்பள்ளி, இந்திய மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காக ஒதுக்கப்பட்ட 2,000 ஏக்கர் நிலத்தில் நடவு செய்யப்பட்டுள்ள செம்பனை மரங்களின் மூலம் பெறப்படும் நிதி பள்ளிக்கு செலவிட இன்னும் ஈராண்டுகள் ஆகலாம் என்று பேரா மாநில இந்தியர் கல்வி அறவாரியத்தின் வாரியக்குழு உறுப்பினர் டத்தோ ப.சகாதேவன் தெரிவித்தார்.

2015ஆம் ஆண்டில் இங்கு செம்பனை மரங்கள் நடப்பட்ட நிலையில் தற்போது மூன்றாண்டுகள் மட்டுமே நிறைவு பெற்றுள்ளது. செம்பனை மரங்கள் நல்ல விளைச்சலை கொடுத்து அதன் மூலம் லாபம் ஈட்ட ஐந்தாண்டு காலம் பிடிக்கும் என்பதால் இன்னும் ஈராண்டுகள் நாம் பொறுத்திருக்க வேண்டும்.

ஐந்தாண்டுகளுக்கு பின்னர் கிடைக்கப் பெறும் வருமானம் மூலம்  தமிழ்ப்பள்ளிகளுக்கும் இந்திய மாணவர்களுக்கும் நாம் செலவிட முடியும். அதன் பின்னர் 20-25 ஆண்டுகளுக்கு இம்மரங்களின் மூலம் நல்ல லாபத்தை ஈட்ட முடியும்.

இந்த 2,000 ஏக்கர் நிலத்தில் 1,700 ஏக்கரில் செம்பனை மரங்களை நடவு செய்து
தேசிய நில நிதி கூட்டுறவு சங்கம் பராமரித்து வருகிறது என்று அதன் தலைமை நிர்வாகியுமான டத்தோ சகாதேவன் கூறினார்.

சர்ச்சைகள் வேதனையளிக்கிறது

இந்த நில விவகாரம் தொடர்பில் பல்வேறு சர்ச்சைகள் எழுப்பப்பட்டு வருவது தேசிய நில நிதி கூட்டுறவு சங்கத்திற்கு நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதாக இருந்தாலும் அதன் மூலம் பெரிய பாதிப்புகள் எதனையும் நாம் எதிர்கொள்ளவில்லை.

ஏனெனில் இவ்விவகாரம் தொடர்பில் வாரியக்குழுவில் கலந்து பேசுவதோடு ஆண்டுக்கூட்டத்தில் பேராளர்களுக்கு முறையான விளக்கம் அளிக்கப்படுகிறது.

இதனால் தேசிய நில நிதி கூட்டுறவு சங்கத்தில் இதுவரை எவ்வித பிரச்சினைகளும் நிலவவில்லை என்றாலும் சர்ச்சைகள் பெரும் வேதனை அளிக்கிறது என்று அவர் சொன்னார்.

ஐசெர்ட்-க்கு எதிரான பேரணியை அமைதியாக நடத்துங்கள்- பிரதமர்

கோலாலம்பூர்-

ஐசெர்ட் சாசனத்திற்கு எதிராக நடத்தப்படும் பேரணியை அமைதியான முறையில் நடத்துங்கள் என்று பிரதமர் துன் மகாதீர் வலியுறுத்தியுள்ளார்.

இன்று நடைபெறவுள்ள ஐசெர்ட் எதிரான பேரணியை அரசாங்கம் தடுத்து நிறுத்த விரும்பவில்லை. ஐநாவின் ஐசெர்ட் பிரகடனத்தை
அங்கீகரிக்கக்கூடாது எனும் நோக்கில் இந்த பேரணி நடத்தப்படுகிறது.

எனினும் ஐசெர்ட் பிரகடனத்தை அரசு தள்ளி வைத்து பாராட்டி நன்றி கூறவே இந்த தாங்கள் இந்த பேரணியை நடத்துவதாக ஏற்பாட்டாளர்கள் கூறியிருக்கும் நிலையில் அந்த முடிவை பாராட்டுவதாக துன் மகாதீர் கூறினார்.

Friday, 7 December 2018

2,000 ஏக்கர் நிலத்தில் தில்லு முல்லுகளா? ஆதாரம் இல்லாமல் பேசாதீர் - வாரியக்குழு சாடல்

ரா.தங்கமணி

ஈப்போ-
தமிழ்ப்பள்ளி, இந்திய மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட 2,000 ஏக்கர் நில விவகாரத்தில் எவ்வித தில்லு முல்லும் நடைபெறவில்லை; ஆதாரம் இல்லாமல் குறை கூற வேண்டாம் என்று பேரா மாநில இந்தியர் கல்வி மேம்பாட்டு அறவாரியம் அறிவித்துள்ளது.

செம்பனை மரங்களை பயிரிட்டு அதன் மூலம் கிடைக்கப் பெறும் வருமானத்தின் மூலம் இம்மாநிலத்திலுள்ள தமிழ்ப்பள்ளிகளுக்கும் இந்திய மாணவர்களுக்கும் செலவிடுவதற்கு இந்நிலம் ஒதுக்கப்பட்டு அதை இவ்வாரியம் பராமரிக்கிறது.
இந்த 2,000 ஏக்கர் நிலத்தில் தேசிய நில நிதி கூட்டுறவு சங்கம் செம்பனை மரங்களை நடவு செய்துள்ளது. இந்நிலத்தை செப்பனிட்டு மரங்களை நடவு செய்வதற்கான செலவுத் தொகையாக 15 மில்லியன் வெள்ளியை   கூட்டுறவு சங்கத்தின்  துணை நிறுவனமான NALFIN Realties Sdn.Bhd. வழங்கியுள்ளது என்று அவ்வாரியத்தின் தலைவர் முனியாண்டி தெரிவித்தார்.

இந்த வாரியத்தில் உள்ள எந்தவொரு உறுப்பினரும் கூட்டுறவு சங்கத்தினரும் எவ்வித வருமானமும் பெறாமல் சொந்த செலவிலேயே சமூகச் சேவையின் அடிப்படையில் மேற்கொண்டு வருகிறோம்.

இந்நிலையில் இவ்வாரியத்தில் தில்லு முல்லு நடப்பதாக புந்தோங் சட்டமன்ற உறுப்பினர் ஆதி.சிவசுப்பிரமணியம் சட்டமன்றக் கூட்டத்தில் பேசியிருப்பதோடும் தில்லு முல்லு நடந்திருப்பதாக குற்றஞ்சாட்டியுள்ளது வேதனையளிக்கிறது.

சிவசுப்பிரமணியம் உண்மையில் அக்கறை கொண்டவரா?

2,000 ஏக்கர் நில விவகாரத்தில் சிவசுப்பிரமணியம் உண்மையில் அக்கறை கொண்டவரா? என்ற கேள்வி எழுகிறது.

14ஆவது பொதுத் தேர்தலுக்குப் பின்னர் பேரா மாநில ஆட்சியை பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி கைப்பற்றிய பின்னர் அதன் ஆட்சிக்குழு உறுப்பினராக சிவநேசன் பொறுப்பேற்றார். அவரின் பதவிக்கு மதிப்பளிக்கும் வகையில் கடந்த அக்டோபர் 23ஆம் தேதி வாரியக்குழு உறுப்பினர்கள் மரியாதை நிமித்தம் சந்தித்தோம்.

இந்த சந்திப்பு குறித்து சிவநேசன் பாசீர் பெடாமார் சட்டமன்ற உறுப்பினர் தெரான்ஸ் நாயுடு, புந்தோங் சட்டமன்ற உறுப்பினர் ஆதி.சிவசுப்பிரமணியம் ஆகியோரை அழைத்திருந்தார்.

ஆனால் இந்த சந்திப்பில் தெரான்ஸ் நாயுடு கலந்து கொண்டபோது சிவசுப்பிரமணியம் மட்டும் ஏன் கலந்து கொள்ளவில்லை?, எங்களது விளக்கங்களை ஏன் நேரடியாக பெற்றுக் கொள்ள முனையவில்லை?

இந்த 2,000 ஏக்கர் நில விவகாரம் தொடர்பில் முழுமையான விளக்கங்களையும் ஆவணங்களையும் ஆட்சிக்குழு உறுப்பினர் அ.சிவநேசனிடம் வழங்கி விட்டோம்.

உங்களுக்கு (சிவசுப்பிரமணியம்) ஏதாவது விளக்கம் வேண்டுமானால் சிவநேசனிடம் நேரடியாக பெற்றுக் கொள்ளுங்கள். அனைவரும் ஒரே கட்சியில் ஒரே பக்காத்தான் கூட்டணியில் தானே இடம்பெற்றுள்ளீர்கள். உண்மையை கேட்டு தெரிந்து  கொள்வதில் என்ன தயக்கம்? என்று முனியாண்டி கேள்வி எழுப்பினார்.

தமிழ்ப்பள்ளி, இந்திய மாணவர்களின் மேம்பாட்டிற்காக உருவாக்கப்பட்ட இந்த  வாரியத்தில் எவ்வித தில்லு முல்லுகளையும் செய்ய வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை.

இது தொடர்பில் சட்டமன்றத்தில் பேசிய சிவசுப்பிரமணியத்திற்கு வெளியில் பொதுநிலையில் பேச துணிச்சல் உண்டா? அவ்வாறு அவர் பேசினால் எத்தகைய நடவடிக்கை எடுக்க முடியும் என்பது எங்களுக்கு தெரியும் என்று அவர் மேலும் சொன்னார்.

இந்த செய்தியாளர் சந்திப்பில் வாரியக்குழு உறுப்பினர்கள் டான்ஶ்ரீ எஸ்.வீரசிங்கம், டத்தோ ப.சகாதேவன், டத்தோ மாரிமுத்து, நாச்சிமுத்து, சட்ட ஆலோசகர் டத்தோ எஸ்.தங்கேஸ்வரி ஆகியோர் பங்கேற்றனர்.

Thursday, 6 December 2018

தேமு கூட்டணியை கலைக்கச் சொல்வது அநாகரீகமானது- வீரன் சாடல்


ரா.தங்கமணி

ஈப்போ-
நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலில் ஆட்சி அதிகாரத்தை இழந்த தேசிய முன்னணி கூட்டணியை கலைக்குமாறு மசீச கோரிக்கை விடுப்பது ஏற்புடையதல்ல என்று மஇகா மத்திய செயலவை உறுப்பினர் மு.வீரன் குறிப்பிட்டார்.

61 ஆண்டுகாலமாக நாட்டை வழிநடத்திய தேசிய முன்னணி தற்போது ஆட்சி அதிகாரத்தை இழந்து விட்ட சூழலில் இக்கூட்டணியை கலைத்து விடுமாறு கோரிக்கை விடுப்பது ஏற்புடையதாகாது.

முன்பு எதிர்க்கட்சியாக இருந்த பக்காத்தா ஹராப்பான் கூட்டணி இன்று ஆட்சி அதிகாரத்தில் இருக்கிறது. இதே போன்று தற்போது எதிர்க்கட்சியாக உள்ள தேசிய முன்னணியும் மீண்டும் ஆட்சி அமைக்கும்.

தேமு கூட்டணியில் இடம்பெற்றிருப்பது மசீசவுக்கு பிடிக்கவில்லையென்றால் கூட்டணியில் வெளியேறலாம். அதற்காக கூட்டணியை கலைக்கச் சொல்லக்கூடாது. ஏனெனில் இக்கூட்டணியில் எங்களது கட்சியும் (மஇகா) இடம்பெற்றுள்ளது. அதற்கு மதிப்பளிக்க வேண்டும்.

எதிர்க்கட்சியாக இருக்கும்போது நம்முன்னே உள்ள சவால்களை எதிர்கொண்டு மீண்டும் தேமுவை ஆட்சியில் அமர வைப்பரதற்கான வழிவகையை நாம் கண்டறிய வேண்டும். அதனை விடுத்து  கூட்டணியை கலைத்து விடுமாறு கோரிக்கை விடுப்பதெல்லாம் ஏற்புடையது அல்ல. அதனை நாம் ஒருபோதும் மறந்து விடக்கூடாது.

தேசிய முன்னணிக்கென்று ஒரு நீண்ட வரலாறு பாரம்பரியம் உண்டு. இக்கூட்டணியை கலைப்பதனால் அந்த வரலாறும் அழிந்து போகலாம் என்று வீரன் வலியுறுத்தினார்.

ஐசெர்ட் பேரணியில் தேமு பங்கேற்கக்கூடாது - மணிமாறன் வலியுறுத்து

ரா.தங்கமணி

சுங்கை சிப்புட்-
ஐசெர்ட் சாசனத்திற்கு எதிராக நடத்தப்படும் பேரணிக்கு தேசிய முன்னணி (தேமு) ஆதரவு அளிக்கக்கூடாது என்று சுங்கை சிப்புட் மஇகா செயலாளர்  கி.மணிமாறன் தெரிவித்தார்.

61 ஆண்டுகளாக நாட்டை ஆட்சி புரிந்த தேமு எந்தவொரு பேரணியையும் அங்கீகரித்ததில்லை; அதற்கு அனுமதியும் கொடுக்கவில்லை.

இப்போது ஆளும் பக்காத்தான் அரசாங்கத்திற்கு எதிராக தேசிய முன்னணி ஐசெர்ட் பேரணியை ஆதரிப்பதும் அதில் பங்கேற்பதும் நமது பாரம்பரியத்திற்கு ஏற்புடையதல்ல.

மேலும், பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம் அந்த ஐசெர்ட் சாசனத்தில் கையெழுத்திடாது என கூறியுள்ள போதிலும் இந்த பேரணி நடத்தப்படுவது அவசியமற்றதாகும்.

முன்பு தேமு ஆட்சியில் இருந்தபோது ஐநா சபையுடன் நல்ல நட்புறவு கொண்டிருந்த சூழலில் இப்போது ஐசெர்ட் சாசனத்திற்கு எதிரான பேரணியில் பங்கேற்கக்கூடாது என்று மணிமாறன் குறிப்பிட்டார்.

Wednesday, 5 December 2018

சீபில்ட் ஆலய விவகாரத்தில் மாநில அரசு நடுநிலையாளரே- மந்திரி பெசார்

ஷா ஆலம் -
சுபாங் ஜெயா, யுஎஸ்ஜே 25, ஶ்ரீ மகா மாரியம்மன் ஆலய இடமாற்ற விவகாரத்தில் சிலாங்கூர் மாநில அரசு நடுநிலையாளராக மட்டுமே செயல்படுகிறது என்று மாநில மந்திரி பெசார் அமிருடின் சாரி தெரிவித்தார்.

இவ்விவகாரத்தில் அனைத்துத் தரப்பினரும் மனநிறைவு கொள்ளும் வகையில் சிறந்த தீர்வு  அடுத்த வாரம் அறிவிக்கப்படும்.

இவ்வாலய இடமாற்றம் தொடர்பில் எந்த தரப்பும் தங்களின் கருத்துகளை தெரிவிக்க முன்வரலாம். ஆயினும் இவ்விவகாரம் தொடர்பில் நேற்றும் இன்றும் நடத்தப்பட்ட கலந்துரையாடலில் ஒரு சுமூகமான தீர்வு கிடைக்கப் பெறும் என்பதால் சம்பந்தப்பட்ட தரப்பினர் பொறுமை காக்குமாறு அவர் கேட்டுக் கொண்டார்.

சட்டவிதிகளின்படியே இவ்விவகாரத்திற்கு தீர்வு காணப்பட வேண்டும் என்பதால் அதற்கு அனைத்துத் தரப்பினம் ஒத்துழைக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.