Tuesday, 9 July 2019

இந்தியர்களுக்கான ‘ஒற்றை தலைமை’ யார்? பதிலளிக்குமா பக்காத்தான் ஹராப்பான்?

ரா.தங்கமணி

கோலாலம்பூர்-
14ஆவது பொதுத் தேர்தல் முடிந்து பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி ஆட்சியமைத்து ஓராண்டை நிறைவு செய்து இரண்டாம் ஆண்டில்  காலடி எடுத்து வைத்து இரு மாதங்களை கடந்து விட்டது.
ஆயினும் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி சுற்றி முன்வைக்கப்பட்டிருக்கும் பல கேள்விகளுக்கு விடை காண முடியாத சூழலில் மிக முக்கியமான கேள்விக்குக்கூட பதில் கிடைக்காமல் காத்துக் கொண்டிருக்கும் அவலநிலை மலேசிய இந்தியர்களுக்கே உரித்தானது போல.

‘பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கத்தில் இந்தியர்களை பிரதிநிதிக்கக்கூடிய தலைவர் யார்?’ என்ற கேள்வியே அது.

ஓராண்டுகால ஆட்சிக்குப் பின்னரும் இந்நாட்டிலுள்ள இந்திய சமுதாயத்தை பிரதிநிதிக்கக்கூடிய ‘ஒற்றை தலைமை’ யார் என்பது இன்னமும் முடிவு செய்யப்படாதது வேதனைக்குரிய ஒன்றாகும்.

கடந்த 60 ஆண்டுகால தேசிய முன்னணி ஆட்சியின்போது மலேசிய இந்தியர்களின் பிரதிநிதியாக மலேசிய இந்தியர் காங்கிரஸ் (மஇகா) தலைமை வகித்து வந்தது. இந்தியர்களின் பிரதிநிதி நாங்கள்தான் என்ற ஒற்றை சொல்லுக்காகவே பல ஏளனங்களுக்கும் விமர்சனங்களுக்கும் இக்கட்சி ஆளானது.

தமிழ்ப்பள்ளி தொடங்கி ஆலயம், பொருளாதாரம், குடியுரிமை, சமூக நலன் என சுடுகாடு வரையிலும் இந்தியர்கள் எதிர்நோக்கிய பல பிரச்சினைகளை தங்களது தலையின் மேம் போட்டுக் கொண்ட மஇகாவும் அதன் தலைவர்களும் அன்றைய எதிர்க்கட்சியினரின் (இன்றைய ஆளும்கட்சியினர்) பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு ஆளானதோடு மக்களின் வெறுப்புகளையும் சம்பாதிக்க நேர்ந்தது. அதன் விளைவாகவே கடந்த மூன்று தவணைகளாக பொதுத் தேர்தலில் தோல்வியை சந்தித்து இன்று ஆட்சி அதிகாரத்தையும் இழந்து நிற்கிறது.

மஇகாவின் ஒரு சில நடவடிக்கைகள் தோல்வியை தழுவியிருந்தாலும் இந்தியர் சார்ந்த பல நடவடிக்கைகளில் மஇகாவின் கை ஓங்கியிருந்ததை யாரும் மறுக்க முடியாது. யானைக்கே அடி சறுக்கும்போது மஇகா மட்டும் இதில் விதிவிலக்காகி விட முடியுமா?

இந்தியர்களை பிரதிநிதித்து பல்வேறு குற்றச்சாட்டுகளையும்  தாங்கி கொண்ட மஇகாவே தோல்வியை சந்திக்கும் போது பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியில் இந்தியர்களை பிரதிநிதித்து 4 அமைச்சர்கள், 1 துணை அமைச்சர் பதவி வகிக்கும் நிலையில் இந்தியர்களுக்கான பிரதிநிதி யார்? என்ற கேள்வி இன்னமும் தொடர்ந்துக் கொண்டிருக்கிறது.

அண்மையில் நடைபெற்ற மஇகாவின் மத்திய செயலவைக்  கூட்டத்திற்குப் பின்னர் பேசிய அதன் தேசியத் தலைவர் டான்ஶ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன், பக்காத்தான் ஹராப்பானில் இந்தியர்களை பிரதிநிதிக்கும் தலைவர் யார்? என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
தற்போதுள்ள நான்கு அமைச்சர்களில் குலசேகரன், சேவியர் ஜெயகுமார், கோபிந்த் சிங், துணை அமைச்சர் சிவராசா ஆகியோர் பல இன கட்சிகளின் பிரதிநிதிகள் ஆவர். 

இவர்களால் இக்கட்சியில் இந்தியர்களுக்கு மட்டும் குரல் கொடுக்க முடியாது. பல இனத்தவர்களையும் பார்த்துக் கொள்ள வேண்டிய பொறுப்புணர்வு உண்டு. அமைச்சர் எனும் ரீதியில் இந்தியர் சார்ந்த விவகாரங்கள் தொட்டு கேள்வி எழுப்பினால் ‘இது என் அமைச்சுக்கு உட்பட்டதல்ல; நீங்கள் சம்பந்தப்பட்ட அமைச்சரை பாருங்கள்’ என மக்களை அலைகழிக்க வைக்கப்பட்ட சம்பவங்களும் நிகழாமல் இல்லை.

ஹிண்ட்ராஃப் போராட்டத்தின் வழி தன்னை இந்திய சமுதாயத்தின் போராளி என நிலைநிறுத்தி இன்று அமைச்சர் பதவியில் அமர்ந்திருக்கும் பொ.வேதமூர்த்தி இந்திய சமுதாயத்தின் தலைவராக அங்கீகரிக்கப்படுவாரா? என்ற கேள்விக்கும் சிக்கல் எழாமல் இல்லை.

தற்போது செனட்டராக நியமனம் செய்யப்பட்டு அதன்வழி அமைச்சராக பதவி வகிக்கும் வேதமூர்த்தியின் பதவிக்காலம் இன்னும் ஓராண்டு காலத்தில் முடிவு பெறுமா? அல்லது அடுத்த  மூன்றாண்டுகளுக்கு செனட்டர் பதவி நீட்டிக்கப்படுமா? என்பதும் கேள்விக்குறியே.

பக்காத்தான் ஹராப்பானில் இந்தியர்களுக்கான கட்சியை ஆரம்பிப்பதாக சொன்ன வேதமூர்த்தி, செனட்டர் பதவி இல்லாத நிலையில் இந்தியர் சார்ந்த அரசியல் கட்சியை வைத்துக் கொண்டு எவ்வாறு இந்தியர்களின் பிரச்சினைகளை தீர்க்க முடியும்? என்ற டான்ஶ்ரீ விக்னேஸ்வரனின் கேள்வியிலும் ஆயிட்ரம் அர்த்தங்கள் புதைந்துள்ளது.
இந்தியர்களின் பல பிரச்சினைகளை மையமிட்டு 14ஆவது பொதுத் தேர்தலில் சூறாவளியாய் சுழன்று 80 விழுக்காட்டுக்கும் அதிகமான இந்தியர் வாக்குகளை பெற்று ஆட்சி கட்டிலில் அமர்ந்திருக்கும் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியில் இந்தியர்களுக்கு தலைமை தாங்குகின்ற ‘ஒற்றை தலைமை’  யார் என்ற கேள்விக்கு அடுத்த பொதுத் தேர்தலுக்குள் விடை கிடைத்து விடுமா?

இந்த கேள்வி டான்ஶ்ரீ விக்னேஸ்வரனுடையது மட்டுமல்ல; பக்காத்தான் ஹராப்பான் கூட்டணிக்கு வாக்களித்தும்/ வாக்களிக்காமலும் அரசாங்கத்தின் தயவை எதிர்பார்த்து  காத்துக் கொண்டிருக்கும் சராசரி ஒவ்வோர் இந்தியர்களின் மனதுக்குள்ளும் புகைந்து கொண்டிருக்கும் கேள்வியாகும் என்பதை பக்காத்தான் ஹரப்பான் தலைமை மறந்து விடக்கூடாது.

இடைநிலைப்பள்ளிகளில் செந்தமிழ் விழா; மாநில அரசே ஏற்று நடத்த நடவடிக்கை எடுக்கப்படும்- கணபதிராவ்

ரா.தங்கமணி

ரவாங்-
இனி ஆண்டுதோறும் நடத்தப்படும் இடைநிலைப்பள்ளி மாணவர்களுக்கான செந்தமிழ் விழாவை இனி மாநில அரசே ஏற்று நடத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் தெரிவித்தார்.
தமிழ்ப்பள்ளிகளில் தமிழ்மொழி சார்ந்த நிகழ்வுகள் இயல்பாகவே நடத்தப்படும். ஆனால் இடைநிலைப்பள்ளிகளில் மாணவர்களுக்கு தமிழ்மொழி சார்ந்த நிகழ்வுகள் நடத்தப்படுவது மிகக் குறைவே ஆகும்.

தங்களுக்காக ஏற்பாடு செய்யப்படும் மொழி சார்ந்த நிகழ்வுகளில் மாணவர்கள் பங்குக் கொண்டு அதற்கான தளங்களை சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தாமான் டேசா-2 கன்ட்ரி ஹோம்ஸ் இடைநிலைப்பள்ளியில் நடைபெற்ற மாநில அளவிலான செந்தமிழ் விழாவின் நிறைவு விழாவில் உரையாற்றியபோது கணபதிராவ் வலியுறுத்தினார்.

இவ்வாண்டு செந்தமிழ் விழா சிறப்புற நடத்தேறுவதற்கு மாநில அரசின் மானியம் கிடைப்பதற்கு உதவியதாக கூறிய அவர், இவ்விழாவை சிறப்பாக ஏற்பாடு செய்த விழா ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் சுந்தரமூர்த்தி தலைமையிலான குழுவினரையும் கணபதிராவ் வெகுவாக பாராட்டினார்.

200க்கும் மேற்பட்ட மாணவர்களும் ஆசிரியர்களும் கலந்து கொண்ட இவ்விழாவின் ஒட்டுமொத்த வெற்றியாளராக கிள்ளான் மாவட்டம் சுழற்கிண்ணத்தை தட்டிச் சென்றது.

Monday, 8 July 2019

16 வயது இளைஞன் கொலை- சகோதரி- காதலன் கைது

தைப்பிங்-
பிளாஸ்டிக் பையில் சுற்றப்பட்ட நிலையில் இந்திய ஆடவரின் சடலம் ஒன்று  தாமான் கிரின்வியூ குடியிருப்புப் பகுதியின் சாக்கடையில் கண்டெடுக்கப்பட்டது.
16 வயது மதிக்கத்தக்க அவ்விளைஞன் காணாமல் போனதாக கடந்த வெள்ளிக்கிழமை சம்பந்தப்பட்ட குடும்பத்தினர் போலீஸ் புகார் செய்திருந்த நிலையில் இன்று நண்பகல் 12.20 மணியளவில் அவ்வாடவனின் சடலம் பொதுமக்களால் கண்டெடுக்கப்பட்டதாக தைப்பிங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ஒஸ்மான் மாமாட் தெரிவித்தார்.

இச்சம்பவன் தொடர்பில் முதற்கட்ட விசாரணையை தொடங்கிய போலீசார், மரணமடைந்த இளைஞரின் 14 வயது சகோதரியையும் அவரின் காதலனையும் கைது செய்துள்ளனர்.

அவ்விளைஞனை கொலை செய்ததை இருவரும் ஒப்புக் கொண்டதாகவும் கொலைக்கான காரணம் விசாரணை செய்யப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் சொன்னார்.

Sunday, 7 July 2019

வளர்த்து விட்டவரின் மீதே சீறி பாய வேண்டாம்- வேதமூர்த்தியை சாடினார் டான்ஸ்ரீ விக்கி

ரா.தங்கமணி

கோலாலம்பூர்-
பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி அரசாங்கத்தில் செனட்டர் பொ.வேதமூர்த்தி அமைச்சராக பதவி வகிப்பதற்கு மலேசிய நண்பன் நாளிதழ் மிகப் பெரிய பங்கை வகித்தது. ஆனால் இன்று ஆட்சி அதிகாரத்தில் இருக்கும்போது கேள்வி எழுப்பினால் கீழறுப்பு வேலை செய்வதாக குற்றஞ்சாட்டுவது சிறுபிள்ளைத்தனமானது என்று மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் குறிப்பிட்டார்.

ஹிண்ட்ராஃப் காலம் தொட்டு தேமுவை மஇகாவையும் விமர்சித்து குறை சொல்லி அரசியல் நடத்திய உங்களின் (வேதமூர்த்தி) வளர்ச்சிக்கு அடித்தளமாக இருந்தது மலேசிய நண்பன் நாளிதழ். உங்களின் குற்றச்சாட்டுகளை எல்லாம் முதல் பக்கத்தில் அச்சிட்டு சமுதாயத்தில் உங்களை ஹீரோவாக உருவாக்கி விட்டதற்கு மலேசிய நண்பனின் பங்கும் உண்டு.

அன்று மஇகாவையும் தேமுவையும் விமர்சித்தபோது தேவைபட்ட அந்நாளிதழ் இன்று உங்களை கேள்வி கேட்கும்போது கீழறுப்பு வேலை செய்வதாக குற்றஞ்சாட்டுவது நியாயமானதா?

இன்று ஆட்சி அதிகாரத்தில் உள்ள அமைச்சர் பொறுப்பில் உள்ளீர்கள் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் மீது விழும் விமர்சனங்களுக்கும் குற்றச்சாட்டுகளுக்கு உரிய பதிலை வழங்குவதை விட்டு நாளிதழ் மீது குற்றச்சாட்டுகளை முன்வைக்க வேண்டாம். உங்களின் வளர்ச்சிக்கு வித்திட்ட மலேசிய நண்பன் நாளிதழ் மீதே சீறி பாய வேண்டாம் என்று நேற்று நடைபெற்ற மஇகா மத்திய செயலவைக் கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

Friday, 5 July 2019

‘மித்ரா’வுக்கு எதிராக கீழறுப்பு வேலைகள்- குமுறும் வேதமூர்த்தி

கோலாலம்பூர்-

‘மித்ரா’ மீதும் தம்முடைய அமைச்சின் மீதும் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை சுமத்தி வரும் தமிழ் நாளிதழ் ஒன்று இந்திய சமுதாயத்திற்கான ஆக்கப்பூர்வப் பணியை செய்யவிடாமல் தொடர்ந்து கீழறுப்பு வேலையை செய்து வருவதாக பிரதமர் துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி குற்றஞ்சாட்டினார்.
கடந்த காலத்தை போல் இல்லாமல் முற்போக்குச் சிந்தனையுடன் மிக மிக நிதானமாக திட்டமிட்டு நான்காவது தொழில் புரட்சிக்கு ஏற்ப மலேசிய இந்திய இளைஞர்களுக்கு உரிய பயிற்சி அளித்து அவர்களுக்கு உள்நாட்டு அளவிலும் பன்னாட்டு அளவிலும் வர்த்தக வாய்ப்பை ஏற்படுத்தவும் இளம் தொழில் முனைவர்களை உருவாக்கவும் முயற்சிகள் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் அதற்கெல்லாம் குந்தகம் ஏற்படுத்தும் விதமாக சம்பந்தப்பட்ட நாளிதழ் செய்திகளை வெளியிட்டு  நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கத்தின் மீது இந்திய சமுதாயத்திற்கு வெறுப்பு ஏற்படும் அளவிற்கு செயல்படுகிறது. இது ஓர் அப்பட்டமான கீழறுப்பு வேலை என்று வேதமூர்த்தி தம்முடைய அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Thursday, 4 July 2019

இளையோர் வயது வரம்பு 40இல் இருந்து 30ஆக குறைப்பு

கோலாலம்பூர்-

இளையோருக்கான வயது வரம்பு 40இலிருந்து 30ஆக குறைக்கும் வகையிலான திருத்தம் செய்யப்பட்ட 2019 இளையோர் மன்றம், இளையோர் மேம்பாட்டு சட்ட (668 சட்டம்) மசோதாவை மக்களவை அங்கீகரித்துள்ளது.
ஐந்து மணி நேரம் நடைபெற்ற சட்ட மசோதா திருத்தம் மீதான விவாதத்திற்கு பின்னர் இச்சட்டம் அங்கீகரிக்கப்பட்டது.

இந்த சட்ட மசோதா திருத்தம் செய்யப்பட்டதன் மூலம் இளையோர் மன்றம் சார்ந்த அமைப்புகளில் 18 வயதுக்கு குறையாத 30 வயதுக்கு மேற்போகாதவர்கள் மட்டுமே பதவி வகிக்க முடியும்.

இந்த சட்ட மசோதாவை இளைஞர், விளையாட்டு துறை அமைச்சர் சைட் சித்திக் சைட் அப்துல் ரஹ்மான் மக்களவையில் தாக்கல் செய்தார்.

ஈப்போ,மகிழம்பு தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கான ‘இலட்சியப் பயணம்’ தன்முனைப்புப் பட்டறை

ஈப்போ-

அண்மையில் ஈப்போ, மகிழம்பூ தமிழ்ப்பள்ளியின் முன்னாள் மாணவர் கழக ஏற்பாட்டில்...இவ்வாண்டு யூ.பி.எஸ்.ஆர் தேர்வினை சந்திக்கவிருக்கும் மாணவர்களுக்காக ‘இலட்சிய பயணம் 2019’ என்ற தலைப்பிலான தன்முனைப்பு பட்டறை மிகச்சிறப்பாக நடந்தேறியது.

தொடர்ந்து நான்காவது ஆண்டாக ஏற்பாடு செய்யப்பட்ட இப்பட்டறை மாணவர்களுக்கு தேர்ச்சியின் அவசியம், இறுதி நேர உத்வேகம், சாதனையாளர்களின் கடந்த காலம், விவேகத்துடன் உறுதி மொழி என பல்வேறு பரிமாணங்களுடன் நடைப்பெற்றது. சுமார் 70 மாணவர்கள் இதில் பங்குபெற்று பயனடைந்தனர். பள்ளியின் ஆசிரியர் குழுவினர், பெற்றோர்களில் சிலரும் கலந்து கொண்டனர்.

இம்முறை கழகத்தின் செயலாளர் தமிழரசன் பட்டறையின் நெறியாளராக வழிநடத்தினார். ஆசிரியர் கல்லூரியில் விரிவுரையாளராக பொறுப்பிலிருக்கும் டாக்டர் மணிராஜ் சிறப்பு பேச்சாளராக அழைக்கப்பட்டிருந்தார்.

மேலும் தனியார் நிறுவனமொன்றில் உயரிய பொறுப்பிலிருக்கும் இப்பள்ளியின் முன்னாள் மாணவி குமாரி ரோஸ் ஹெலன், வீடமைப்பு விநியோகத் துறையில் முன்னேறி வரும் கழகத்தின் தலைவர் அருண், சொந்த தொழிலில் வளர்ச்சி கண்டுள்ள கழகத்தின் ஆலோசகர் கலைசேகர் ஆகியோர் பேச்சாளர்களாக செயலாற்றினர்.

நம் பள்ளி....நமது கடமை என்ற உணர்வில் நடத்தப்படும் இந்த தன்முனைப்புப் பட்டறை மிகச் சிறந்த முயற்சியென்று பள்ளியின் தலைமையாசிரியை திருமதி மாரியம்மாள் புகழ்ந்தார.
இந்த நிகழ்வு நிச்சயமாக வரும் காலங்களிலும் தொடரும் என இப்பள்ளியில் பயின்று தற்போது இதே பள்ளியில் துணை தலைமையாசிரியையாக பணி புரியும் திருமத தங்கம் உறுதியளித்தார்

Wednesday, 3 July 2019

தோட்டத் துறைகளில் இந்தியர்களின் பங்களிப்பை மறந்து விடக்கூடாது- கணபதிராவ் வலியுறுத்து

ரா.தங்கமணி 

ஷா ஆலம்-
1980ஆம் ஆண்டுகளில் தோட்டத் துறைகளில் பெரு வளர்ச்சி கண்டிருந்த மலேசியா, ரப்பர், செம்பனை எண்ணெயை ஏற்றுமதி செய்யும் முதன்மை நாடாக திகழ்ந்தது. இன்றும் நாட்டின் வளர்ச்சிக்கு அடித்தளமிட்டுள்ள தோட்டத் துறைகளில் தங்களது ரத்தத்தை வியர்வை துளியாக சிந்திய இந்தியர்கள் உழைப்பு மறக்கடிப்படுவது துரதிர்ஷடமானது ஆகும் என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் தெரிவித்தார்.
ரப்பர், செம்பனை தோட்டங்கள் எல்லாம்  அசுர வளர்ச்சி கண்டு அரசு சார்பு நிறுவனங்களாக மாறும்போது அங்கு பணியாற்றிய இந்தியத் தொழிலாளர்களின் உழைப்பை அங்கீகரிக்க மறுத்ததோடு அவர்களுக்கான அடிப்படை தேவைகளையும் பூர்த்தி செய்ய மறுத்து விட்டன.
அதே வேளையில் தோட்டத் துறையில் ஈடுபட்டிருந்த பிற இனத்தவர்களுக்கு ஃபெல்டா (FELDA), ஃபெல்க்ரா (FELCRA) போன்ற திட்டங்கள் உருவாக்கப்பட்டு 5 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன் மூலம் அதிக விலைக்கு செம்பனை பழங்கள் விற்பனை செய்யப்பட்டதில் கிடைக்கப்பெற்ற லாபத்தின் மூலம் அவர்களின் வாழ்வாதாரச் சூழல் மாற்றியமைக்கப்பட்டது.  பள்ளிக்கூடம், வழிபாட்டுத் தலம், மின்சார, குடிநீர் கட்டணம் போன்ற பல அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து கொன்டனர்.
ஆனால் பல ஆண்டுகளாக வளர்ச்சி என்ற பெயரில்  இந்தியர்கள் பெருமளவு இடமாற்றம் செய்யப்பட்டனர். தோட்டங்கள் விற்பனை செய்யப்பட்டபோது இந்தியர்கள் இங்கேயே தங்கியிருந்து புதிய நிர்வாகத்தின் கீழ் பணியாற்றுவதற்கு மாற்று திட்டங்கள்  வகுக்கப்படவில்லை. இத்தோட்டங்களிலிருந்து இந்தியர்கள் கட்டாயத்தின் பேரில் வெளியேற்றப்பட்டதோடு அந்த இடங்களை நிரப்ப இந்தோனேசியா, நேப்பாள், வங்காளதேசம், இந்தியா போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்கள் இறக்குமதி செய்யப்பட்டனர். முறையான வழிகாட்டுதல் இல்லாததால் நாட்டின் விரைவான வளர்ச்சியில் இந்தியர்களின் தங்களின் நிலையான வாழ்வாதாரத்தை இழந்தனர்.  நகர்ப்புற வறுமை, வேலை வாய்ப்பின்மை, ஏழ்மையில் உழன்ற மன அழுத்தம் போன்றவை இன்னமும் தொடர்கதையாக நீடிக்கின்றது.
எனவே, நிலையான வருமானம், சிறந்த வசதி வாய்ப்பு போன்றவை வழங்கப்பட்டால் தோட்டத் துறைகளில் பணியாற்ற இந்தியர்கள் தயாராகவே உள்ளனர். 14ஆவது பொதுத் தேர்தலின்போது பக்காத்தான் ஹரப்பானின் தேர்தல் கொள்கை அறிக்கையில் குறிப்பிடப்பட்டதைபோல் ஃபெல்டா, ஃபெல்க்ரா போன்ற திட்டங்கள் இந்தியர்களுக்கும் அறிமுகப்படுத்தப்பட வேண்டும் . இத்திட்டத்தின் மூலம் நிலங்களை வழங்குவதன் வழி இந்தியர்கள் தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்ள முடியும்.
தோட்டத் துறைகளில் பணியாற்ற வங்காளதேசம், நேப்பாளம், ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்களை அழைத்து வருவதற்கு பதிலாக அரசாங்கம் இத்திட்டத்தை முன்னெடுத்தால் கடந்த காலங்களை போல இந்தியர்கள் தோட்டத் துறைகளில் தங்களது பங்களிப்பை நிச்சயம் வழங்குவர் என்று கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினருமான கணபதிராவ் மேலும் சொன்னார்.

இந்திய சமுதாயத்திற்காக வெ.20 மில்லியன் செலவிடப்பட்டுள்ளது- சிவகுமார்

கோலாலம்பூர்-
இந்திய சமுதாயத்தின் சமூக பொருளாதார மேம்பாட்டிற்காக மித்ரா அமைப்பின் வழி முதல் கட்டமாக 20 மில்லியன் வெள்ளி செலவிடப்பட்டுள்ளதாக மக்களவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று பத்துகாஜா நாடாளுமன்ற உறுப்பினர் வீ.சிவகுமார் தெரிவித்தார்.

இந்திய சமூக பொருளாதார மேம்பாட்டிற்காக  மித்ரா அமைப்பின் வாயிலான முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? தனியார் துறை சார்ந்த எத்தனை அமைப்புகளுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது? போன்ற கேள்விகளை மக்களவையில் எழுத்துப்பூர்வமாக கேட்டிருந்தேன்.

இந்திய சமுதாயத்தை உள்ளடக்கிய 38 சமூக பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களுக்காக வெ. 20,336,524.00 ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்தியர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் வகையில் கல்வி, சமூகம், பொருளாதார நடவடிக்கைகளுக்காக இந்நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது என மக்களவையில் பதிலளிக்கப்பட்டது.

எண்ணெய், எரிவாயு, இணைய பாதுகாப்பு, தொலை தொடர்பு பொறயியல் போன்ற பயிற்சி திட்டங்களுக்கும் 6,500 பாலர் பள்ளி மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்கும் இந்நிதி ஒதுக்கப்பட்டது.

பல்வேறு அரசு சாரா அமைப்புகளுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் வாயிலாக இந்நிதி வழங்கப்பட்டுள்ளது.  அதில் பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களுக்காக 6 நடவடிக்கைகளுக்கு 2,322,350.00 வெள்ளியும், கல்வி, பயிற்சி சார்ந்த 17 நடவடிக்கைகளுக்கு  14,197,290.00 வெள்ளியும், அடையாள, உள்ளடக்கம் சார்ந்த 4 நடவடிக்கைகளுக்கு 746,820.00 வெள்ளியும், சமூக மேம்பாடு, சமூக நலன் சார்ந்த 11 திட்டங்களுக்கு 3,070,064.00 வெள்ளியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தனது கேள்விக்கு மக்களவையில் பதிலளிக்கப்பட்டதாக சிவகுமார் சொன்னார்.

முதல் தவணையாக இத்திட்டங்களுக்கு 20 மில்லியன் வெள்ளி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. இவ்வாண்டு 100 மில்லியன் வெள்ளி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில் அதில் 20 விழுக்காடு பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.

ஆயினும் எந்தெந்த அமைப்புகள், தனியார் நிறுவனங்களுக்கு இந்த நிதி வழங்கப்பட்டுள்ளது என்ற விரிவான விளக்கம் அளிக்கப்படவில்லை. அந்த விரிவான விளக்கத்தை தான் நான் எதிர்பார்த்தேன். இருந்தபோதிலும் 20 விழுக்காடு நிதி ஒதுக்கீடு இந்திய சமுதாயத்திற்காக செலவிடப்பட்டுள்ளது வரவேற்கக்கூடியதாகும் என்று சிவகுமார் குறிப்பிட்டார்.

Tuesday, 2 July 2019

‘கொக்கோ கோலா’ என்றுதான் குடித்தேன்; மதுவை அருந்தவில்லை; மாணவர் விளக்கம்

குவாந்தான் -

பள்ளி வளாகத்தில் மது அருந்தி மயங்கி கிடந்ததாக தம் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளை மறுத்த இடைநிலைப்பள்ளி மாணவர், ‘கொக்கோ கோலா’ பானத்தில் மலிவு விலை சாராயம் கலக்கப்பட்டிருப்பதை தாம் அறிந்திருக்கவில்லை என்று வீடியோ பதிவில் தன்னிலை விளக்கம் அளித்துள்ளார்.
கொக்கோ கோலா பானத்தை அருந்தச் சொல்லி சிலர் என்னை வற்புறுத்தினர். ஆனால் அதில் மலிவு விலை சாராயம் கலக்கப்பட்டிருப்பதை தாம் அறிந்திருக்கவில்லை. அந்த பானத்தை இரன்டு முறை குடித்த நிலையில் மயக்க நிலைக்கு தாம் தள்ளப்பட்டதாக கூறியுள்ள அம்மாணவர், உண்மை நிலை அறியாமல் சிலர் பொய்யான தகவலை சமூக ஊடகங்களில் பகிர்கின்றனர்.

தாம் இதுவரை மதுபானத்தை அருந்தியதில்லை எனவும் இதுவே முதல் முறை என்பதால் ஆபத்தான நிலைக்கு நான் தள்ளப்பட்டுள்ளேன். பள்ளி மாணவர் எனும் நிலையில் மதுவை அருந்தக்கூடாது என்பதை நான் அறிந்து வைத்திருக்கிறேன்.

நான் இப்போது நலமாக உள்ளேன். சிலர் வற்புறுத்தலாலேயே கொக்கோ கோலா பானத்தை அருந்திய தம்மீது குற்றச்சாட்டுகள் சுமத்த வேண்டாம். அது என் குடும்பத்தினரை வெகுவாக பாதித்துள்ளது.

ஆதலால் பொய்யான தகவலை சமூக ஊடகங்களில் பகிர வேண்டாம் என்று கேட்டுக் கொள்வதாக அம்மாணவன் வீடியோ பதிவில் கேட்டுக் கொண்டார். மாணவனின் தன்னிலை விளக்கம் குறித்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

(குறிப்பு: மாணவரின் நலன் கருதி அவரின் பெயரும் பள்ளியின் பெயரும் குறிப்பிடப்படவில்லை.)

'கொலை' வெறியில் துரத்திய புலி; நூலிழையில் தப்பித்த ஆடவர்கள்

மைசூர்-
காட்டுப் பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஆடவர்களை 'கொலை' வெறியுடன் புலி ஒன்று துரத்தும் காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது.

இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் மைசூர்- கொடகு பகுதிகளுக்கு நடுவே உள்ள ‘நகராஹோல்’ தேசிய பூங்காவை ஒட்டி அமைந்துள்ள பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

புலிகளின் சரணாலயமாக கருதப்படும் இந்த பகுதியில் மோட்டார் சைக்கிளில் இரு ஆடவர்கள் பயணிக்கின்றனர். அப்போது திடீரென காட்டுப் பகுதியிலிருந்து மின்னல் வேகத்தில் ஓடி வரும் புலி இவர்களை துரத்துகிறது.

மோட்டார் சைக்கிளோட்டி தடுமாற்றத்துடன் மோட்டார் சைக்கிளை செலுத்தவே வேகமாக ஓடிவரும் புலி காட்டின் மறுமுனையில் நுழைகிறது. இந்த காட்சி  அனைத்தையும் மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்திருக்கும்  நபர் காணொளியாக பதிவு செய்கிறார்.

கொலை வெறியோடு துரத்தும் புலியின் தாக்கத்திலிருந்து தப்பிக்கு இரு ஆடவர்களின் திக் திக் வினாடிகள் கொண்ட இந்த காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.

அம்னோ தலைவர் பதவிக்கு மீண்டும் திரும்பினார் ஸாயிட்

பாகான் டத்தோ-

விடுமுறையில் சென்றிருந்த டத்தோஶ்ரீ ஸாயிட் ஹமிடி அம்னோ தலைவர் பதவிக்கு மீண்டும் திரும்பினார்.
பாகான் டத்தோவில் நடைபெற்ற ஹரிராயா விருந்துபசரிப்பில் உரையாற்றிய டத்தோஶ்ரீ ஸாயிட், கடந்தாண்டு டிசம்பர் மாதம் அம்னோவின் துணைத் தலைவர் முகமட் ஹசானிடம் ஒப்படைத்த பதவிக்கு மீண்டும் திரும்புவதாக கூறினார்.
தன்னுடைய விடுமுறையை முடித்துக் கொண்டு மீண்டும் தாம் பணிக்கு திரும்புவதாக முன்னாள் துணைப் பிரதமருமான டத்தோஶ்ரீ ஸாயிட் கூறினார்.

தோட்டத் துறைகளில் ஆப்பிரிக்கர்கள்; பரிந்துரை இனி தொடராது- குலசேகரன்

கோலாலம்பூர்-

தோட்டத் துறைகளுக்கு ஆப்பிரிக்கர்களை இறக்குமதி செய்யும் பரிந்துரை இனி தொடரப்படாது என்று மனிதவள அமைச்சர் எம்.குலசேகரன் தெரிவித்தார்.
கடந்த ஜூன் 28இல் தோட்ட உரிமையாளர்களுடன் நடத்தப்பட்ட சந்திப்பின்போது எடுக்கப்பட்ட முடிவு தவறுதலாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது.
தோட்டத் துறைகளில் ஏற்பட்டுள்ள தொழிலாளர் பற்றாக்குறையினால் பெரும்பாலான 
உரிமையாளர்கள் நட்டத்தை சந்தித்துள்ளனர்.

செம்பனை பழங்கள் காய்த்த 21 நாட்களுக்குள் அவற்றை அறுவடை செய்யவில்லையென்றால் அவை பயன்படுத்த முடியாத நிலைக்கு போய்விடும்.

தொழிலாளர் பற்றாக்குறையினால் தோட்டத் தொழில் துறை ஆண்டுக்கு 10 பில்லியன் வெள்ளி இழப்பை சந்தித்துள்ளது.

அதனை நிவர்த்தி செய்யும் பொருட்டே எண்ணெய், எரிவாயு துறைகளில் உள்ளது போலவே தோட்டத் துறைகளிலும் ஆப்பிரிக்கர்களை களமிறக்க பரிந்துரை செய்யப்பட்டதாக அவர் சொன்னார்.