Tuesday, 3 July 2018

ஜூனியர் சிங்கர் போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்றார் அனுஷியா


புனிதாசுகுமாறன்

ஈப்போ:
செந்தமிழ் புரொடக்ஷன் ஏற்பாட்டில்  நடைபெற்ற ஜூனியர் சிங்கர் பாடல் திறன் போட்டியின் இறுதிச் சுற்றில்  சிறுமி அனுஷியா முத்துராமன் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார்.

இரண்டாவது பரிசை சுங்கை சிப்புட்டை சேர்ந்த யோகேஸ்வரி மாறனும் மூன்றாவது பரிசை ஐஸ்வரியா லட்சுமி தேவாவும் நான்காவது பரிசை வி.டிவாஸ்னவி, ஐந்தாவது பரிசை கிடன்பால் ஆகியோரும் வென்றனர்.

கடந்த ஆறு மாதகளாக செந்தமிழ் புரொட்க்ஷன் ஏற்பாட்டில்  நடைபெற்ற  ஜூனியர் சிங்கர் போட்டியில் 15 மாவட்டத்தை சேர்ந்த 130 சிறுவர்கள் ஆர்வத்துடன்  கலந்துக்கொண்டனர் அதில் இறுதி சுற்றுக்கு 20 சிறுவர்கள் மட்டுமே தேர்வு பெற்றனர்.

புந்தோங்கில் உள்ள மாரியம்மன் ஆலய மண்டபத்தில் நடைபெற்ற ஜூனியர் சிங்கர் இறுதிச் சுற்றில் கலந்து  கொண்ட பேரா மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் அ.சிவநேசன் கலந்துகொண்டு மாணவர்கள் அனைவரின் தமிழ் ஆர்வத்தை வெகுவாக பாராட்டி பேசினார்.

 சிருவயதிலயே சிறார்கள் இதுபோன்ற பாடல் திறனை கொண்டிருப்பது சாதாரண விஷயமல்ல. கண்டிப்பாக மாணவர்களால் மட்டுமே இவ்வளவு அழகாக தமிழ் உச்சரிப்போடு பாடமுடியும் என்றதோடு சிறார்களை ஊக்குவிக்கும் வகையில் இதுபோன்ற போட்டிகளை நடத்தும்  செந்தமிழ் புரொடக்ஷன் மேற்கொண்டு வரும் நடவடிக்கை பாராட்டி 5 ஆயிரம் வெள்ளி மானியம்  வழங்கப்படும் என்றார்.

மேலும் இந்நிகழ்வில் முன்னதாக தலைமையுரை ஆற்றிய செந்தமிழ் புரொடக்ஷன் தலைவர் எம்.எ அலி  முன்வைத்த கோரிக்கைகளை மனித வள அமைச்சர் எம்.குல சேகரன் பார்வைக்கு கொண்டுச் செல்வதாகவும் அவர் தெரிவித்தார்.

வெற்றிப்பெற்ற மாணவர்களுக்கு சுங்காய் சட்டமன்ற உறுப்பினருமான சிவநேசன் பரிசுகளை எடுத்து வழங்கினார்.

இந்நிகழ்வில் மகப்பேறு மருத்துவர் வ.ஜெயபாலன், செபஸ்தியார் கலைக்கூட தலைவர் செபஸ்தியர், பேராக் மாநில இந்து சங்கத்தின் மகளிர் தலைவி பத்மாதேவி, கடலை வியாபாரி குணசேகரன், புவனேஸ்வரன்,செல்வ கனேசன் உட்பட  பல பிரமுகர்கள் கலந்துக்கொண்டனர்.

Monday, 2 July 2018

பல இனங்களாக பிரிந்திருந்தாலும் 'மலேசியராய்' ஒன்றிணைந்துள்ளோம் - கணபதி ராவ்



ரா.தங்கமணி

ஷா ஆலம்-
இன ரீதியாக நாம் பிளவுபட்டிருந்தாலும் மலேசியர் என்ற ரீதியில் நாம் அனைவரும் ஒன்றிணைந்துள்ளோம் என சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதி ராவ் குறிப்பிட்டார்.

உலகின் பல நாடுகளில் இல்லாத பெருமை மலேசியர்களாகிய நாம் பெற்றுள்ளோம். இங்கு பல்வேறு இனங்களையும் கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் கொண்டவர்கள் வாழ்கின்றனர்.

ஆனால் ஓர் இனத்தின் பெருநாள் காலங்களில் எவ்வித இன பேதமும் இல்லாமல் மலேசியர் என்ற உணர்வோடு அனைவரும் செயல்படுவது ஆக்கப்பூர்வமானதாகும்.

முஸ்லீகளின் நோன்புப் பெருநாள் கொண்டாட்ட நிகழ்வில் முஸ்லீம்கள் மட்டுமல்லாது சீனர்களும் இந்தியர்களும் வெகுவாக கலந்து கொள்வது அனைவரிடத்திலும் சகிப்புத் தன்மை மேலோங்கியுள்ளதை புலப்படுத்துகிறது என கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினருமான கணபதி ராவ்  தெரிவித்தார்.

நேற்று கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் ஏற்பாட்டில் நடைபெற்ற நோன்புப் பெருநாள் உபசரிப்பு நிகழ்வில் பல இனங்களைச் சேர்ந்த மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

வாயில் அமிலத் திரவம் ஊற்றப்பட்ட மாணவரை சந்தித்தார் சிவசுப்பிரமணியம்


புனிதா சுகுமாறன்

ஈப்போ-
பள்ளி கழிவறையில் மாணவர் ஒருவரின் வாயில் அமில திரவத்தை ஊற்றியதாக நம்பப்படும் சம்பவம் தொடர்பிலஈப்போ பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சம்பந்தப்பட்ட மாணவரை புந்தோங் சட்டமன்ற உறுப்பினர் ஆதி.சிவசுப்பிரமணியர் சந்தித்து நலம் விசாரித்தார்.

சம்பந்தபட்ட மாணவரின் நிலை குறித்த காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகி கொண்டிருக்கிறது.

இச்சம்பவம்  தொடர்பில் போலீசார் விசாரணை மேற்கொண்டிருப்பதால் இச்சம்பவம் குறித்து தற்போது ஏதும் கருத்துரைக்க முடியாது என சிவசுப்பிரமணியம் கூறினார்.

ஸாயிட்டுக்கு வாழ்த்துகள் தெரிவித்தார் பிரதமர் மகாதீர்


கோலாலம்பூர்-

அம்னோவின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டத்தோஶ்ரீ ஸாயிட் ஹமிடிக்கு பிரதமர் துன் மகாதீர் முகம்மட் தமது வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.

வாழ்த்துகளை கூறி கொண்டாலும், பக்காத்தான் கூட்டணி அரசு அம்னோவுடன் ஒருபோதும் ஒத்துழைக்காது என அவர் சொன்னார்.

தேமு தலைமைச் செயலாளர் பதவி- நிராகரித்தார் கைரி


கோலாலம்பூர்-
தமக்கு பரிந்துரைக்கப்பட்ட தேசிய முன்னணியின் தலைமைச் செயலாளர் பதவி அம்னோ தலைவர் பதவிக்கு போட்டியிட்ட கைரி ஜமாலுடின் நிராகரித்தார்.

அம்னோவின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட டத்தோஶ்ரீ ஸாயிட், தேமுவின் தலைமைச் செயலாளர் பதவியை தமக்கு வழங்க முன்வந்ததற்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக கைரி ஜமாலுடின் டுவிட்டரில் பதவிட்டுள்ளார்.

கட்சியின் உயர்மட்ட பதவிகள் எதனையும் ஏற்க விரும்பவில்லை எனவும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக தமது கடமையை செய்வதில் கவனம் செலுத்தவிருப்பதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

பந்தாய் மருத்துவமனையின் சமூக கடப்பாடு தொடர வேண்டும்- சிவநேசன்பாராட்டு


புனிதா சுகுமாறன்

ஈப்போ-
வர்த்தக ரீதியில் மட்டுமல்லாது சமூக கடப்பாட்டோடு செயல்பட்டு வரும் பந்தாய் மருத்துவமனையின் சேவை  தொடரப்பட வேண்டும் என பேரா மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் அ.சிவநேசன் கூறினார்.


குறைந்த வருமானம் பெறுவோர்கள் பயனடையும் வகையில் பல  திட்டங்களை தனது சமூகக் கடப்பாடு திட்டத்தின் வழியாக  நிறைவேற்றி வருவதை அறிகிறோம்.  இதுபோன்ற  நடவடிக்கைகளை பந்தாய் மருத்துவமனை தொடர்ந்து செய்ய வேண்டுமென்று சிவநேசன் கேட்டுக்கொண்டார்.
ஈப்போ பந்தாய்  மருத்துமனை ஏற்பாடு செய்திருந்த நோன்புப்  பெருநாள் விருந்து நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு திறப்புரை ஆற்றுகையில் அவர் இவ்வாறு கூறினார்.
சுமார் 20 ஆண்டுகாலமாக ஈப்போவில் செயல்பட்டு வரும் தனியார் மருத்துவமனையான பந்தாய் மருத்துவமனை சமூகக் கடப்பாட்டோடு மக்களுக்கு  பல்வேறு  சேவைகளை  வழங்கி  வருவது பாராட்டத்தக்க ஒன்றாகும் என்று அவர் சொன்னார்.



இதற்கு முன்பு பேசிய ஈப்போ பந்தாய் மருத்துவமனையின்  தலைமை செயல்முறை அதிகாரி சோங் சியட் போஃங்,  இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு வருகை புரிந்த சிவநேசனுக்கும்  நிகழ்ச்சிக்கு ஆதரவு வழங்கிய நிறுவனங்களுக்கும் நன்றியைத்  தெரிவித்துக் கொண்டார்.


இந்த மருத்துவமனையின் மருத்துவச் சேவையை  மேம்படுத்தத்  தொடர் நடவடிக்கைகளை  மேற்கொண்டு  வருகிறது.   அதன்  அடிப்படையில்  அனைத்து  தரப்பினரின்  ஆதரவும்  தேவை  என்று அவர் தெரிவித்தார்.
இங்கு 226  கட்டில்கள்  உள்ளன.   நான்காவது  மாடியில்  தனிக்  கட்டில்  கொண்ட  அறைகளையும்  இரண்டு  கட்டில்கள்  கொண்ட  அறைகளையும் உருவாக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு  வருவதாகவும்  அவர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மருத்துவமனையின் மருத்துவர்கள், அரசு சார்பற்றஇயக்கப் பொறுப்பாளர்கள், பிரமுகர்களும் கலந்துகொண்டனர்.

2,000 ஏக்கர் நில வாரியக் குழுவில் மாநில அரசு பிரதிநிதியை இணையுங்கள்


ரா.தங்கமணி

ஈப்போ-
பேரா மாநில தமிழ்ப்பள்ளிகள், மாணவகர்களின் மேம்பாட்டுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட 2,000 ஏக்கர் நிலத்தை பராமரிக்கும்  பேரா இந்திய மாணவர்கள் மேம்பாட்டு வாரியக்குழு பதவி விலக வேண்டும் என பேரா தமிழ்ப்பள்ளிகள் தீர்வுக்குழு கோரிக்கை விடுத்துள்ளது.

கடந்த தேசிய முன்னணி ஆட்சியின்போது அமைக்கப்பட்ட இந்த வாரியக்குழுவில் தேசிய முன்னணி, மஇகாவைச் சேர்ந்தவர்களே உறுப்பினர்க்ளாக உள்ளனர்.

நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலில்  மத்திய, மாநில அரசுகளை பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி  வெற்றி பெற்றுள்ளதால் தற்போது எதிர்க்கட்சியாக உள்ள அதன் இயக்குனர்கள் பதவி விலக வேண்டும் என அதன் தலைவர் செல்வம், துணைத் தலைவர் சிம்மாதிரி, செயலாலர் பெரு. நித்தியானந்தர் ஆகியோர் வலியுறுத்தினர்.

இந்த 2,000 ஏக்கர் நிலம் மாநில அரசு ஒதுக்கியது. அதனை நிர்வகிக்கவே இந்த வாரியக்குழு அமைக்கப்பட்டது.  அதன் அடிப்படையில் கடந்த கால ஆட்சியில் அவர்கள் பொறுப்பில் இருந்தனர். இப்போது பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி மாநில ஆட்சியை கைப்பற்றியுள்ளதால் இந்த வாரியக்குழுவில் தற்போது எதிர்க்கட்சியாக உள்ள பொறுப்பாளர்கள் அப்பதவியிலிருந்து விலக வேண்டும்.

இல்லையேல், இந்த வாரியக் குழுவில் தற்போதைய மாநில அரசாங்கத்தைச் சேர்ந்தவர்கள் வாரிய உறுப்பினராக நியமனம் செய்யப்பட வேண்டும்.

எங்களிடமும் தகுதியானவர்கள் இருக்கின்றனர் என்ற நிலையில் அவர்கள் பதவி விலக வேண்டும் அல்லது மாநில அரசின் பிரதிநிதியை சேர்க்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

Sunday, 1 July 2018

அம்னோவின் தலைவரானார் டத்தோஶ்ரீ ஸாயிட் ஹமிடி


கோலாலம்பூர்-

மிகவும் பரபரப்பான சூழலை ஏற்படுத்திய அம்னோவின் தேர்தலில் முன்னாள் துணைப் பிரதமர் டத்தோஶ்ரீ ஸாயிட் ஹமிடி அக்கட்சியின் தேசியத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இன்றுக் காலை நடைபெற்ற இத்தேர்தலில் டத்தோஶ்ரீ ஸாயிட் ஹமிடி 91 வாக்குகள் பெற்று முன்னிலை  வகித்தார். அவரை எதிர்த்து போட்டியிட்ட முன்னாள் இளைஞர் பிரிவுத் தலைவர் கைரி ஜமாலுடின் 72 வாக்குகளும் குவாங் மூசாங் நாடாளுமன்ற உறுப்பினர் தெங்கு ரஸாலி ஹம்சா 28 வாக்குகளும் பெற்றனர்.

அக்கட்சியின் துணைத் தலைவராக டத்தோஶ்ரீ முகமட் ஹசான் 103 வாக்குகள் பெற்று தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரை  எதிர்த்து போட்டியிட்ட 88 வாக்குகள் பெற்று தோல்வியை தழுவினார்.

தேர்ச்சி விகிதத்தை உயர்த்தும் பள்ளிகளுக்கு கூடுதல் உதவிகள்- சிவநேசன்


புனிதா சுகுமாறன்

ஈப்போ-
மாணவர்களின் கல்வி தேர்ச்சி விகிதம் அதிகரிக்கப்பட்டால் அப்பள்ளிகளுக்கு அரசாங்கத்தின் உதவி நிச்சயம் வந்தடையும் என பேரா மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் அ.சிவநேசன்  கூறினார்.

மாணவர்களின் கல்வித் தரம் மேம்படுத்தப்படுவது அவசியமாகும். அவ்வகையில் பள்ளிகளில் அதற்கான அடிப்படை சூழல் உருவாக்கப்பட வேண்டும்.

தேர்வுகளில் சில மாணவர்கள் மட்டும்  'ஏ' பெறுவதை  இலக்காகக் கொள்ளாமல் அனைத்து மாணவர்களின் கல்வி தேர்ச்சி விகிதம் அதிகரிக்கப்படுவது உறுதி செய்யப்பட வேண்டும்.

அனைத்து மாணவர்களின் கல்வி தேர்ச்சி விகிதம் உயர்த்தப்படும் நிலையில் அப்பள்ளிகளுக்கு மாநில அரசின் உதவிகள் கூடுதலாக வழங்கப்படும்.
இதனால் பிற பள்ளிகளுக்கு மானியம் வழங்கப்படாது என பொருள்படாது. பிற பள்ளிகளுக்கும் மானியம் வழங்கப்படும். ஆனால் மாணவர்களின் கல்வி தேர்ச்சியை உயர்த்தும் பள்ளிகளுக்கு இன்னும் கூடுதலான உதவிகள் சென்றடையும் என இங்கு குனோங் ராப்பாட் தமிழ்ப்பள்ளியில் நடைபெற்ற 'பண்பு தளிர்' நிகழ்வில் சிவநேசனின் பிரதிநிதியாக கலந்து கொண்ட உ.முத்துசாமி தொடக்கவுரை ஆற்றுகையில் அ இவ்வாறு சொன்னார்.

இந்நிகழ்வில் வண்னம் தீட்டும் போட்டி,  நன்னெறி பண்புகள் விளையாட்டு, மாணவர் படைப்பு ஆகியவற்றில் பங்கேற்று மாணவர்கள் தங்களது திறனை வெளிபடுத்தினர்.

இந்நிகழ்வில் பள்ளி தலைமையாசிரியர் திருமதி கோகிலவாணி, பேரா மாநில தமிழ்ப்பள்ளிகள் தீர்வு குழுத் தலைவர் செல்வம் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

அம்னோவின் தலைவர் யார்?- 'தலையெழுத்து ' இன்று தீர்மானிக்கப்படுகிறது

கோலாலம்பூர்-

நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலுக்குப் பின்னர் கடுமையான போட்டியை எதிர்கொண்டுள்ள அம்னோ கட்சியின் தேசியத் தலைவர் யார்? என்பது இன்று நிர்ணயிக்கப்படுகிறது.

14ஆவது பொதுத் தேர்தலுக்குப் பின்னர் அம்னோவின் தேசியத் தலைவர் பதவியிலிருந்து  முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக் விலகினார்.

அம்னோவின் இடைக்கால தலைவராக முன்னாள் துணைப் பிரதமர் டத்தோஶ்ரீ ஸாயிட் ஹமிடி பொறுப்பேற்றிருந்தார்.

இன்று நடைபெறும் அம்னோ தேசியத் தலைவர் பதவிக்கு 5 பேர் போட்டியிடவுள்ளனர்.  டத்தோஶ்ரீ ஸாயிட் ஹமிடி, குவாங் மூசாங் நாடாளுமன்ற உறுப்பினர் தெங்கு ரஸாலி ஹம்சா, முன்னாள் இளைஞர், விளையாட்டு அமைச்சர் கைரி ஜமாலுடின்,  பண்டார் துன் ரசாக் தொகுதி அம்னோ உறுப்பினர் முகமட் இக்பால் மரிசேர், இஸ்கண்டார் புத்ர் தொகுதி அம்னோ உறுப்பினர் முகமட் யூசோப் மூசா ஆகியோர் களத்தில் குதித்துள்ளனர்.

டத்தோஶ்ரீ ஸாயிட் ஹமிடி,  தெங்கு ரஸாலி ஹம்சா, கைரி ஜமாலுடின் ஆகியோருக்கே கடுமையான போட்டி நிலவுகிறது.

இன்றைய தேர்தலில் அம்னோவின் தேசியத் தலைவராக யார் தேர்ந்தெடுக்கப்படுவர் என்பதை பொறுத்தே தேசிய முன்னணியின் தலையெழுத்து நிர்ணயிக்கப்படவுள்ளது.

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் 'கனா'


உலகளவில் அனைத்து ரசிகர்களுக்கும் பிடித்த  நடிகரான  சிவகார்த்திகேயனின் சொந்த தயாரிப்பு நிறுவனமான எஸ்.கே. புரொடக்‌ஷன்ஸ் மூலமாக தயாராகும் திரைப்படம் 'கனா'.

'கனா' திரைப்படம் கிராமத்தில் இருந்து கிரிக்கெட் வீராங்கனை ஆகும் கனவோடு நகரத்துக்கு வரும் ஒரு பெண்ணின் கதையம்சம் கொண்டதாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

உலக சினிமா வரலாற்றில் முதன்முறையாக பெண்கள் கிரிக்கெட்டை மையமாக வைத்து எடுக்கப்படும் இத்திரைப்படத்தின் இயக்குனர், நடிகராக அவதாரம் எடுத்திருக்கிறார் பாடலாசிரியரான அருண்ராஜா காமராஜ்.

இதில் ஐஸ்வர்யா, சத்தியராஜ், தர்ஷன் முதலியோர் நடிக்கின்றனர்.  இத்திரைப்படம் அதிக எதிர்ப்பார்ப்புகளுடன் இவ்வருடம் வெளிவர உள்ளது.

பிரதமர்களை மட்டும் முன்னிலைபடுத்தாமல் சுதந்திர பிரகனடத்தில் கையெழுத்திட்ட தலைவர்களை நினைவு கூறுங்கள்- மணிமாறன்


ரா.தங்கமணி

சுங்கை சிப்புட்-
நாட்டின் சுதந்திர தினத்தின் போது பிரதமர்களின் படங்களை மட்டும் பிரசுரிக்காமல் நாட்டின் சுதந்திர பிரகடனத்தில் கையெழுத்திட்ட தலைவர்களின் படங்களை இடம்பெறச் செய்வதை மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என துன் சம்பந்தன் பிறந்தநாள் விழாக்குழு ஏற்பாட்டாளர் கி.மணிமாறன் வலியுறுத்தினார்.

நாட்டின் சுதந்திர பிரகடனத்தில் கையெழுத்திட்டவர்களில் துன் வீ.தி.சம்பந்தனும் ஒருவராவார். துவாங்கு அப்துல் ரஹ்மான், துன் டான் செங் லோக் ஆகியோருடன் சுதந்திர பிரகடனத்தில் துன் சம்பந்தன் கையெழுத்திட்டவர் ஆவார்.

அத்தகைய தலைவரின் புகழ் என்றும் மறைந்திடாமல் பாதுகாக்கப்பட வேண்டும். நாட்டின் சுதந்திர தினத்தின்போது பிர்தமர்களின் படங்களை மட்டுமே தாங்கிய சுவரொட்டிகளை காண முடியும்.

இதனை களையும் வகையில் சுதந்திர தினத்தின்போது வைக்கப்படும் சுவரொட்டிகளும் விளம்பரங்களிலும் சுதந்திர பிரகடனத்தில் கையெழுத்திட்ட தலைவர்களின் படங்கள் இடம்பெறச் செய்வது அவசியமாகும்.


இதன்வழி சுதந்திரத்தை அடைவதற்காக நடத்தப்பட்ட போராட்டங்களையும் தியாகங்களையும் இளைய தலைமுறையினர் உணர்ந்து கொள்வதற்கு வழிவகுக்கப்படும் என அண்மையில் இங்கு நடைபெற்ற துன் சம்பந்தனின் 99ஆவது பிறந்தநாள் விழாவி உரையாற்றியபோது மணிமாறன் கூறினார்.

இந்நிகழ்வில் கலந்து கொண்ட சுங்கை சிப்புட் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.கேசவன் உரையாற்றுகையில், துன் சம்பந்தனின்  நூற்றாண்டு பிறந்தநாள் விழாவை அரசாங்கமே ஏற்று நடத்துவதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என கூறினார்.

சுங்கை சிப்புட்டின் வரலாற்று நாயகனான அவருக்கு உரிய மரியாதை அளிக்கப்படும் வகையில் அவரின் நூற்றாண்டு விழா மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்யப்படும் என்றார்.

இதனிடையே, இந்நிகழ்வுக்கு ஆதரவு வழங்கிய நேசிய நிலநிதி கூட்டுறவு சங்கம், சத்திய சாய் பாபா மையம் உட்பட பல நல்லுள்ளங்களுக்கும் நன்றி கூறினார்.

இந்நிகழ்வில் சுங்கை சிப்புட் மஇகா துணைத் தலைவர் அஜாட் கமாலுடின், அமுசு.ஏகாம்பரம், சுங்கை சிப்புட் சத்திய சாய் பாபா மையத்தின் தலைவர் திருமதி கமலம் உட்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

'பிரிம்' அஃரிப் அலியாவின் நோன்புப் பெருநாள் உபசரிப்பு


புனிதா சுகுமாறன்

ஈப்போ-

பேராக் மாநில இந்திய முஸ்லிம் இயக்கத்தின் (பிரிம்) தலைவர் முகமட் அரஃப் அலியா குடும்பத்தினரின் நோன்புப் பெருநாள் திறந்த இல்ல உபசரிப்பு பெர்சாம்மில் உள்ள அவரது இல்லத்தில் மிக சிறப்பாக நடைப்பெற்றது

இந்நிகழ்வில் சுமார் 500க்கும் மேற்பட்டோர் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.

 இந்நிகழ்வில் பேராக் மாநில பிரிம் இயக்கத்தின் செயலவை உறுப்பினர்கள், டத்தோ ஏ.கே. சக்திவேல் குடும்பத்தினர், ஈப்போ பாராட் மஇகாவின் மகளிர் தலைவி லெட்ச்சுமி அவர்தம் செயலவை உறுப்பினர்கள் , மற்றும் உற்றார் உறவினர்கள் என பலர் இந்நிகழ்வில் கலந்துக்கொண்டனர்.

 பலவகை அருசுவை உணவுகள் என நொம்பு பெருநாள் திறந்த இல்ல உபசரிப்பை அரிஃப் அலியா குடும்பத்தினர் எற்பாடு செய்திருந்தினர்.