Thursday 2 January 2020

மாறாத தலைவர்கள்; முன்னேறாத நாடு- 2020 இலக்கை வெற்றி கொண்டதா மலேசியா?

ரா.தங்கமணி

கோலாலம்பூர்-
பல்வேறு சாதனைகளையும் சோதனைகளையும் இனிமையான தருணங்கள், துயரங்கள் ஆகியவற்றை கொடுத்து 2020ஆம் ஆண்டுக்கு வழிவிட்டு நம்மிடமிருந்து விடை பெற்றது 2019 ஆண்டு.
2020ஆம் ஆண்டு யாருக்கு, எந்த நாட்டுக்கு முக்கியமானதோ இல்லையோ மலேசியாவுக்கு மிக முக்கியமான ஆண்டாகும்.

2020 இலக்கு (வவாசான் 2020) எனும் கொள்கையை கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னரே வகுத்து செயல்பட தொடங்கிய நாடு மலேசியா.

உலக நாடுகளின் தர வரிசையில் வளர்ச்சி கண்ட நாடாக இடம்பெற முன்னெடுக்கப்பட்ட இலக்குதான் 2020.

முதன்முறையாக பிரதமராக பதவி வகித்த துன் மகாதீர் முகமட் வகுத்த இத்திட்டம் இன்று இரண்டாவது முறையாக பிரதமராக பதவி வகிக்கும் அவரின் கரங்களிலேயே தவழ்ந்து கிடக்கிறது.
எந்த இலக்கை அடைவதற்காக பெரும்பாடு பட்டாரோ அதன் வெற்றியை நுகர முடியாமல் தோல்வி கண்ட மனிதராகவே துன் மகாதீர் 2020ஆம் ஆண்டை வரவேற்றுள்ளார்.

 அதற்கு உதாரணமே அவர் வகுத்துள்ள 2030 இலக்கு (வவாசான் 2030).

துன் மகாதீர் வகுத்த 2020 இலக்கு வெற்றியடையாமல் தோல்வியை தழுவியதற்கு காரணம் நாட்டை நிர்வகித்த தலைவர்கள் முன்னெடுத்த 'முட்டாள்தனமான' கொள்கைகளும் முரண்பாடான செயலாக்கங்களுமே ஆகும்.

பல இன மக்களை கொண்ட நாடு, சுபிட்சமான நாடு, பல இன மக்களிடையே ஒற்றுமை, மேலோங்கும் நாடு என சப்பை காரணம் காரணம் காட்டி கொண்டிருக்கும் நாட்டில் நலைவவிரித்தாடும் இனவாத கொள்கைகளும் இனம், மத ரீதியிலான ஒடுக்கல் முறைகளும் தொடரும் வளர்ச்சி கண்ட நாடு எனும் கொள்கை 'மலேசியாவுக்கு' வெறும் கனவு மட்டுமே.

நாட்டின் வளர்ச்சி பற்றி பேசும்போது மட்டும் 'மலேசியர்' என்ற சித்தாந்தமும் செயல்முறை திட்டங்கள் எனும்போது மலாய்க்காரர், சீனர், இந்தியர், பூர்வக்குடி, ஈபானியர், கடஸான் என இன ரீதியிலான பிரித்தாலும் கொள்கை கடைபிடிக்கும் வரை 2020 அல்ல, 2030 அல்ல 2040, 2050 என 2100 வந்தாலும் மலேசியாவின் கனவு ஒருபோதும் நிறைவேறாது.
இனவாத ஒடுக்கல் முறையை தங்களின் ஆயுதங்களாக பயன்படுத்தி கொள்ளும் தலைவர்கள் இருக்கும் வரை இது சாத்தியமாகாது.

அம்னோ, மசீச, மஇகா  என்றுஇன ரீதியிலான கட்சிகள கொண்ட தேசிய முன்னணியை புறக்கணித்து அனைத்து இனத்தவர்களையும் கொண்ட பல இன கட்சியை தேர்வு செய்யுங்கள், அப்போதுதான் மலேசியர்களின் வளர்ச்சியை உறுதி செய்ய முடியும் என கூறி வாக்குகளை வாங்கி இன்று ஆட்சி கட்டிலில அமர்ந்துள்ள பக்காத்தான் ஹராப்பான் ஆட்சியில் தான் எப்போதும் இல்லாத அளவுக்கு இனவாத கருத்து மோதல்கள் மேலோங்கியுள்ளன.

ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது செங்கலையம் மணலையும் கொட்டி எழுப்பப்பட்ட வானுயர்ந்த கட்டடங்களால் மட்டும் முழுமை பெற்று விடாது. சொந்த நாட்டு மக்களின் வாழ்வாதார, பொருளாதார சூழல் மேம்பாடு கண்டிருப்பதே முன்னேற்றத்தின் அளவுகோலாகும்

இனவாத அரசியலை தூக்கி போட்டு விட்டு மலேசியர் எனும் ரீதியில் அனைத்து மக்களின் வாழ்வாதாரத்தையும் உறுதி செய்யும் அரசாங்கத்தாலேயே 2030 இலக்கு சாத்தியதாகும்.

தலைவல்கள் மாறாத வரை மக்களின் தலையெழுத்தை யாராலும் சரியாக எழுத முடியாது. மக்களின் இன்றைய தலையெழுத்து திருத்தப்படாத வரை நாடு முன்னேறப்போவதில்லை; அதனூடே நாமும் வளரப்போவதில்லை.





No comments:

Post a Comment