Sunday 11 July 2021

வெள்ளைக் கொடியின் அர்த்தம் மக்களுக்கு தெரியாதா? சந்தேகம் எழுப்பும் குலாவின் காணொளி


ரா.தங்கமணி

கோலாலம்பூர்-
நாட்டை அண்மைய காலமாக உலுக்கி வரும் கோவிட்-19 வைரஸ் பெருந்தொற்று மக்களின் வாழ்வாதார சூழலை பாதித்துள்ளதோடு நாட்டின் அரசியல் நிலைத்தன்மையையும் சீர்குலைத்துள்ளது.

கோவிட்-19 பெருந்தொற்றை கட்டுப்பட்டுத்த கடந்த ஜூன் மாதம் முதல் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை 3.0 (எம்சிஓ 3.0) அமல்படுத்தப்பட்ட நிலையில் சில வாரங்களுக்கு முன்னர் வெள்ளை கொடி, கறுப்பு கொடி பிரச்சாரம் சூடுபிடித்திருந்தது.

எம்சிஓ 3.0 அமலாக்கத்தினால் வேலை இழந்து வருமானம் பாதிக்கப்பட்டோர் தங்களுக்கு உதவிகள் வேண்டும் எனும் நோக்கில் தங்களது வீடுகளில் வெள்ளைக் கொடியை பறக்கவிட்டனர்.

வெள்ளைக் கொடி பிரச்சாரம் மக்கள் மத்தியில் பிரபலமான நிலையில் பல குடும்பங்களுக்கு உதவிக்கரங்கள் நீண்டன. 'மக்களுக்காக மக்கள்' எனும் முழக்கத்துடன் இந்த வெள்ளைக் கொடி பிரச்சாரம் பல குடும்பங்களுக்கு கை கொடுத்துள்ளது.

அதே போன்று அரசியலை உள்ளடக்கி  கறுப்புக் கொடி பிரச்சாரம் சமூக ஊடகங்களில்  முன்னெடுக்கப்பட்டது. பிரதமர் பதவி விலக வேண்டும், நாடாளுமன்றம் கூட்டப்பட வேண்டும். அவசரகால சட்டம் நீக்கப்பட வேண்டும் என்ற கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு கறுப்புக் கொடி பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டது.

ஆனால் வெள்ளைக் கொடி, கறுப்புக் கொடி பிரச்சாரம் என்னவென்று தெரியாமல் மக்கள் குழம்பி போயுள்ளனர் என்ற கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் டிக் டாக் காணொளியை வெளியிட்டுள்ள ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.குலசேகரனின் செயல்தான் மக்களை மேலும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

பெருந்தொற்று காலத்தில் வருமானம் இழந்து தவிப்போரின் இன்னலை தீர்க்க தொடங்கப்பட்ட வெள்ளைக் கொடி பிரச்சாரத்தின் பயனாக மக்களுக்கான உதவித் திட்டங்களை பல சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், பொது இயக்கங்கள், தனி நபர்கள் என பல்வேறு தரப்பினர் ஆக்கப்பூர்வ நடவடிக்கையை முன்னெடுத்துக் கொண்டிருக்கும் நிலையில் வெள்ளைக் கொடியின் அர்த்தம் என்னவென்று மக்களுக்கு தெரியவில்லை என கூறுவது நியாயமாகுமா? வெள்ளைக் கொடிக்கான அர்த்தம் என்னவென்று கூட தெரியாத  அளவுக்கு மக்கள் மடையர்களாகவா இருக்கிறார்கள்? என்ற சந்தேகத்தை  குலாவின் காணொளி எழுப்புகிறது.

குலாவின் காணொளி 

22 மாத கால ஆட்சியில் என்ன செய்தோம், எதை செய்யாமல் விட்டோம் என்ற குழப்பத்தில் நீங்கள் (குலசேகரன்) வேண்டுமானால் இருக்கலாம். ஆனால் மக்களுக்கு எது தேவை என்பதை அறிந்து செயல்படக்கூடியவர்கள் நிறைய பேர் உள்ளனர்.

14ஆவது பொதுத் தேர்தலுக்கு முன்பு இருந்த மக்கள்தானே.  நாம் என்ன சொன்னாலும் வாய் மூடி கேட்டுக் கொண்டிருப்பார்கள்? என்ற எண்ணத்தில் என்ன வேண்டுமானாலும் பேசலாம் என்ற தோரணையில் காணொளி வெளியிட வேண்டாம் YB குலா.

அதேபோன்று மக்கள் இப்போதுதான் தெளிவாக உள்ளனர். யாரை நம்ப வேண்டும், யாரை ஆதரிக்க வேண்டும். யாரை புறந்தள்ள வேண்டும் என்று தெளிவாக சிந்தித்து செயல்படக்கூடிய அளவுக்கு மக்கள் தெளிவாக உள்ளனர். 

அரசியல்வாதிகளிடமே தெளிவாக சிந்தித்து செயல்படக்கூடிய நிலையில் இருக்கும் மக்களுக்கா வெள்ளைக் கொடியின் அர்த்தம் தெரியாது... விளக்குவீர்களா குலா.....? 

No comments:

Post a Comment