Thursday, 11 June 2020

திடீர் தேர்தலுக்கு தயார்- தேர்தல் ஆணையம்

கோலாலம்பூர்-
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிகளால் திடீர் பொதுத் தேர்தல் நடத்துவதற்கான சூழல் ஏற்பட்டால் அதனை எதிர்கொள்ள மலேசிய தேர்தல் ஆணையம் தயாராக இருப்பதாக அதன் ஆணையர் டத்தோ அஸார் அஸிஸான் ஹருண் தெரிவித்தார்.

அரசியல் சூழல் படுமோசமாக புகைந்துக் கொண்டிருக்கும் இக்கட்டான சூழலில் பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. ஆனால் தற்போது நாட்டில் நிலவும் கோவிட்-19 பிரச்சினைக்கு மத்தியில் திடீர் தேர்தல் நடத்துவதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். எப்போதும் விழிப்புடனே உள்ளோம் என்றார் அவர்.

தற்போதைய பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கம்  பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் அதன் அரசு கலைக்கப்பட்டு பக்காத்தான் ஹராப்பான் ஆட்சியை மீண்டும் கைப்பற்ற முயற்சித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

எம்சிஓ காலக்கட்டத்தில் 46.7% குற்றச்செயல்கள் குறைந்துள்ளன

கோலாலம்பூர்-
கோவிட்-19 வைரஸ் தொற்று காரணமாக நாட்டில் அமல்படுத்தப்பட்ட  MCO எனப்படும் நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணை , CMCO எனப்படும்  நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை ஆகிய காலகட்டங்களில் குற்றச்செயல்களின் விகிதம் பெருமளவு குறைந்துள்ளது.

இக்காலக்கட்டத்தில் 46.7 சதவீத குற்றச்செயல்கள் சரிவு கண்டுள்ளன என்று புக்கிட் அமான் குற்றவியல் புலனாய்வு பிரிவின் இயக்குனஎ ஹுஸீர் முகமட் தெரிவித்தார்.

எம்சிஓ அமல்படுத்தப்பட்ட 84 நாட்களில் 10,134 குற்றச்செயல்கள் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளன என்று குறிப்பிட்ட அவர், கடந்த காலத்தோடு ஒப்பிடும்போது இவ்வெண்ணிக்கை 19.014ஆக இருந்தது.

கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற வன்முறை குற்றங்கள், வாகனம் திருட்டு,ம் வழிப்பறி போன்ற சொத்துடைமை குற்றம் என இருவகைப்படும் இவ்வகை குற்றங்கள் எம்சிஓ காலகட்டத்தில் 46.7 விழுக்காடு அதாவது 8,880 குற்றங்கள் குறைந்துள்ளன என்று அவர் கூறினார்.

Wednesday, 10 June 2020

சொந்த ஊர்களுக்கு செல்வபவர்கள் எஸ் ஓபி-ஐ பின்பற்ற வேண்டும்

கோலாலம்பூர்-
வார இறுதி நாட்களில் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்ல விரும்புவர்கள் தர நிர்ணய செயல்பாட்டு முறையை (எஸ்ஓபி) பின்பற்ற வேண்டும் என்று தற்காப்பு முதன்மை அமைச்சர் டத்தோஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோர் தெரிவித்தார்.

கோவிட்-19 வைரஸ் தொற்று காரணமாக நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை (எம்சிஓ) அறிமுகம் செய்யப்பட்ட போது மாநிலம் கடந்து வேறு மாநிலங்களுக்கு செல்வது தடை செய்யப்பட்டது.

இப்போது இந்த கட்டுப்பாடு தளர்த்தப்பட்டுள்ள நிலையில் தங்களின் குடும்பத்தினரை பார்க்கச் செல்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயரும் என கணிக்கப்பட்டுள்ளது. அதுவும் இவ்வார இறுதி நாட்களின் இவ்வெண்ணிக்கை கூடுதலாக அமையும். 

ஆனால் சொந்த ஊர்களுக்குச் செல்பவர்கள் அரசாங்கம் அமல்படுத்தியுள்ள எஸ்ஓபி-ஐ முறையாக பின்பற்ற வேண்டும். ஆர்& ஆர் பகுதிகளில் கட்டாயம் எஸ்ஓ பி முறையை பின்பற்ற வேண்டும் என்பதோடு போலீசாரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுவர் என்று அவர் சொன்னார்.

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் மரணம்

சென்னை-

கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் (வயது 62) இன்று காலமானார்.

கொரோனா தொற்று பாதிப்பை அடுத்து விழிப்புணர்வு நடவடிக்கை, உதவி நலத்திட்டம் ஆகியவற்றை முன்னெடுத்து வந்த அன்பழகன் காய்ச்சல் காரணமாக குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

அவ்வப்போது உடல்நிலையில் முன்னேற்றம் கண்டு வந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் இன்று அதிகாலை மரணமடைந்தார்.

பிறந்தநாளான இன்று அவர் மரணம்  அடைந்துள்ளது திமுகவினரை வேதனைக்குள்ளாக்கியுள்ளது.

Tuesday, 9 June 2020

ஒரு வாரத்திற்குள் ஆட்சியை கைப்பற்றுவோம்- ப.ஹராப்பான் வியூகம்

கோலாலம்பூர்-
பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியிடமிருந்து ஆட்சியை கைப்பற்றும் வியூகமாகவே இன்றைய பக்காத்தான் ஹராப்பான் தலைமைத்துவ மன்றத்தின் கூட்டம் அமைந்துள்ளதாக ஆருடங்கள் வலுக்கின்றன.

ஒரு வார காலகட்டத்திற்குள் இந்த ஆட்சி மாற்றம் அரங்கேற்றப்படலாம். அதன் தொடர்பாக விவாதிக்கவே இன்றைய கூட்டம் நடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

பிகேஆர் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில் டத்தோஸ்ரீ அன்வாருடன் துன் மகாதீர், ஜசெக செயலாளர் லிம் குவான் எங், பக்காத்தான் கூட்டணி தலைவர்கள் கலந்து கொண்டனர்.

மகாதீரா? அன்வாரா?- பக்காத்தான் ஹராப்பானின் புதிய பிரதமர் வேட்பாளர் யார்?

கோலாலம்பூர்-

பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியில் புதிய பிரதமர் வேட்பாளர் துன் மகாதீரா? டத்தோஶ்ரீ அன்வாரா? என்பதன் மர்ம முடிச்சு இன்று மாலை தெரிய வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி தலைமைத்துவ மன்றத்தின் கூட்டம் இன்று நடைபெற்று வருகின்ற நிலையில் இக்கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் விவகாரமும் விவாதிக்கப்படலாம்.

அதில் பக்காத்தான் ஹராப்பான் புதிய கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் துன் மகாதீரா? டத்தோஶ்ரீ அன்வாரா? என்பது விவாதிக்கப்பட்டு இறுதி முடிவு எட்டப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிப்ரவரி மாதம் கவிழ்ந்த பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்கலாம் என ஆருடங்கள் வலுத்து வரும் நிலையில் அக்கூட்டணியை வழிநடத்திச் செல்லும் பிரதமர் வேட்பாளர் யார்? எனும் கேள்வி சில நாட்களாகவே ஊடங்களில் எழுப்பப்பட்டு வருகிறது.

மகாதீரை காட்டிலும் முஹிடினே மக்கள் விரும்பும் பிரதமர்- வீரன்

 ரா.தங்கமணி

கோலாலம்பூர்-
பிரதமர் பதவியில் துன் மகாதீரை காட்டிலும் டான்ஸ்ரீ முஹிடின் யாசினின் தலைமைத்துவம் சிறப்பானதாக அமைந்துள்ளதோடு மக்கள் விரும்பும் நல்லாட்சி வழங்கப்பட்டு வருவதாக மஇகா மத்திய செயலவை உறுப்பினர் மூ.வீரன் குறிப்பிட்டார்.

நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலின்போது பல்வேறு வாக்குறுதிகள் வழங்கப்பட்டு பக்காத்தான் ஹராப்பான் ஆட்சி அமைத்தது.

ஆனால் எதிர்பார்த்தப்படி மக்களுக்கான சிறந்த சேவையை வழங்க முடியாமல் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி தடுமாறியது.

பிரதமர் துன் மகாதீரின் தலைமைத்துவம் மக்களுக்கு சோதனை நிறைந்த ஆட்சியை வழங்கிய நிலையில் மக்கள் உதவித் திட்டங்களுக்குக்கூட பணம் இல்லை என சாக்குப்போக்கு சொல்லப்பட்டது.

ஆனால் டான்ஸ்ரீ முஹிடின் பிரதமராக பொறுப்பேற்ற காலகட்டம் மிகவும் சவாலானது ஆகும்.

நாட்டில் நிலைத்தன்மையில்லா அரசியல் சூழலோடு கோவிட்-19 வைரஸ் தொற்று பாதிப்பும் அதிகரிக்கத் தொடங்கிய காலகட்டம் அது.

பொருளாதாரச் சவால் நிறைந்த சூழலிலும் மக்கள் பாதுகாப்பு முக்கியமானது எனும் நிலைப்பாட்டில் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை (எம்சிஓ) அமல்படுத்திய டான்ஸ்ரீ முஹிடின், மக்களுக்கான உதவித் திட்டத்தை அறிமுகப்படுத்தியதோடுபொருளாதார மீட்சிக்கான திட்டத்தையும் வகுத்தார்.

4ஆவது பிரதமர், அரசியல் முதிர்ச்சி பெற்றவர் என்பதை தாண்டி கடந்த ஈராண்டு கால பக்காத்தான் ஹராப்பான் ஆட்சியில் தோல்வி கண்ட பிரதமராக துன் மகாதீர் திகழ்கிறார்.

ஆனால் மூன்று மாத கால ஆட்சியில் மக்களுக்கான திட்டங்களை வகுத்து மக்களை பாதுகாத்து பொருளாதாரத்தையும் வலுபடுத்தி மக்கள் விரும்பும் பிரதமராக டான்ஸ்ரீ முஹிடின் யாசின் திகழ்கிறார் என்று தைப்பிங் மாநகர் மன்ற உறுப்பினருமான வீரன் திகழ்கிறார்.

1,500 பேருக்கு உதவிக்கரம் நீட்டியது மஇகாவின் 'உதவி' செயலி

ரா.தங்கமணி

சுங்கை சிப்புட்-
கோவிட்-19 வைரஸ் தொற்றால் நாடு முழுவமும் நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணை அமலாக்கம் செய்யப்பட்ட நிலையில் வருமானம் இன்றி பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள பி40 குடும்பத்தினருக்கு உதவிடும் வகையில் 'உதவி' எனும் செயலியை மஇகா அறிமுகம் செய்தது.

மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் தலைமையில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த செயலியின் வழி வறுமைக் கோட்டில் வாழும் மக்களுக்கு உதவிப் பொருட்கள் வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

அவ்வகையில் சுங்கை சிப்புட் தொகுதி மஇகாவின் சார்பாக கோவிட்-19 பேரிடர் கால உதவியாக 1,500 குடும்பங்களுக்கு உதவிப் பொருட்கள் வழங்கப்பட்டதாக சுங்கை சிப்புட் மஇகா செயலாளர்கி.மணிமாறன் தெரிவித்தார்.

இவ்வட்டாரத்தில் உள்ள பி40 பிரிவுக்குட்பட்ட குடும்பத்தினருக்கு உதவிடும்  நடவடிக்கையாகவே இது அமைந்துள்ளது.

டான்ஸ்ரீ விக்னேஸ்வரன், மஇகா தலைமைத்துவம் முன்னெடுக்கும் இத்தகைய நடவடிக்கை வறிய குடும்பத்தினருக்கு பேருதவியாக அமைந்திருக்கிறது என்று மணிமாறன் மேலும் தெரிவித்தார்.

''பிரதமர் பதவியில் 100 நாட்கள்''- டான்ஶ்ரீ முஹிடின் சறுக்கினாரா? சாதித்தாரா?

ரா.தங்கமணி

நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலுக்குப் பின்னர் ஆட்சியமைத்த பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியின் பதவிக்காலம் இவ்வாண்டு பிப்ரவரி மாதம் கவிழ்க்கப்பட்டது. ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பின்னர் இடைக்காலப் பிரதமராக துன் மகாதீர் நியமிக்கப்பட்டபோதிலும் பெரும்பான்மை நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை பெற்ற ஒருவரை பிரதமராக நியமிக்கப்பட வேண்டிய கட்டாயத்தில் நாட்டின் மாமன்னர் தள்ளப்பட்டார்.
அதன் அடிப்படையில் பல்வேறு அரசியல் சர்ச்சைகளுக்கு மத்தியில் நாட்டின் 8ஆவது பிரதமராக நியமனம் செய்யப்பட்டார் டான்ஶ்ரீ முஹிடின் யாசின்.

பக்காத்தான் கூட்டணியிலிருந்து விலகி அம்னோ, பாஸ், டத்தோஶ்ரீ அஸ்மின் அலி ஆதரவாளர்கள், சபா, சரவாக் கட்சிகள் ஆகியவற்றின் பேராதரவோடு பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கத்தை அமைத்தார் டான்ஶ்ரீ முஹிடின் யாசின்.
மார்ச் 2ஆம் தேதி பிரதமராக பதவியேற்றுக் கொண்ட டான்ஶ்ரீ முஹிடின் நேற்றுடன் (ஜூன் 8) தனது 100 நாட்கள் பணியை நிறைவு செய்துள்ளார்.
பிரதமராக பதவியேற்றுக் கொண்டவர்களில் யாரும் சந்திக்காத மிகப் பெரிய சவால்களுக்கு போராட்டங்களுக்கும் மத்தியில் தனது பதவி பிரமாணத்தை செய்துக் கொண்ட முஹிடின் யாசின், அரசியல் போர்களத்துக்கு மத்தியில் உயிர்கொல்லி நோயான  கோவிட்-19 வைரஸ் தொற்று பாதிப்புகளிலிருந்து மக்களை பாதுகாக்க வேண்டிய மிகப் பெரிய கடப்பாட்டுக்குள் தள்ளப்பட்டார்.

அரசியல் களம் போராட்டமானது என்றாலும் கூட மக்களின் உயிர் அலட்சியப்படுத்தி விடக்கூடாது எனும் நோக்கில் மக்கள் நலன் காக்கப்பட மார்ச் 18ஆம் தேதி தொடக்கம் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை நாடு முழுமைக்கும் அமல்படுத்தினார்.

வருமானம் இன்றி மக்கள் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காக  "PRIHATIN" திட்டத்தை அறிமுகம் செய்து மக்களுக்கு உதவிநிதிகளை வழங்கினார். மக்கள் மட்டும் போதுமா? தொழில் நிறுவனங்கள் பொருளாதார நிலையில் பின் தங்கி விடக்கூடாது என்பதற்காக உதவித் திட்டங்களையும் "PENJAJA" திட்டத்தையும் அறிவித்தார்.
கோவிட்-19 வைரஸ் தொற்று ஒரு முடிவு காணப்பட்டாலும் அரசியல் ரீதியிலான போராட்டங்களை சந்திக்க வேண்டிய இக்கட்டான சூழல் டான்ஶ்ரீ முஹிடினை நெருக்கியது.

ஒரு பக்கம் ஆட்சி, மறுபக்கம் கட்சி என இருதலை கொள்ளியாய் தவித்த முஹிடின் யாசின்  ஆக்ரோஷமாக களம் காண துணிந்தார். அதில் ஒன்றுதான் பெர்சத்து கட்சியின் அவைத் தலைவர் துன் மகாதீர் உட்பட ஐந்து பேரை கட்சியிலிருந்து நீக்கினார்.
ஆட்சியும் கட்சியும் தன்  வசம் மட்டுமே இருக்க வேண்டும் என்ற அரசியல் சாணக்கியத்தனத்தில் எதிரிகளை துவம்சம் செய்து தற்போது வெற்றி நாயகனாய் அரசியல் களத்தில் உலாவ தொடங்கியுள்ளார்.

நம்பிக்கை துரோகம், ஆட்சி கவிழ்ப்பு, கட்சி அதிகாரம் என சில இடங்களில் சறுக்கினாலும் கோவிட்-19 வைரஸ் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கை, ,மக்களுக்கான உதவிநிதி திட்டங்கள், நாட்டின் பொருளாதாரத்திற்கான திட்டமிடல், ஆட்சியை தக்கவைக்க போராட்டம் என மக்கள் மத்தியில் ஒரு சாதனை பிரதமராக டான்ஶ்ரீ முஹிடின் யாசின் திகழ்கிறார்.

இந்த 100 நாட்களின் அரசியல் எவ்வளவு சூடாக இருந்ததோ அதை விட பிரபலமானது "Ke Sana Ke Sini" என்ற டான்ஶ்ரீ முஹிடின் உதிர்த்த வார்த்தைகள் தான்.

100 நாட்களை கடந்த பிரதமர் டான்ஶ்ரீ முஹிடின் யாசினுக்கு "பாரதம்" இணைய ஊடகம் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறது.

Monday, 8 June 2020

அணி தாவும் 'தவளை'களை தடுக்க சட்டம் இயற்றுக- ராய்டு கோரிக்கை

ரா.தங்கமணி

ஷா ஆலம்-
மக்களின் வாக்குகளை பெற்று சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களின் சுயலாபத்திற்கா 'அசி மாறும் தவளைகளாக' உருவெடுப்பதை தடுக்க சட்டம் இயற்றப்பட வேண்டும் என்று மலேசிய இந்தியர் குரல் அமைப்பின் ஆலோசகர் வீ.ராயுடு வலியிறுத்தினார்.

நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலில் நம்பிக்கையின் அடிப்படையில்  மக்களினம் வாக்குகளை பெற்று மக்கள் பிரதிநிதிகளாக உருவெடுத்தவர்களு இன்று நம்பிக்கை துரோகிகளாக மாறியுள்ளனர்.

பெரும் எதிர்பார்ப்பில் மக்கள் தேர்ந்தெடுத்த பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியை கவிழ்க்க சுயநலவாதிகள் 'தவளைகளாக' மாறியுள்ளனர்.

கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற மக்கள பிரதிநிதிகள் அனைவரும் தங்களின் சுய அடையாளத்தில் வெற்றி பெறவில்லை. மாறாக கட்சியின் சின்னம், போட்டியிடும் கூட்டணியின் அடிப்படையிலேயே வெற்றி தீர்மானிக்கப்பட்டது.

நிலையை இவ்வாறு இருக்க வெற்றி பெற்ற பின் அணி மாறுவதும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை கவிழ்த்து புதிய ஆட்சியை அமைப்பதும் ஜனநாயக நாட்டில் தவறான முன்னுதாரணமாகும்.

இதனை தடுக்கும் வகையில் கட்சி தாவல் தடை சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட வேண்டும்.

கட்சி தாவல் செய்யும் மக்கள் பிரதிநிதியின் பதவி பறிக்கப்படுவதோடு கடுமையான அபராதமும் தண்டனையும் விதிக்கப்பட வேண்டும்.

அப்போதுதான் ஜனநாயக நாட்டில் பொதுத் தேர்தல் மீது மக்கள் மத்தியில் ஒரு நம்பிக்கை பிறக்கும் என்று ராய்டு தெரிவித்தார்.

Sunday, 7 June 2020

பேராவில் களமிறங்குவாரா டான்ஸ்ரீ விக்கி?

ரா.தங்கமணி

கோலாலம்பூர்-
சபாநாயகர் பதவியிலிருந்து இம்மாதம் விலகும் மஇகா தேசியத்  தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் மஇகாவை வலுபடுத்தும் தீவிர முயற்சியில் களம் கண்டு வருகிறார்.

பக்காத்தான் ஹராப்பான் ஆட்சி கவிழ்ந்து பெரிக்காத்தான் நேஷனல் ஆட்சியமைந்துள்ள இந்த சூழலில் மஇகா வலுபெறவுள்ளதை உறுதி செய்யும் களப்பணியை அவர் மேற்கொண்டு வருகிறார்.

அதன் அடிப்படையில் மஇகாவுக்கான அங்கீகாரம் கிடைப்படுவதோடு இந்தியர்களின் நலனும் பாதுகாக்கப்பட வேண்டும் எனும் மாநில ரீதியிலான தமது பயணத்தை தொடங்கியுள்ளார்.

அண்மையில் பகாங் மாநில மந்திரி பெசாரைச் சந்தித்த டான்ஸ்ரீ விக்னேஸ்வரன், அம்மாநில இந்தியர்களின் பிரச்சினைக்கு முன்னுரிமை கொடுத்து அதற்கு தீர்வு காண வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார்.

அதேபோன்று ஜொகூர் மாநில மந்திரி பெசாரையும் சந்தித்துள்ள டான்ஸ்ரீ விக்கி, அதே கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

இந்திய சமுதாயத்தின் நலன் கருதி மாநிலந்தோறும் வருகை மேற்கொள்ளும் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் பேரா மாநிலத்திற்கும் வருகை புரிய வேண்டும்.

பேரா மாநிலம் மஇகாவுக்கு என்றுமே சிறப்பானதாகும்.

மஇகாவின் 5ஆவது தேசியத் தலைவர்  துன் வீ.தி.சம்பந்தன் பிறந்ததும் மஇகாவின் முன்னாள் தேசியத் தலைவர் துன் ச.சாமிவேலு நாடாளுமன்ற உறுப்பினராகவும் பதவி வகித்ததும் பேரா மாநிலத்தில் உள்ள சுங்கை சிப்புட்டில் தான்.

தற்போது மனிதவள அமைச்சராக உள்ள டத்தோஸ்ரீ எம்.சரவணன் கூட பேரா மாநிலத்தில் உள்ள தாப்பா தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார்.

இத்தனை பெருமைகளை கொண்டுள்ள பேரா மாநில அரசில் மஇகாவின் பிரதிநிதி யாரும் இல்லாத நிலையில் கடந்த இரு தவணைகளாக வழங்கப்பட்டு வந்த மந்திரி பெசாரினர சிறப்பு ஆலோசகர், சிறப்பு அதிகாரி ஆகிய பதவிகளில் இன்னமும் மஇகா பிரதிநிதிகள் நியமிக்கப்படாமல் இருப்பது பல கேள்விகளை உருவாக்கி வருகிறது.

2008ம் ஆண்டு பொதுத் தேர்தலுக்குப் பின்னர் பக்காத்தான் ராக்யாட்டிடமிருந்து 2009இல் ஆட்சியை கைப்பற்றிய தேசிய முன்னணி அரசில் மஇகா சட்டமன்ற உறுப்பினர்கள் யாரும் இல்லாததால் டான்ஸ்ரீ எஸ்.வீரசிங்கம் மந்திரி பெசாரின் சிறப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டார்.

அதன் பின்னர் 2013ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்குப் பின்னர் லுமூட் தொகுதி மஇகா தலைவர் டத்தோ வ.இளங்கோ சிறப்பு ஆலோசகராக நியமனம் செய்யப்பட்டார்.

ஆனால் இப்போது பக்காத்தான் ஹராப்பானிடமிருந்து ஆட்சியை கைப்பற்றிய பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியில் மஇகா அங்கத்துவம் பெற்றிருக்கும் நிலையில் மந்திரி பெசாரின் சிறப்பு ஆலோசகர் பதவி இன்னமும் மஇகாவுக்கு ஊசலாடிக் கொண்டிருக்கிறது.

சிறப்பு ஆலோசகர், சிறப்பு அதிகாரி ஆகிய பதவிகளை மஇகாவுக்கு உறுதி செய்ய டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் பேரா மாநிலத்திற்கு களமிறங்க வேண்டும்.

அதன்வழி பேரா மஇகாவும் இம்மாநிலத்தில் உள்ள இந்தியர்களுக்கும் ஒரு ஆக்ககரமான நடவடிக்கையை முன்னெடுக்க இது வழிவகுக்கலாம்.

நீங்க வரணும் டான்ஸ்ரீ...

வழங்கப்பட்ட மானியத்தில் அல்ல; மானியம் ஒதுக்கப்படுவதிலேயே குளறுபடி- கணபதிராவ் சாடல்

ரா.தங்கமணி

ஷா ஆலம்-
இந்திய சமுதாயத்திற்காக வழங்கப்பட்ட மானியம் முறையாக வழங்கப்பட்டதா? என்ற கேள்வியை விட இந்திய சமுதாயத்திற்கு அரசாங்கம் ஒதுக்கீடு செய்யும் மானியம் முறையாக வந்து சேர்கிறதா? என்பதே இப்போதைய கேள்வியாகும் என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் வலியிறுத்தினார்.

இந்திய சமுதாயத்தின் பொருளாதார மேம்பாட்டுக்காக 11ஆவது மலேசிய திட்டத்தின் கீழ் வெ.500 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

2016 முதல் 2020 வரை ஒவ்வோர் ஆண்டுக்கும் வெ.100 மில்லியன் வழங்கப்படுகின்ற நிலையில் இந்த நிதி முறையாக இந்திய சமுதாயத்தை வந்து சேர்ந்ததா? என்பதே எனது கேள்வியாகும்.

இந்திய சமுதாயத்தின் பொருளாதார திட்டமிடலுக்காக உருவாக்கப்பட்ட செடிக், அதன் பின்னர் மித்ரா ஆகிய அமைப்புகளுக்கு அரசாங்கம் அறிவித்தபடி ஒவ்வோர் ஆண்டும் வெ.100 மில்லியன் வந்தடைந்ததா? எனும் ஆய்வு செய்தால் 50 முதல் 60 விழுக்காடு மட்டுமே ஒதுக்கப்படுகிறது எனும். அதிர்ச்சிகரமான தகவல் கிடைக்கிறது.

அரசாங்கத்திடமிருந்து கிடைக்கப்பட வேண்டிய முழு ஒதுக்கீடும் இந்தியர்களுக்காக தோற்றுவிக்கப்பட்ட அமைப்புகளிடம் வந்து சேராத்தை இந்திய சமுதாயம் உணர வேண்டும் என்பதை தமது எண்ணமாகும்.

தனிபட்ட முறையில் பிறரை சாடுவதோ குறை கூறுவதோ தன்னுடைய நோக்கமல்ல என விவரித்த கணபதிராவ், செடிக், மித்ரா ஆற்ற தவறிய கடமைகள் குறித்து விரைவில்  கேள்வி எழுப்புவேன்.

ஆனால், அதற்கு முன்னதாக அரசாங்க அளவில் அறிவிப்புகளில் ஒதுக்கப்படும் மானியம் உண்மையிலேயே இந்திய சமுதாயத்திற்காக அரசாங்கம் செலவிடுகிறதா? என்ற உண்மையை ஒவ்வொரு இந்தியரும் உணர்ந்து கொள்ள வேண்டும் என்று கணபதிராவ் மேலும் சொன்னார்.

Thursday, 4 June 2020

மித்ரா மானியம்: இந்தியர்களுக்கு மிஞ்சியது துரோகமே!- கணபதிராவ் குற்றச்சாட்டு

ரா.தங்கமணி

கோலாலம்பூர்-
இந்திய சமுதாயத்தின் பொருளாதார மேம்பாட்டுக்காக உருவாக்கப்பட்ட அமைப்பான  மித்ராவின் வழி மிகப் பெரிய துரோகம் இந்நாட்டு இந்தியர்களுக்கு இழைக்கப்பட்டுள்ளது என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் குற்றஞ்சாட்டினார்.

11ஆவது மலேசியா திட்டத்தின் கீழ் இந்திய சமுதாயத்தின் பொருளாதார மேம்பாட்டுத் திட்டத்திற்காக கடந்த 2016 முதல் 2020 வரை
அனைவரும் நன்கு அறிந்த மித்ராவின் (இதற்கு முன் 'செடிக்' என்று அழைக்கப்பட்டது) வழி வெ.500 மில்லியன் (50 கோடி வெள்ளி) ஒதுக்கீடு செய்யப்பட்டு வந்தது.

இவ்வமைப்பின் திட்டங்களுக்காக ஒவ்வோர் ஆண்டும் வெ.100 மில்லியன் (10 கோடி வெள்ளி) இந்திய சமுதாயத்தின் பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்டு வந்தது.

ஆனால், இந்த 500 மில்லியன் வெள்ளி ஒதுக்கீட்டில் பாதியளவு கூட இந்திய சமுதாயத்தைச் சென்றடையாதது உண்மையிலேயே இச்சமூகத்திற்கு இழைக்கப்பட்ட மிகப் பெரிய துரோகமாகும்.

நம்பதகுந்த தரப்பிலிருந்து மித்ரா (செடிக்) அமைப்புக்கு எவ்வளவு பணம்  கிடைத்தது, அதில் எவ்வளவு செலவிடப்பட்டது, திருப்பி அனுப்பப்பட்ட தொகை எவ்வளவு போன்ற தகவல்கள் கிடைத்துள்ளன.

2016:  வெ. 100 மில்லியன் ஒதுக்கீடு
கிடைத்தது: வெ.60 மில்லியன்
செலவிடப்பட்டது: வெ.35 மில்லியன்
திருப்பி அனுப்பபட்டது: வெ. 25 மில்லியன்
பயன்படுத்தப்படாத மொத்த தொகை: வெ.65 மில்லியன்

2017: வெ.100 மில்லியன் ஒதுக்கீடு
கிடைத்தது:  வெ.67 மில்லியன்
செலவிடப்பட்டது: வெ.58 மில்லியன்
திருப்பி அனுப்பப்பட்டது: வெ. 9 மில்லியன்
பயன்படுத்தப்படாத மொத்த தொகை: வெ.42 மில்லியன்.

2018: வெ.100 மில்லியன் ஒதுக்கீடு
கிடைத்தது: வெ. 100 மில்லியன்
செலவிடப்பட்டது: வெ. 1 மில்லியன்
திருப்பி அனுப்பப்பட்டது: வெ. 99 மில்லியன்
பயன்படுத்தப்படாத மொத்த தொகை: வெ. 99 மில்லியன்

2019: வெ. 100 மில்லியன் ஒதுக்கீடு
 கிடைத்தது: வெ.100 மில்லியன்
செலவிடப்பட்டது: வெ. 56 மில்லியன்
திருப்பி அனுப்பப்பட்டது: வெ. 44 மில்லியன்
பயன்படுத்தப்படாத மொத்த தொகை: 44 மில்லியன்

2020: வெ.100 மில்லியன் ஒதுக்கீடு
கிடைத்தது: வெ.100 மில்லியன்
செலவிடப்பட்டது: தகவல் இல்லை
திருப்பி அனுப்பப்பட்டது : தகவல் இல்லை
பயன்படுத்தப்படாத மொத்த தொகை: தகவல் இல்லை.

இந்த தரவுகளின் வழி செடிக் நிர்வாகத்தின் போது 2016-2017ஆம் ஆண்டுகளில் இந்திய சமூகத்திற்காற ஒதுக்கப்ட்ட நிதியில் 60% தொகை மட்டுமே கிடைக்கப்பெற்றுள்ள நிலையில் முழுமையான தொகை ஏன் வழங்கப்படவில்லை?

தேசிய முன்னணி அரசாங்க நிர்வாகத்தின் போது அறிவித்த தொகையில் அரையளவு மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது இந்திய சமுதாயத்தை ஏமாற்றியதாக பொருள்படாதா? கொடுக்கப்படாத மீதப் பணம் எங்கே போனது?

வழங்கப்பட்ட பாதியளவு தொகையை கூட முழுமையாக செலவிட முடியவில்லை என்பது நகைப்புக்குரியதாக உள்ளது.

இப்படி முழுமையாக செலவிடப்படாததற்கு காரணம் இந்த நிதி தேவைப்படவில்லையா? அல்லது இந்த பணம் செலவிடப்பட முடியாத வகையில் இந்திய சமுதாயம் பொருளாதாரத்தில் மேம்பாடு கண்டு விட்டதா?

அதேபோன்று தான் 2018ஆம் ஆண்டிலும் ஒதுக்கப்பட்ட நிதி முழுமையாக செலவிடப்படவில்லை.14 ஆவது பொதுத் தேர்தலுக்குப் பின்னர் 'செடிக்' உருமாற்றம் கண்டு 'மித்ரா'வாக மாறிய நிலையில் முழுமையான ஒதுக்கீடு கிடைக்கப்பெற்றும் அதனை முழுமையாக செலவிடவில்லை. 2019இலும் முழுமையான தொகையை செலவிடவில்லை.

99% நிதியை முழுமையாக செலவிட்டோம் என்று முன்னாள் அமைச்சரும் மித்ராவும் சொல்லி கொண்டே இருக்கின்றனர். 2019இல் தாமதமாக நிதி கிடைத்ததால் பயன்படுத்தாத நிதி திரும்ப ஒப்படைக்கப்பட்டது என காரணம் கூறும் நிலையில், அவ்வாண்டில் உண்மையிலேயே நிதி தாமதமாகத்தான் கிடைத்ததா என்ற பெரும் கேள்விக்கு பதில் கூற முடியுமா?

11ஆவது மலேசிய திட்டத்தின் கீழ் செடிக், மித்ரா ஆகியவற்றின் வாயிலாக இந்திய சமுதாயத்திற்கான 50% ஒதுக்கீடு வீண்டிக்கப்பட்டுள்ளது.
இது இந்திய சமுதாயத்திற்கு ஏற்பட்ட பேரிழப்பாகும்.

இப்படி வெறுமனே வீண்டிக்கப்பட்டுள்ள இந்த நிதியை ஆளும்கட்சி, எதிர்க்கட்சியைச் சேர்ந்த் இந்திய சட்டமன்ற,நாடாளுமன்ற உறுப்பினர்களின் வழி இந்திய சமுதாயத்திற்கு பயனுள்ள திட்டங்களை மேற்கொண்டிருக்கலாம்.

இந்த நிதி அறிவிக்கப்பட்டது முதல் இந்நாள் வரையிலும் இந்திய சமுதாயத்தின் பொருளாதார மேம்பாட்டு திட்டங்களுக்கான எவ்வித முறையான திட்டமிடலும் மித்ராவிடமோ, ஒற்றுமை துறை அமைச்சிடமோ அல்லது இந்திய மக்கள் பிரதிநிதிகளிடமோ இல்லை என்பதுதான் உண்மை.

சிலாங்கூர் மாநிலத்தில் சமூக பொருளாதார மேம்பாட்டு பிரிவுக்கு ஆட்சிக்குழு உறுப்பினராக பொறுப்பேற்றிருக்கும் என்னை பொறுத்தவரை இது மிகப் பெரிய இழப்பு ஆகும். 11 ஆவது மலேசிய திட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்ட ஏறக்குறைய 248 மில்லியன் வெள்ளி செலவிடப்படாத நிலையில்  2021ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் 12 மலேசிய திட்டம் அறிவிக்கப்படும் சூழலில்ப பயன்படுத்தப்படாமல் திரும்ப அனுப்பப்பட்ட தொகை இந்திய சமுதாயத்தை மீண்டும் வந்து சேராது.

இந்திய சமுதாயத்திற்கான இழப்புகள் நிறைவு பெறாதா? தேமு, பிஎன் இந்திய சமூகத்திற்கான துரோகச் செயல்கள் இன்னும் தொடர்கதையாகுமா?

இந்த 248 மில்லியன் ஒதுக்கீட்டை இந்திய சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் வழங்கியிருந்தாலே போதும், கோவிட்-19 காலத்தில் பெரும் பாதிப்பை எதிர்நோக்கியுள்ள இந்திய சமுதாயத்திற்கு பல்வேறு வகையில் உதவிகள் புரிந்திருக்கலாம் என்று கணபதிராவ் தமது ஆதங்கத்தை வெளிபடுத்தினார்.