Sunday, 18 June 2017

பகடிவதையும், குண்டர் கும்பல்தனமும் விஷம் போல் ஊடுருவியுள்ளது - டத்தோஶ்ரீ சுப்ரா

கோலாலம்பூர்-
இன்றைய இளைய சமுதாயத்தினரிடையிலும், பள்ளிகளிலும் விஷமென ஊடுருவி வரும் குண்டர் கும்பல்தனம், பகடி செய்வது போன்ற கலாச்சாரங்களை ஆரம்பத்திலேயே கிள்ளி எறிய வேண்டும் என சுகாதார அமைச்சரும் மஇகா தேசியத் தலைவருமான டத்தோஶ்ரீ டாக்டர் எஸ்.சுப்பிரமணியம் தெரிவித்தார்.

சக மாணவர்களால் தாக்கப்பட்ட தி.நவீன், அந்தத் தாக்குதல்கள் காரணமாக மரண்மடைந்தார் என்ற அதிர்ச்சி தரும் செய்தி, என்னை நிலைகுலைய வைத்துவிட்டது. அந்த சம்பவத்தை அணுக்கமாகப் பின்பற்றி வந்த மலேசியர்களையும் துயரத்துக்குள்ளாக்கியிருக்கிறது நவீனின் மறைவு.

நவீனை இழந்து வாடும் அவரதுபெற்றோர்களுக்கும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களின் சோகத்தையும், இழப்பின் வலியையும் நாம் வார்த்தைகளால் விவரிக்க முடியாது.

தங்கள் குடும்பத்தின் இளைய வயது மகனின் எதிர்காலம் குறித்து கனவுகளோடும் நம்பிக்கைகளோடும் வாழ்ந்திருந்த அந்தக் குடும்பத்தினருக்கு நாம் கூறும் எத்தகைய ஆறுதல் வார்த்தைகளும் இழப்பை ஈடு செய்ய முடியாது.

இந்தக் கொடிய குற்றத்தை நிகழ்த்தியவர்கள் மீது சட்டம் முழுமையாகப் பாயவேண்டும், அதற்குரிய தண்டனையை அவர்கள் பெற வேண்டும் என வலியுறுத்த விரும்புகிறேன்.


பகடிவதை, குண்டர் கும்பல்தனத்தை சம்பந்தப்பட்ட அரசாங்க இலாக்கள் தடுத்து நிறுத்த வேண்டும் என்பதையும், இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமலிருக்க தீவிரமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தேவை என்பதையும் நவீனின் இழப்பு நமக்கு வலியுறுத்துகிறது என அவர் தனது அனுதாபச் செய்தியில் குறிப்பிட்டார்.

பகடிவதைக்கு நவீனின் மரணமே இறுதியாகட்டும் - டத்தோஶ்ரீ தேவமணி


கோலாலம்பூர்-
இளைஞர் நவீனின் மரணம் பகவடிவதைக்கான முற்றுப்புள்ளியாக அமைய வேண்டும் என பிரதமர் துறை துணை அமைச்சர் டத்தோஶ்ரீ எஸ்.கே.தேவமணி தெரிவித்தார்.

பகடிவதைக்கு ஆளான நவீனின் மரணம் அனைவரிடத்திலும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு நமது சமூகத்தின் நாகரீகத்தையும் நற்பண்புகளையும் கேள்விக்குறியாக்கியுள்ளது.

நமது சமுதாயம் பல்வேறு நிலைகளில் வீழ்ச்சி கண்டு வருகிறது. இந்நிலையில் முன்னோர்கள் சொல்லி கொடுத்த நாகரீகத்தையும் நற்பண்புகளையும் கேள்விக்குறியாக்கும் வகையில் இன்றைய இளைஞர்கள் நடவடிக்கை அமைந்துள்ளது வேதனைக்குரிய ஒன்றாகும்.

மிகவும் கீழ்த்தரமான முறையில் மேற்கொள்ளப்பட்டுள்ள பகடிவதை பலியாகியுள்ள நவீனின் மரணமே கடைசியாக அமைய வேண்டும். பகடிவதைக்கும் குண்டர் கும்பலுக்கும் தொடர்பு உள்ளதால் இதனை களைவதற்கு அனைவரும் ஒன்றிணைந்து ஆக்கப்பூர்வமான நடவடிக்கையை முன்னெடுக்க வேண்டும் மஇகா துணைத் தலைவருமான டத்தோஶ்ரீ தேவமணி குறிப்பிட்டார்.

Saturday, 17 June 2017

குற்றவாளிகளுக்கு தேவை கடும் தண்டனை - ஆவேசக் குரல்களின் வேதனை


ஈப்போ-
தனியார் கல்லூரியில் இசை அமைப்பாளருக்கான  உயர்கல்வியை பயிலவிருந்த பினாங்கைச் சேர்ந்த தி.நவீனின் (வயது 18) மரணம் பல்வேறு தரப்பினரிடம் ஆவேசத்தையும் அதிருப்தி அலையையும் ஏற்படுத்தியுள்ளது.


கடந்த சனிக்கிழமை 5 மாணவர்களால் பகடிவதைக்கு உள்ளாகி மிக கொடூரமாக தாக்கப்பட்ட நவீன், சிகிச்சை பலனளிக்காமல் நேற்று மரணமடைந்தார்.

இசைத்துறையில் சாதிக்க வேண்டும் என்ற லட்சியத்தைக் கொண்டிருந்த  நவீனின் மரணத்திற்கு நியாயம் வேண்டும், குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்ற ஆவேசக் குரல் எதிரொலிக்க தொடங்கியுள்ளது.

துன்புறுத்தப்படும்போது நவீன் அனுபவித்த வேதனைகளை அந்த ஐந்து பேரும் உணரும் வகையில் கடுமையான தண்டனை விதிக்கப்பட வேண்டும்.


இந்த ஐவருக்கும் வாழ்நாள் முழுவதும் சிறைத் தண்டனையும் மரண வேதனையை ஏற்படுத்தக்கூடிய பிரம்படி தண்டனையையும் இல்லையேல் மரண தண்டனை வழங்க வேண்டும் என அபிராம் சமூக நல இயக்கத்தின் தலைவர் சண்முகம், திருமதி மகேஸ்வரி, திருமதி லெட்சுமி நாயர், சரவணன், செல்வி விலாஷினி, செல்வி அபிராமி, செல்வி ரஞ்சினி, திருமதி வேணி, விஜியன், சிவா, கவியரசன், பாலமுருகன், ஜீவன் ஆகியோர் தங்களது ஆதங்கத்தை வெளிபடுத்தினர்.

இளைஞர் நவீன் மீது கொடூரத் தாக்குதல் நடத்திய ஐவருக்கு எதிராக வழங்கப்படும் தண்டனை குண்டர் கும்பல் நடவடிக்கைக்கு முற்றுப்புள்ளியாக அமைய வேண்டும் எனவும் நவீனின் மரணம் மூலம் பகடிவதையின் விபரீதம் அனைவருக்கும் ஒரு பாடமாக அமைந்திட வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர்.

Friday, 16 June 2017

'லட்சிய இளைஞனை நாடு இழந்துள்ளது' - ஐஜிபி காலிட்


கோலாலம்பூர்-
18 வயதான தி.நவீன் மரணமடைந்தன் மூலம் 'லட்சிய இளைஞனை நாடு இழந்துள்ளது' என தேசிய போலீஸ் படைத் தலைவர் டான்ஶ்ரீ காலிட் அபு பக்கார் தனது அனுதாபத்தை தெரிவித்துள்ளார்.

நவீனின் மரணம் எனக்கு வருத்தத்தையும் அதிர்ச்சியையும் உண்டாக்கியுள்ளது. அந்த இளைஞனின் குடும்பம் அடைந்துள்ள துன்பத்தை ஒரு தந்தையாக மிகப் பெரிய துயரமாக உணர்கிறேன்.

'அவரது குடும்பம் ஒரு மகனை இழந்திருக்கலாம். ஆனால் இந்நாடு ஒரு லட்சிய இளைஞனை இழந்துள்ளது'.  நவீனுக்கு இழைக்கப்பட்ட கொடூரத்தில் நீதி நிலைநாட்டப்படும் என டான்ஶ்ரீ காலிட் குறிப்பிட்டார்.

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானை 'ரோல் மாடலாக' கொண்ட நவீன், இசைத்துறையில் சாதிக்க வேண்டும் என்ற லட்சியத்தை கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நவீன் மரணம்: கொலை குற்றமாக மாறுகிறது விசாரணை - ஐஜிபி தகவல்


கோலாலம்பூர்-
மூளைச் சாவடைந்த நிலையில் மருத்துவமனையின் தீவிர கண்காணிப்புப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த தி.நவீன் (வயது 18) மரணமடைந்ததைத் தொடர்ந்து இவ்விசாரணை கொலை குற்றமாக கொலை விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக தேசிய போலீஸ் படைத் தலைவர் டான்ஶ்ரீ காலிட் அபு பக்கார் தெரிவித்தார்.

பகடிவதைக்கு உள்ளாகி பினாங்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த நவீன் நேற்று மாலை 6.00 மணியளவில் மரணமடைந்தார்.

இதனைத் தொடர்ந்து கலகம் செய்தல், பொருட்களின் மூலம் பாலியல் வன்புறுத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வந்த இவ்விசாரணை குற்றவியல் நடைமுறை சட்டப் பிரிவு 302இன் கீழ் விசாரிக்கப்படவுள்ளது. இதில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் குற்றவாளிகளுக்கு கட்டாய மரணத் தண்டனை விதிப்பதற்கு சட்டம் வழிவகை செய்கிறது.

கடந்த சனிக்கிழமை ஐவர் கொண்ட கும்பலால் நவீன் தாக்கப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய நபர்கள் போலீஸ் தடுப்புக் காவலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

16 வயதுக்கும் 18 வயதுக்கும் இடைபட்ட இந்த ஐவரில் மூவர் எஸ்பிஎம் தேர்வை முடித்தவர்கள் எனவும் இருவர் ஐந்தாம் படிவ மாணவர்கள் எனவும் டான்ஶ்ரீ காலிட் குறிப்பிட்டார்.


'ஆர்.ஐ.பி.' அனுதாபம் அல்ல; சமூக சீர்திருத்தமாக வேண்டும்!



கடந்த ஒரு வாரமாகவே அனைவரின் கவனத்தையும் ஈர்த்த நவீனின் மரணச் செய்தி ஒட்டுமொத்த மலேசியர்கள் மட்டுமின்றி உலக வாழ் மக்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

நவீனின் மரணத்தைத் தொடர்ந்து சமூக ஊடகங்களில் 'ஆர்.ஐ.பி. நவீன்' என்ற வாசகம் பலராலும் பகிரப்பட்டு வருகிறது. ஆனால் இங்கு 'ஆர்.ஐ.பி.' எனும் மூன்றெழுத்து ஓர் அனுதாபமாக மட்டும் பகிரப்படாமல் சமூக சீர்திருத்தத்திற்கான அச்சாரமாக அமைந்திட வேண்டும்.

'பகடிவதை' என்பது நான்கு பேரின் கேலிக்கூத்துக்கு அரங்கேற்றப்படும் நகைச்சுவை நாடகம் அல்ல. மாறாக சமூகத்தில் இன்னமும் கரைபுரண்டோடும் அவலத்தின் கோலம் என்பதை நவீனின் மரணம் எடுத்துரைத்துள்ளது.

பள்ளி மாணவர்களிடையே மேலோங்கி நிற்கும் குண்டர்தனம், ஒரு கொடூரத்தின் வீரியத்தை அறியாத பருவம், பள்ளி பருவத்திற்கு பின்னர் நிர்ணயிக்கப்பட வேண்டிய வாழ்வாதாரம், பெற்றோரின் கவனிப்பு இல்லாமை போன்ற பல்வேறு விவகாரங்கள் கவனிக்கப்பட வேண்டிவை என்பதை உணர்த்துகிறது நவீனின் மரணம்.

'ஆர்.ஐ.பி.' என்ற ஒற்றை அனுதாபத்தால் சமூகத்தில் எவ்வித மாற்றங்களும் ஏற்படபோவதில்லை. இங்கு நமக்கு தேவை 'ஆர்.ஐ.பி.' என்ற அனுதாபம் அல்ல; சமூகத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய சீர்திருத்தம் ஆகும்.

ஆகவே, இன்றைய ஒருநாள் சமூக ஊடகங்களின் பயனர்கள் தங்களது  முகப்பு படத்தில் (Profile Picture)   நவீனின் புகைப்படத்தை பதிவு செய்யுங்கள்.


இது 'பகடிவதை உயிரையும் பறிக்கும்  வீரீயம் கொண்டது; வீரீயம் எல்லை மீறினால் சட்டத்தின் முன் குற்றவாளியாக தண்டிக்கப்பட நேரிடும்' என்ற அச்சத்தை அனைவரிடத்திலும் பதிவு செய்யும் ஒரு முயற்சியே ஆகும். ஒரு மாற்றத்தை ஏற்படுத்த இம்முயற்சியை கையிலெடுப்போமா? 

'ஏ.ஆர்.ரஹ்மானின் பிரார்த்தனையும் பொய்த்து விட்டது'



கோலாலம்பூர்-
படிகவதை செய்யப்பட்டு கொடூரமாக தாக்கப்பட்ட தி.நவீன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனளிக்காமல் இன்று மாலை மரணமடைந்தார்.
'நவீன் குணமாக வேண்டும்' என பொதுமக்கள் பலர் பிரார்த்தனை செய்தனர். அதுமட்டுமல்லாது 'யாரை போல் தான் உருவெடுக்க வேண்டும் என நினைத்திருந்தாரோ' அவரின் பிரார்த்தனை கூட பொய்யாகி விட்டது.

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் தீவிர ரசிகனான நவீன் இசைத்துறையில் சாதிக்க வேண்டும்  என நினைத்து கோலாலம்பூரில் உள்ள கல்லூரியில் இசைத்துறையில் உயர்கல்வியை படிக்கவிருந்தார். அதற்குள் பகடிவதைக்கு ஆளாகி உயிருக்கு போராடி கொண்டிருந்தார் நவீன்.

இவ்வேளையில்  நவீனுக்கு நேர்ந்த கொடுமையை அறிந்த ஏ.ஆர்.ரஹ்மான் 'நவீன்...சீக்கிரமே குணமாக வேண்டும் எனவும் அவருக்காக பிரார்த்திப்பதாகவும்'  டுவிட்டரில் பதிவு செய்திருந்தார்.

ஏ.ஆர்.ரஹ்மான்


ஏ.ஆர்.ரஹ்மான் மட்டுமல்லாது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் நவீன் குணமாக வேண்டும் என பிரார்த்தனை செய்தனர். ஆனல் அனைவரின் பிரார்த்தனையையும் பொய்யாக்கும் வகையில் அவரின் மரணம் அமைந்துவிட்டது.

Thursday, 15 June 2017

' நவீன் மரணம்- குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்படுவர்'


கோலாலம்பூர்-
பகடிவதை செய்து கடுமையாக தாக்கப்பட்ட நவீனின் மரணத்திற்கு  காரணமாக இருந்தவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவர் என பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக் தனது அனுதாபச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த சனிக்கிழமை முன்னாள் பள்ளி மாணவர்களால் பகடிவதைக்கு ஆளாக்கப்பட்டு கடுமையாக தாக்கப்பட்ட நவீன், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த போதிலும் நினைவு திரும்பாமலேயே இன்று மாலை மரணமடைந்தார்.

மலேசியர்களிடையே மிகப் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள நவீனின் மரணத்திற்கு தனது டுவிட்டர் அகப்பக்கத்தில் அனுதாபம் தெரிவித்துக் கொண்ட பிரதமர் நஜிப், குற்றம் புரிந்தவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்தார்.

சிகிச்சை பலனளிக்காமல் நவீன் மரணம்!


பினாங்கு-
பகடிவதைக்கு உள்ளாக்கப்பட்டு, கொடூரமாக தாக்கப்பட்ட  தி.நவீன் சிகிச்சை பலனளிக்காமல் இன்று பினாங்கு மருத்துவமனையில் மரணமடைந்தார்.

கடந்த சனிக்கிழமை புக்கிட் குளுகோர், ஜாலான் காக்கி புக்கிட் திடலில் முன்னாள் மாணவர்களான சுமார் 16 முதல் 18 வயது வரையிலான ஐந்து நபர்களால் நவீனும் அவரது நண்பர் பிரவீனும் கடுமையாக தாக்கப்பட்டார்.

அதோடு கடுமையான தாக்குதலுக்கு ஆளான நவீன், ஓரின பாலியல் தாக்குதலுக்கு ஆளாக்கப்பட்டிருப்பட்டுள்ளார்.

மூளை சாவடைந்து உயிருக்கு மிகவும் ஆபத்தான நிலையில் போராடிக் கொண்டிருந்த நவீனக்கு பினாங்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனளிக்காமல் இன்று மாலை 5.31 மணியளவில் அவரது உயிர் பிரிந்தது.

இச்சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நவீன் மரணமடைந்த செய்தி மலேசியர்களிடையே மிகப் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

Tuesday, 13 June 2017

பினாங்கு அரசு ஊழியர்களுக்கு போனஸ் - லிம் குவான் எங்



பினாங்கு-
நோன்புப் பெருநாளை முன்னிட்டு பினாங்கு அரசு ஊழியர்களுக்கு மாத வருவாயின் அடிப்படையில் முக்கால் பங்காக போனஸ்  வழங்கப்படும் என பினாங்கு மாநில முதல்வர் லிம் குவான் எங் தெரிவித்துள்ளார்.

37,41 அரசு ஊழியர்களுக்கு பிரத்யேக போனசும் வழங்கப்படும் என அறிவித்துள்ள அவர், இந்த போனஸ் பணம் ஜூன் 20இல் நோன்பு பெருநாளுக்கு ஒரு வாரத்திற்கு முன்கூட்டியாக வழங்கப்படும் என்றார்.

கடந்தாண்டு நோன்புப் பெருநாளுக்காக பினங்கு மாநில அரசு வெ. 6.9 மில்லியன் செலவிட்டதாக மேலும் கூறிய அவர் ,இவ்வாண்டு அத்தொகை வெ.7.5 மில்லியனாக கூட்டியுள்ளதாக கூறினார்.

பிரத்யேக போனஸ் நிதி நகராட்சி மன்றம், சட்டரீதியான அமைப்புகள் உட்பட தனியார் இஸ்லாம் பாலர் பள்ளிகள், தனியார் சீன பள்ளிகள், இஸ்லாம் கல்வி ஆசிரியர்கள், என தலா  வெ.200 முதல் வெ.300 வரை வழங்கப்படும் என்றார்.


இந்த தொகை வழங்குவதால் பெருநாளை கொண்டாடும் வறுமை சூழலில் இருப்பவர்களின்  சுமை குறையும் என  நம்புவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Monday, 12 June 2017

மக்கள் சேவையிலிருந்து பின்வாங்கிடாமல் எம்ஜிஆரின் கொள்கையை நிஜமாக்குங்கள் -யோகேந்திர பாலன் வலியுறுத்து


சுங்கை சிப்புட்-
மக்களின் இதயக்கனி, ஏழைகளின் நாயகன் என புகழ்சூட்டப்படும் 'மக்கள் திலகம்' எம்ஜிஆரின் பெயரில் செயல்பட்டு வரும், சுங்கை சிப்புட் எம்ஜிஆர் சமூகநல சேவை மன்றம் மக்கள் சேவையிலிருந்து பின்வாங்கக்கூடாது என மதிலன் நிறுவனத்தின் உரிமையாளரும் தொழிலதிபருமான யோகேந்திர பாலன் தெரிவித்தார்.

வறிய மக்களின் சேவைக்கு அடையாளமாக கருதப்படும் எம்ஜிஆர் ஆவார். ஒரு நடிகராக தனது திரைத்துறை வாழ்க்கையை தொடங்கிய எம்ஜிஆர், பின்னாளில் தமிழகத்தின் முதல்வராக ஆட்சி பீடத்தில் அமர்ந்தார்.


சினிமா திரைப்படங்கள், பாடல்கள் மூல நல்ல பல கருத்துகளை மக்களிடம் கொண்டு சேர்த்த எம்ஜிஆர், தமிழ்நாட்டின் முதல்வராக பதவியேற்ற பின்னர் பல நல் திட்டங்களை முன்னெடுத்தார்.

பள்ளி மாணவர்களுக்காக அவர் தொடங்கிய  சத்துணவு திட்டம் இன்று நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இதுமட்டுமல்லாது ஏழ்மை நிலையிலுள்ள மக்கள், தாய்மார்களுக்கான நல உதவிகள் போன்றவற்றை முன்னெடுத்ததன் விளைவாக இன்றளவும் மக்கள் மனதில் நீங்காத தலைவராக எம்ஜிஆர் திகழ்கிறார்.

அதேபோன்று எம்ஜிஆரின் பெயரில் இயங்கும் இந்த மன்றம் மக்களுக்கான சேவையை என்றும் வழங்க வேண்டும். மக்களின் சேவையிலிருந்து இவ்வியக்கம் பின்வாங்கிடக்கூடாது.

எம்ஜிஆரின் புகழ் பாடும் இந்த மன்றம் அவரது சிந்தனையையும் கொள்கைகளையும் உணர்ந்து அதற்கேற்ப தங்களது சேவையை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என யோகேந்திர பாலன் குறிப்பிட்டார்.


சுங்கை சிப்புட் எம்ஜிஆர் சமூகநல சேவை மன்றத்தின் 7ஆம் வருட நிகழ்ச்சி அண்மையில் இங்குள்ள கோலகங்சார் மாநகர் மன்ற மண்டபத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்வு சிறப்பாக நடைபெற ஆதரவும் உதவியும் வழங்கிய நல்லுள்ளங்களுக்கு தனது நன்றியை தெரிவித்துக் கொள்வதோடு இம்மன்றத்தின் தொடர் நடவடிக்கைகளுக்கு ஆதரவுக்கரம் நீட்ட வேண்டும் என அதன் தலைவர் ஶ்ரீ ஹரி வேலுச்சாமி கூறினார்.

இந்நிகழ்வில் ஜாலோங் சட்டமன்ற உறுப்பினர் லோ, தொழிலதிபர் டத்தோஶ்ரீ கண்ணன், அமுசு ஏகாம்பரம், சுங்கை சிப்புட் மஇகா தலைவர் இளங்கோவன் முத்து, கிள்ளான் தொழிலதிபர் என்.ராஜா, எம்ஜிஆர் புரொடக்‌ஷன் அன்பானந்தன் உட்பட பல்வேறு பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.



இந்த நிகழ்வில் யோகேந்திர பாலன் 130 பேருக்கு பணமுடிப்பு வழங்கியதோடு உதவி தேவைபடுவோருக்கு உதவிப் பொருட்களும் வழங்கப்பட்டன. 

Friday, 9 June 2017

'மலேசியாவுக்கு ஆபத்தானவர்' நாட்டுக்குள் நுழைய வைகோவுக்கு தடை!

கோலாலம்பூர்-
பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசியர் பி.இராமசாமியின் இல்ல திருமண விழாவில் கலந்து கொள்ள மலேசியா வந்தடைந்த தமிழகத்தைச் சேர்ந்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு மலேசியாவில் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

நாளை 10ஆம் தேதி சனிக்கிழமை பேராசியர் இராமசாமியின் மகள் திருமண வரவேற்பு பினாங்கில் நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்க கிடைத்த அழைப்பை தொடர்ந்து நேற்று நள்ளிரவு 11.55 மணியளவில் (இ.நே) தனது செயலாளர் அருணகிரியுடன் வைகோ மலேசியாவுக்கு  புறப்பட்டார்.

இன்று காலை 6.30 மணியளவில் மலேசியா வந்தடைந்த வைகோவை  'நீங்கள் மலேசியாவுக்குள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது' என கூறி தடுத்து நிறுத்திய குடிநுழைவு துறை அதிகாரிகள், உயர் அதிகாரிகளை சந்தியுங்கள் என கூறி அழைத்துச் சென்றனர்.

வைகோவை சந்தித்த உயர் அதிகாரிகள் ‘நீங்கள் இலங்கையிலுள்ள விடுதலைப் புலிகள் அமைப்பைச் சார்ந்தவர்’ என்று சொல்லி விடுதலைப் புலிகள் இயக்கம் தொடர்பாகப் பல கேள்விகளைக் கேட்டனர். ‘இலங்கையில் உங்கள்மீது பல வழக்குகள் உள்ளன’ என்று சொன்னார்கள். “இல்லை, நான் இந்தியக் குடிமகன்,” என்று வைகோ கூறி கடவுச் சீட்டைக் காட்டிய போதிலும் அதை அவர்கள் ஏற்கவில்லை.

இத்தகவல் பேராசியர் இராமசாமிக்கு தெரிவிக்கப்பட்டது. பேராசியர் இராமசாமியும் பினாங்கு முதல்வர் லிம் குவான் எங்கும் எவ்வளவு முயன்றும் அதிகாரிகள் சம்மதிக்கவில்லை.

“துணைப் பிரதமர் அலுவலகத்திலிருந்தே எங்களுக்கு உத்தரவு வந்துவிட்டது. அவரை நாங்கள் அனுமதிக்க முடியாது,” குடிநுழைவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து  இன்று இரவு 10.45 மணிக்குச் சென்னை செல்கின்ற மலேசியன் ஏர்லைன்ஸ்  விமானத்தில் வைகோவைத் திருப்பி அனுப்புவதற்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர் என ஓர் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜூலை 1 முதல் சுற்றுலா வரி - டத்தோஶ்ரீ நஸ்ரி


கோலாலம்பூர்-
புதிதாக அறிமுகப்படுத்தப்படவுள்ள சுற்றுலா வரி வரும் ஜூலை 1ஆம் தேதி பதிவு பெற்ற அனைத்து தங்கும் விடுதிகளிலும் விதிக்கப்படும் என சுற்றுலா துறை அமைச்சர் டத்தோஶ்ரீ நஸ்ரி அஸிஸ் தெரிவித்தார்.

இந்த சுற்றுலா வரி பதிவு பெற்ற ஹோட்டல்கள், இன்ஸ்களில் விதிக்கப்படும் வேளையில் வெ.2.50 முதல் வெ.20 வரை வசூலிக்கப்படவுள்ளது.

இதன் மூலம் நாட்டில் பதிவு பெற்றுள்ள 11 மில்லியன் விடுதி அறைகளில் 60 விழுக்காட்டு பயன்பாடு இருந்தாலும் வெ.654.62 மில்லியன் வரை நாட்டிற்கு வருமானம் கிடைக்கும் என நஸ்ரி மேலும் கூறினார்.

கடந்த நாடாளுமன்றக் கூட்டத்தில் அமைச்சர் நஸ்ரி சுற்றுலா துறை மசோதா ஒன்றினை தாக்கல் செய்தார். அம்மசோதா பெரும்பான்மையால் நிறைவேற்றப்பட்டது. முன்னதாக, செய்தி நிறுவனம் ஒன்று சுற்றுலா வரி ஒத்தி வைக்கப்படும் என செய்தி வெளியிட்டிருந்ததை அடுத்து, அதனை மறுத்த அமைச்சர் நஸ்ரி திட்டமிட்டப்படி ஜூலை 1ம் தேதி முதல் சுற்றுலா வரி கட்டாயம் அமல்படுத்தப்படும் பாடாங் ரெங்காஸ் நாடாளுமன்ற உறுப்பினருமான அவர்  கூறினார்.