Monday 10 August 2020

39 ஆலயங்களுக்கு வெ.345,000 மானியம் ஒதுக்கீடு- கணபதிராவ்

ரா.தங்கமணி

ஷா ஆலம்-

சிலாங்கூர் மாநிலத்திலுள்ள இந்து ஆலயங்களுக்கு மூன்றாம், நான்காம் கட்ட மானியங்களை மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் இன்று வழங்கினார்.

வெ.345,000 மதிப்புடைய காசோலைகள் 39 ஆலய பிரதிநிதிகளிடம் வழங்கிய கணபதிராவ், ஆலய கோபுரங்கள் எவ்வளவு உயரமாக உள்ளது என்பதற்கு போட்டியிடுவதை காட்டிலும் இறை நம்பிக்கையை வளர்ப்பதிலும் சமூக நடவடிக்கைகளை முன்னெடுப்பதிலும் ஆலயங்கள் முன்னுதாரணமாக திகழ வேண்டும்.

கோவிட்-19 வைரஸ் தொற்று பரவலின்போது பல்வேறு ஆலயங்கள் வேலையின்றி தவித்த மக்களுக்கு உதவிக்கரம் நீட்டுவதில் முதன்மையாக இருந்தன. இத்தகைய நடவடிக்கைகள் ஆலயங்களில்  தொடரப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

ஒவ்வோர் ஆண்டும் ஆலயங்களுக்காக ஒதுக்கீடு செய்யப்படும் நிதியை சிலாங்கூரில் உள்ள ஆலயங்களுக்கு வழங்கப்பட வேண்டியது எனது கடமையாகும்.  எந்தவொரு ஆலயமும் அதிலிருந்து விடுபட்டு விடக்கூடாது எனும் அடிப்படையில் சில ஆலயங்களுக்கு நிதி கூடுதலாகவும் சில ஆலயங்களுக்கு குறைவாகவும் வழங்கப்பட்டிருக்கலாம்.

அதற்காக கூடுதலாக நிதி வழங்கப்பட்ட ஆலயங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. பிற ஆலயங்களை புறந்தள்ளுகிறோம் என்று அர்த்தம் ஆகாது.

அனைத்து ஆலயங்களுக்கு மானியம் சென்றடைய வேண்டும் எனும் நோக்கில் ஆண்டுக்கு ஒதுக்கப்படும் 1.7 மில்லியன் வெள்ளி தொகையை முறையாக பகிர்ந்தளிக்கப்படுகிறது என்று இன்று சிலாங்கூர் மாநில அரசு செயலகத்தில் நடைபெற்ற மானியம் வழங்கும் நிகழ்வில் செய்தியாளர்களிடம் பேசுகையில் கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினருமான கணபதிராவ் குறிப்பிட்டார்.


No comments:

Post a Comment