Tuesday, 5 December 2017

டிபிகேஎல் அபராதம்: பிப்.28 வரை சிறப்பு கழிவு- டத்தோ லோக பால மோகன்

கோலாலம்பூர்-
கோலாலம்பூர் மாநகர் மன்றம் (டிபிகேஎல்) கடந்த மூன்றாண்டுகளில் விதித்துள்ள அபராத் தொகை செலுத்துவதற்கு கழிவு வழங்கப்படவுள்ளது என கூட்டரசுப் பிரதேச துணை அமைச்சர் டத்தோ லோக பால மோகன் தெரிவித்தார்.

போக்குவரத்து குற்றங்களுக்காக விதிக்கப்பட்டுள்ள அபராதத்தை 3.2 மில்லியன் பேர் பெற்றுள்ளனர். இதன் தொகை 10 மில்லியன் வெள்ளி ஆகும். வரும் 15ஆம் தேதி தொடங்கி அடுத்தாண்டு பிப்ரவரி 28ஆம் தேதி வரை கழிவு விலையில் அபராதத் தொகையை செலுத்தலாம்.

மோட்டார் சைக்கிளோட்டிகளுக்கு வெ.20,  வாகனமோட்டிகளுக்கு வெ.30,  பேருந்து உட்பட பலவற்றுக்கு வெ.50 என கழிவு வழங்கப்படவுள்ளது. இது கழிவு போக்குவரத்து குற்றங்களுக்கு மட்டுமே. மாறாக நீதிமன்றத்தால் கறுப்புப் பட்டியல் இடப்பட்டவர்களுக்கு இல்லை என அவர் சொன்னார்.

அடுத்தாண்டு பிப்ரவரி 28க்கு பின்னர் இந்த கழிவு வழங்கப்படாது என குறிப்பிட்ட டத்தோ லோக பால மோகன், இரண்டு மாதங்களுக்கு வழங்கப்பட்டுள்ள இந்த சிறப்பு கழிவை அபராதம் விதிக்கப்பட்டவர்கள் நன்முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் பல்வேறு இடங்களில் உள்ள டிபிகேஎல் முகப்பிடங்களில் இந்த அபராதத்தை செலுத்தலாம் எனவும் கூறினார்.

டிசம்பர் மாதம் ஆஸ்ட்ரோ ‘உங்கள் திரை ஆன் டிமாண்ட்’ வழங்கும் புதிய நிகழ்ச்சிகள்!

ஆஸ்ட்ரோ உங்கள் திரை ஆன் டிமாண்ட் (on demand) சேவை, வாடிக்கையாளர்களுக்கு என்ன நிகழ்ச்சிகள் தேவை, எப்போது தேவை, எங்கே தேவை ஆகியவற்றின் அடிப்படையில், பல்வேறு பொழுதுப் போக்கு அம்சங்களை உள்ளடக்கிய புதிய நிகழ்ச்சிகளை டிசம்பர் மாதம் வழங்கின்றது.


                             
1 1)  மோட்டு பட்லு – அனிமேஷன் தொடரான இது  ஃபர்ஃபுரி நகரைச் சேர்ந்த மோட்டு, பட்லு ஆகிய இரு கதாபாத்திரங்களின் கதையாகும். மொத்தத்தில் மோட்டு பட்லுகுதூகலம்.


   2)  என்ன செய்ய போகிறாய் – மலேசிய மக்களிடம் நடத்தப்பட்ட ‘social experiments’ இந்நிகழ்ச்சியில் ஒளியேறும்.  



   3)  பொம்மி குட்&பேட் டச் - குழந்தைகளிடம் நல்லது, கெட்டது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் காணொளிகள் இந்நிகழ்ச்சியில் இடம்பெறும்.


   4)  பயமா இருக்கு – இத்திரைப்படத்தில் ஹீரோ சந்தோஷ், ஹீரோயின் ரேஷ்மி மேனன், ஹீரோவுக்கு இலங்கையில் அறிமுகமாகும் நான்கு நண்பர்கள் மொட்டை ராஜேந்திரன், ஜெகன், ஜீவா, பரணி. இவர்கள் ஹீரோவின் சொந்த ஊரான கேரளாவில் தங்குகின்றனர். அங்கு அவர்களுக்கு சில அனுமாஷ்ய சில விஷயங்கள் நடக்கிறது.

  
   5)  கா கா கா ஆபத்தின் அறிகுறி -  அசோக், மேகாஸ்ரீ, கிரண், நாசர், பேபி யுவினா ஆகியோர் நடிப்பில் மேனன் இயக்கத்தில் ஹாரர், திகில் கலந்த படமாகும். மேகாஸ்ரீயை யாரோ கொல்ல முயற்சி செய்வதை நண்பர் கிரணிடம் சொல்கிறார். இதனால், அவருடையை அறையை சுற்றி கேமரா பொருத்துகிறார். அதில் குழந்தை யுவினா, மேகாஸ்ரீயை கொலை செய்ய முயற்சிப்பதை தெரிந்துக் கொள்கிறார்.


மேல் விவரங்களுக்கு www.watchod.com என்ற இணையதளத்தை வலம் வரலாம்.

'பிரதமர்' மகாதீர்; 'துணைப் பிரதமர்' வான் அஸிஸா - பக்காத்தான் கூட்டணி அறிவிப்பு


கோலாலம்பூர்-
வரும் 14ஆவது பொதுத் தேர்தலில் நம்பிக்கைக் கூட்டணி (பக்காத்தான் ஹராப்பான்) ஆட்சியை கைப்பற்றினால் பிரதமராக துன் டாக்டர் மகாதீரையும் துணைப் பிரதமராக டத்தோஶ்ரீ வான் அஸிஸாவையும் அக்கூட்டணி முன்மொழிந்துள்ளது.

பிகேஆர், ஜசெக, அமானா, பிபிபிஎம் ஆகிய நான்கு கட்சிகளை உள்ளடக்கி தோற்றுவிக்கப்பட்டுள்ள பக்காத்தான் ஹராப்பான் வரும் பொதுத் தேர்தலை எதிர்கொள்ள தயாராக உள்ள நிலையில் பிரதமர் வேட்பாளர் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

கடந்த சனி, ஞாயிறு ஆகிய இரு நாட்களாக புத்ராஜெயாவில் நடைபெற்ற பக்காத்தான் கூட்டணியின் கலந்துரையாடல் கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டதாக பிகேஆர் கட்சியின் நாடாளுமன்றத் தலைவர் ஜோஹாரி அப்துல் தெரிவித்தார்.

ஆயினும் இம்முடிவுக்கு டத்தோஶ்ரீ அன்வாரின் ஒப்புதலுக்கு காத்திருக்கிறோம். அவர் ஒப்புதல் அளித்தால் இந்த பரிந்துரையில் எங்களுக்கு முழு சம்மதம் என ஜோஹாரி கூறினார்.

இந்த பரிந்துரை ஏற்றுக்கொள்ளப்பட்டால் துன் மகாதீரை பிரதமராகவும் டத்தோஶ்ரீ வான் அஸிஸாவை துணைப் பிரதமராகவும் முன்னிறுத்து பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படும் என்றார் அவர்.

ஓரினப் புணர்ச்சி வழக்கில் ஐந்தாண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் டத்தோஶ்ரீ அன்வார், அடுத்தாண்டு ஜூன் மாதம் விடுதலை ஆகிறார். ஆயினும் அடுத்த ஐந்தாண்டுகளுக்கு அவரால் அரசியல் பதவிகளை வகிக்க முடியாது.

Monday, 4 December 2017

சாலை விபத்து: இருவர் மரணம்


ரொம்பின் -
4 வாகனங்கள் சம்பந்தப்பட்ட சாலை விபத்தொன்றில் இருவர் கொல்லப்பட்டனர். இவ்விபத்து குவாந்தான் - சிகாமட சாலையின் 102.8ஆவது கிலோமீட்டரில் நிகழ்ந்தது.

மாலை 6.00 மணியளவில் நிகழ்ந்த இவ்விபத்தில் இரு மோட்டார் சைக்கிள்களும் ஒரு லோரியும் ஒரு வாகனமும் சிக்குண்டன.

இது குறித்து கருத்துரைத்த ரொம்பின் மாவட்ட போலீஸ் தலைவர் டிஎஸ்பி அஸ்லி முகமட் நோர்,  மரணமடைந்த நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மழை பெய்ததால் சாலை ஏற்பட்ட ஈரப்பதமே விபத்துக்கு காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. ஆயினும் இதற்கான காரணம் விசாரிக்கப்பட்டு வருகிறது என்றார் அவர்.

தேர்தலில் போட்டியிட கோரிக்கை விடுத்துள்ளோம்; ஆனால் நச்சரிக்க மாட்டோம்- டத்தோஶ்ரீ தனேந்திரன்


ரா.தங்கமணி, வி.மோகன்ராஜ்

கோலாலம்பூர்-
வரும் 14ஆவது பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கு மலேசிய மக்கள் சக்தி கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இரு நாடாளுமன்றத் தொகுதிகள், மூன்று சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடுவதற்கான  வாய்ப்பை இக்கட்சி கோரியுள்ளது என அதன் தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ ஆர்.எஸ்.தனேந்திரன் தெரிவித்தார்.

கடந்த தேர்தல்களில் தேசிய முன்னணி தோல்வி கண்ட இடங்களை மீட்டுக் கொடுப்பதற்கான வாய்ப்பாகவே மலேசிய மக்கள் சக்தி இந்த கோரிக்கையை விடுத்துள்ளது.

தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிப்பதும் மறுப்பதும் பிரதமரும் தேசிய  முன்னணித் தலைவருமான டத்தோஶ்ரீ நஜிப்பை பொறுத்தது. போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டால் வெற்றியை நிலைநாட்ட பாடுபடுவோம். இல்லையென்றால் தேமுவின் வெற்றிக்காக போராடுவோமே தவிர கட்சிக்குள்ளேயே மோதிக் கொள்ள மாட்டோம்.

எங்களது எதிரி வெளியில் தானே தவிர கூட்டணிக்குள்ளேயே இல்லை. வெளியில் உள்ள எதிர்க்கட்சியினர் தான் எங்களது எதிரி. அவர்களை எதிர்ப்போமே தவிர 'சீட்'டுக்காக கூட்டணிக்குள்ளேயே மோதிக் கொள்ள  மாட்டோம்.

மலேசிய மக்கள் சக்தி கட்சி போட்டியிட எத்தனித்துள்ள தொகுதிகளை அடையாளம் கண்டு அவற்றின் வெற்றி வாய்ப்பு குறித்த ஆய்வுகளை மேற்கொண்டு அம்முடிவை பிரதமரிடம் சமர்பித்துள்ளோம்.

போட்டியிட வாய்ப்பளிக்கப்படுமா?, வேட்பாளர் யார் என்பதை பிரதமரின் முடிவுக்கே விட்டு விடுகிறோம். தொகுதிகளை கேட்டு அவரை (பிரதமர்) நச்சரிக்க மாட்டோம் என டத்தோஶ்ரீ தனேந்திரன் கட்சியின் 9ஆவது பேராளர் மாநாட்டிற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

எதிர்க்கட்சியை நம்புவதால் எவ்வித பயனும் இல்லை- பிரதமர் நஜிப்


கோ.பத்மஜோதி, வி.மோகன்ராஜ்

கோலாலம்பூர்-
நாட்டின் தொடர் மேம்பாட்டை உறுதி செய்யும் வகையில் இந்தியர்களின் ஆதரவு தேசிய முன்னணிக்கு தொடரப்பட வேண்டும். தேசிய முன்னணியின் ஆட்சியில் மட்டும்தான் பல்வேறு சமூகமும் நாடு முன்னேற்றம் காணும் என பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக் வலியுறுத்தினார்.

நாடு தொடர்ந்து பல்வேறு துறைகளில் பீடுநடை போட வேண்டுமானால் ஆளும் தேசிய முன்னணி அரசாங்கம் ஆட்சியில் நிலை பெற்றிருக்க வேண்டும். அது நடைபெற இந்தியர்கள் ஆதரவு தேசிய முன்னணிக்கு தொடரப்பட வேண்டும்.

எதிர்க்கட்சியினர் கூறும் ஆசை வார்த்திகளில் இந்திய வாக்காளர்கள் ஏமார்ந்து விடக்கூடாது. அவர்கள் பல்வேறு வாக்குறுதிகளை அள்ளி வீசலாம். ஆனால் அவையனைத்தும் 'வெட்டிப் பேச்சு' மட்டுமே.

அரசாங்கத்தின்  பல்வேறு திட்டங்கள் அனைத்து சமூகத்தையும் சார்ந்ததாகவே வரையறுக்கப்படுகிறது. ஏனெலில் அனைத்து இன மக்களின் நலனை காக்கும்  அரசாக தேசிய முன்னணி திகழ்கிறது.
அந்த திட்டங்களில் இந்திய சமுதாயமும் விடப்படவில்லை. இந்திய சமுதாயத்தின் நலனை காக்கும் வகையில் கடந்த ஏப்ரல் மாதத்தில்  'மலேசிய இந்தியர் பெருவரைவு திட்டம்' அறிமுகப்படுத்தப்பட்டது.

அதில் இந்திய சமுதாயத்தில் அடிப்படை பிரச்சினைகள் மட்டுமின்றி பொருளாதாரம், கல்வி போன்ற துறைகளிலும் முன்னேற்றம் காண்பதற்கான வியூகங்கள் வகுக்கப்பட்டுள்ளன.

ஆதலால் வரும் 14ஆவது பொதுத் தேர்தலில் இந்திய சமுதாயத்தின் ஆதரவு தேசிய முன்னணி தொடரப்பட வேண்டும் என வலியுறுத்திய டத்தோஶ்ரீ நஜிப், எதிர்க்கட்சியினரை நம்புவதால் எவ்வித நன்மையும் விளையபோவதில்லை என இன்று பிரிக்பீல்ட்ஸ், மெனாரா பேங்க் ரக்யாட் மாநாட்டு மையத்தில் நடைபெற்ற மலேசிய மக்கள் சக்தி கட்சியின் 9ஆவது பேராளர் மாநாட்டை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்து உரையாற்றுகையில் அவர் இவ்வாறு சொன்னார்.

கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ ஆர்.எஸ்.தனேந்திரன் தலைமையில் நடைபெற்ற இம்மாட்டில் தேமு தலைமைச் செயலாளர் டத்தோஶ்ரீ தெங்கு அட்னான்,  தேசிய முன்னணி உறுப்புக் கட்சிகளின் தலைவர்கள், இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு மூத்த ஆலோசகர் டாக்டர் பி.ராமசாமி, இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் சசிகலா புஷ்பா, கட்சி பேராளர் என திரளானோர் பங்கேற்றனர்.

Sunday, 3 December 2017

2 நாடாளுமன்றத் தொகுதிகள், 3 சட்டமன்றத் தொகுதிகளில் போட்டி- ம.ம.ச. கட்சி கோரிக்கை

ரா.தங்கமணி

கோலாலம்பூர்-
வரும் 14ஆவது பொதுத் தேர்தலில் 2 நாடாளுமன்றத் தொகுதி, 3 சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என மலேசிய மக்கள் சக்தி கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ ஆர்.எஸ்.தனேந்திரன் கோரிக்கை விடுத்தார்.

கடந்த தேர்தல்களில் தேசிய முன்னணி போட்டியிட்டு தோல்வி கண்ட இடங்களையே ம.ம.ச. கட்சி கோருகிறது. இத்தொகுதிகளில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டால் நிச்சயம் தேசிய முன்னணிக்கு வெற்றி வாய்ப்பை பெற்று தருவோம்.

தேசிய முன்னணி தனது உறுப்புக் கட்சிகளில் துணையோடு தேர்தலில் களமிறங்குகிறது. அவ்வகையில் இரு நாடாளுமன்றத் தொகுதிகளிலும்  மூன்று சட்டமன்றத் தொகுதிகளிலும் போட்டியிடுவதற்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.
நாளை 3ஆம் தேதி மலேசிய மக்கள் சக்தி கட்சியின் 9ஆவது பேராளர் மாநாடு நடைபெறவுள்ள நிலையில் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக் முன்னிலையில் இந்த கோரிக்கை உட்பட பல கோரிக்கைகள் முன்வைக்கப்படவுள்ளன. அதுமட்டுமின்றி 2300 பேராளர்கள் கலந்து கொள்ளும் இம்மாநாட்டில் கட்சி உறுப்பினர்களுக்கு இனிப்பான செய்தி வழங்கப்படும் என ஒரு 'ரகசியத்தையும்' வைத்துள்ளார் டத்தோஶ்ரீ தனேந்திரன்.

14ஆவது பொதுத் தேர்தல் கேந்திரத்தை பிரதமர் நஜிப் தொடக்கி வைக்கும் இம்மாநாட்டில் சிறப்புப் பிரமுகராக இந்திய நாடாளுமன்றத்தின் மூத்த ஆலோசகர் டாக்டர் பி.ராமசாமியும் சசிகலா புஷ்பாவும் கலந்து கொள்ளவுள்ளனர் என்றார் அவர்.

Saturday, 2 December 2017

செம்பனை தோட்டத்தில் இளம் பெண்ணின் சடலம் மீட்பு

கம்பார்-
கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு கழுத்திலும் தலையிலும் கடுமையான காயங்களுக்கு இலக்கான இளம் பெண்ணின் சடலம் இங்கு மம்பாங் டி அவானிலுள்ள தாமான் பெர்மாய் செம்பனை தோட்டத்தில் மீட்கப்பட்டது.

காளானை தேடிச் சென்ற 60 வயது மதிக்கத்தக்க ஆடவர் பெண்ணின் சடலத்தை கண்டுள்ளார். கொல்லப்பட்டவர் எஸ்.லெட்சுமி (வயது 28) என அடையாளம் காணப்பட்டுள்ளது.

24 மணிநேரத்திற்குள்ளாக அப்பெண் கொல்லப்பட்டிருக்கலாம் என தெரிவித்த கம்பார் மாவட்ட்ட போலீஸ் தலைவர் சூப்பிரிடென்டண்ட் இங் கோங் சூன், தலையிலும் கழுத்திலும் கூர்மையான ஆயுதத்தைக் கொண்டு தாக்கியத்தில் அவர் உயிரிழந்திருக்கக்கூடும் என தெரிவித்தார்.

சம்பவ இடத்தை சோதனையிட்டதில் கொல்லப்பட்ட பெண்ணின் மோட்டார் சைக்கிள் சாவியும் தலைகவசமும் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அப்பெண்ணின் மோட்டார் சைக்கிள் பண்டார் பாரு கம்பாரில் உள்ள உணவகத்தில் கைவிடப்பட்டு கிடக்கிறது.

வேறு இடத்தில் கொல்லப்பட்டு சடலம் இங்கு கைவிடப்பட்டதற்கான சாத்தியத்தையும் போலீஸ் நிராகரிக்கவில்லை என அவர் சொன்னார்.
இக்கொலைக்கான காரணம் கொள்ளை சம்பவமாக இருக்க முடியாது. ஏனெனில், அப்பெண்ணின் உடலில் தங்க நகைகள் அப்படியே கிடந்தன.

மரணமடைந்த பெண்ணின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட சடலம் சவப்பரிசோதனைக்காக கம்பார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

விசாரணைக்கு உதவும் பொருட்டு கே9 பிரிவு சம்பவ இடத்திற்கு  அழைக்கப்பட்டுள்ளது என்ற அவர், இக்கொலைச் சம்பவம் 302 குற்றவியல் பிரிவின் கீழ் விசாரிக்கப்படுகிறது என மேலும் கூறினார்.

பேருந்தை மோதியது வாகனம்; இரு இந்தியர்கள் பலி

பாரிட்-
கட்டுப்பாட்டை இழந்த வாகனம்  எதிரே வந்த பேருந்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் இரு இந்திய இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

பாரிட்டில் இருந்து வரும் வழியில் பிற்பகல் 4.30 மணியளவில் நிகழ்ந்த இந்த சாலை விபத்தில் வாகன ஓட்டுனரான துர்க்காராஜ் (வயது 29), முன் இருக்கையில் அமர்ந்திருந்த அ.ஆனந்த் ராஜ் (வயது 28) ஆகியோரே இதில் கொல்லப்பட்டவர்கள் ஆவர். துர்க்காராஜ் ஈப்போ, தாமான் கிளேபாங் ரியாவைச் சேர்ந்தவராவார். ஆனந்த்ராஜ் ஈப்போ, டேசா ரிஷா புந்தோங்கைச் சேர்ந்தவர் ஆவார்.
கட்டுப்பாட்டை இழந்ததால் எதிர்சாலையில் நுழைந்த வாகனம் பேருந்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் கடுமையான காயங்களுக்கு இலக்கான இருவரும் சம்பவ இடத்திலேயே மரணமுற்றனர்.

பேருந்து ஓட்டுனரும் இரு பயணிகளும் எவ்வித காயமுமின்றி தப்பித்தனர் என பேராக் தெங்கா மாவட்ட துணை தலைவர் டிஎஸ்பி  அஹ்மாட் ஃபவுசி தெரிவித்தார்.

சிலாங்கூரை கைப்பற்றும் தேமுவின் எண்ணம் ஈடேறாது- வீ.கணபதி ராவ்

ஷா ஆலம்-
சிலாங்கூர் மாநிலத்தை மீண்டும் கைப்பற்றலாம் என்ற தேசிய முன்னணியின் எண்ணம் ஒருபோதும் ஈடேறாது. மக்கள் நலன் காக்கும் பக்காத்தான் கூட்டணியை தோற்கடித்து மீண்டும் தேசிய முன்னணி ஆட்சியை அமைவதற்கு மக்கள் வழிவிடமாட்டார்கள் என சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதி ராவ் குறிப்பிட்டார்.

சிலாங்கூர் மாநில மக்களின் வறுமையை ஒழித்து ஆரோக்கியமான வாழ்க்கை, கல்வி ஆகியவற்றை மேம்படுத்துவதற்கு ஏதுவாக மக்கள் நலத் திட்டங்கள் பலவற்றை மாநில அரசாங்கம் நடைமுறைப்படுத்தியுள்ளது.
குறிப்பாக, மாநிலத்திலுள்ள தமிழ்ப்பள்ளிகளின் வளர்ச்சிக்கும்  மேம்பாட்டிற்கும் உதவும் வகையில் 2018ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் தமிழ்ப்பள்ளிகளுக்கு 50 லட்சம் வெள்ளியை ஒதுக்கீடு செய்துள்ளது.

மத, இன வேறுபாடின்றி ஆலயங்களின் செயல்பாட்டுக்கு 17 லட்சம் வெள்ளி, இந்தியர் சிறு தொழில் முனைவர் திட்டத்திற்கு 30 லட்சம் வெள்ளி, தோட்டப்பாட்டாளிகளுக்கு 5 லட்சம் வெள்ளி, இலவச பேருந்து கட்டணத்திற்கு 13 லட்சம் வெள்ளி உட்பட சீக்கிய சமுதாயத்திற்கு 10 லட்சம் வெள்ளியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என கோத்தா அலாம் ஷா சட்டமன்ற உறுப்பினருமான்  கணபதி ராவ் தெரிவித்தார்

இது மட்டுமல்லாது, மாநில மக்களின் மருத்துவ  செலவீனங்களை குறைப்பதற்கு 'பெடுலி சிஹாட்' மருத்துவ அட்டை திட்டத்தில் 500 வெள்ளி ஒதுக்கீடு செய்யப்பட்ட வேளையில் வரும் 2018ஆம் ஆண்டு பட்ஜெட்டில் அதன் தொகை 200 வெள்ளி அதிகரித்து 700 வெள்ளியாக மாநில அரசு உயர்த்தியது.

இப்படி பட்டியலிட்டுக் கொண்டே போகும்  மாநில அரசின் மக்கள் நலத் திட்டங்களால் பயனடைந்து வரும் சிலாங்கூர் மக்கள் இம்மாநில ஆட்சியை ஒருபோதும் தேசிய முன்னணி அரசாங்கத்திடம் கொடுத்து விடமாட்டார்கள்.

பல்வேறு விவகாரங்களில் தேசிய முன்னணி அரசாங்கத்தின் மீது அதிருப்தி அடைந்துள்ள மக்கள், வரும் 14ஆவது பொதுத் தேர்தலிலும் அதனை வெளிப்படுத்துவர். ஆதலால், சிலாங்கூர் மாநிலத்தை கைப்பற்றும் தேசிய முன்னணியின் எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது என்றார் அவர்.

எல்பில் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் பரிசளிப்பு விழா

கோ.பத்மஜோதி

சுங்கை சிப்புட்-
எல்பில் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் பரிசளிப்பு விழா அண்மையில் தோட்ட மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. பள்ளி ஆண்டு இறுதியில் நடத்தப்படும் இந்நிகழ்வில்  மாணவர்களின் திறனை ஊக்குவிக்கும் வகையில் பரிசளிப்பு விழா நடத்தப்படுகிறது.
பள்ளி மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் அமைந்துள்ள இந்த பரிசளிப்பு விழா மாணவர்களை மேலும் உற்சாகப்படுத்துவதோடு அவர்களின் திறனை வெளிபடுத்துவதற்கான தளமாகவும் அமைகின்றது என பள்ளி தலைமையாசிரியர் மகாதேவன் குறிப்பிட்டார்.

மாணவர்கள் கல்வியில் மட்டுமல்லாது புறப்பாட நடவடிக்கைகளிலும் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். கல்வி, புறப்பாட நடவடிக்கைகளே மாணவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கின்ற நிலையில் கல்வியில் மட்டும் மாணவர்கள் செலுத்தக்கூடாது.
மாணவர்களின் திறமைகளை கண்டறிந்து அதற்கு ஊக்கமும் ஆக்கமும் கொடுத்தாலே மாணவர்கள் சிறப்பான நிலையை அடைவர். அவ்வகையில் மாணவர்களின் நலனுக்காக பாடுபடும் பெற்றோர் ஆசிரியர் சங்கம், பள்ளி வாரியம், பொது இயக்கங்கள், தனிநபர்களின் நடவடிக்கைகளை வெகுவாக பாராட்டுவதாக அவர் தமதுரையில் குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் பல்வேறு பிரிவுகளில்  சிறந்த நிலையை அடைந்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வுக்கு சிறப்பு பிரமுகராக வருகை புரிந்த தொழிலதிபர் யோகேந்திரபாலன், அவரது துணைவியார் திருமதி வர்ஷினி, சுங்கை சிப்புட் மஇகா தொகுதித் தலைவர் இளங்கோவன் முத்து, சுங்கை சிப்புட் மாவட்ட போலீஸ் நிலைய துணைத் தலைவர் அ.பரமேஸ்வரன்,   பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் தலைவர் பாண்டியன், பள்ளி வாரியக்குழு துணைத் தலைவர் கி.மணிமாறன், 80ஆம் ஆண்டு நண்பர்கள் கூட்டுறவு கழக உறுப்பினர்கள் ஆகியோர் மாணவர்களுக்கு பரிசுகளை எடுத்து வழங்கினர். பள்ளி மாணவர்களின் பெற்றோரும் ஆசிரியர்களும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

4ஆவது அனைத்துலக ‘மாணவர் முழக்கம்’- மலேசியாவைப் பிரதிநிதித்து மூன்று மாணவர்கள் களமிறங்குகின்றனர்



தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கான 4வது அனைத்துலக மாணவர் முழக்கம் -2017எனும் பேச்சுப் போட்டி, இந்தியாவின் புதுச்சேரி பல்கலைக்கழக மண்டப அரங்கத்தில் நாளை டிசம்பர் 2ஆம் தேதி சனிக்கிழமை காலை 9 மணிக்குத் தொடங்கி மாலை 5 மணி வரை வெகு சிறப்பாக நடைபெறவிருக்கிறது.

எதிர்காலத்தில் எழுச்சிமிகு இளைய தலைமுறை தமிழ்ப் பேச்சாளர்களை, தமிழ்ப்பள்ளிகளிலிருந்து அடையாளம் கண்டு உருவாக்கும் உன்னத நோக்கத்தின் அடிப்படையில் ஆஸ்ட்ரோ வானவில்லும் வணக்கம் மலேசியாவும் இணைந்து மாணவர் முழக்கம்பேச்சுப் போட்டியை நடத்தி வருகின்றன.
                             
2011-ஆம் ஆண்டு முதல் 2014-ஆம் ஆண்டு வரையில் தேசிய ரீதியில் இடம்பெற்று வந்த தமிழ்ப் பள்ளிகளுக்கான இந்த மாணவர் முழக்கம்பேச்சுப் போட்டி, பின்னர் தொடர்ந்து தேசிய ரீதியிலும் அனைத்துலக ரீதியிலும் நடத்தப்பட்டு வருகின்றது.

இவ்வாண்டு புதுச்சேரியில் நடைபெறும் அனைத்துலக மாணவர் முழக்கம் பேச்சுப் போட்டியில்மலேசியா, இந்தியா, இலங்கை, சிங்கப்பூர், பிரிட்டன், ஐக்கிய அரபு சிற்றரசு ஆகிய 6 நாடுகள் பங்கேற்கவுள்ளார்கள்.

கடந்த ஆண்டு துபாயில் அனனத்துலக மாணவர் முழக்கம் போட்டி நடந்த போது மலேசியா உள்பட இந்தியா, இலங்கை, சிங்கப்பூர் மற்றும் ஐக்கிய அரபுச் சிற்றரசு ஆகிய 5 நாடுகள் கலந்து கொண்டார்கள். இவ்வாண்டு இப்போட்டியில் அதிகமான நாடுகள் களமிறங்கவுள்ளார்கள்.

மலேசியாவில் தேசிய அளவில் நடத்தப்பட்ட 2017-ஆம் ஆண்டுக்கான மாணவர் முழக்கத்தில் வாகைச் சூடிய ஜொகூர், கங்கார் புலாய் தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த ரவின் நாயக்கர், கெடா, பாயா புசார் தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த சரத் சுதாகர் மற்றும் ஜொகூர், மசாய் தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த சஸ்வின் ராஜ் மலேசியாவைப் பிரதிநித்து புதுச்சேரியில் நடக்கும் அனைத்துலக போட்டியில் கலந்து கொள்ள தயார் நிலையில் உள்ளனர். 


இம்மூன்று மாணவப் பேச்சாளர்களும் தற்போது தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கனளத் தயார்படுத்தும் பணிகளில் சம்பந்தப்பட்ட பள்ளிகளின் ஆசிரியர்கள் அயராது ஈடுபட்டு வருகின்றனர். இம்முனற அனனத்துலக
மாணவர் முழக்கம்பேச்சுப் போட்டியில் வெற்றிக் கிண்ணத்தைக் கைப்பற்றி, முதல் நிலை வெள்ளியாளராக நாடு திரும்ப வேண்டும் என்ற உறுதிப்பாட்டுடன் மலேசிய மாணவர்கள் விரிவான பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Friday, 1 December 2017

சுங்கை சிப்புட்டில் சிவநேசன் போட்டி?

ரா.தங்கமணி
ஈப்போ-
அடுத்தாண்டு நடைபெறும் எதிர்பார்க்கப்படும் நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலில் சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியில் மும்முனைப் போட்டி நிலவலாம் என கணிக்கப்படுகிறது.

ஆளும் தேசிய முன்னனியை எதிர்த்து பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி சார்பில் ஜசெகவும் பிஎஸ்எம் கட்சியும் நேரடி களத்தில் குதிக்கலாம்  என நம்பப்படுகிறது.

தற்போது அத்தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள டாக்டர் ஜெயகுமார் பிஎஸ்எம் கட்சியை சேர்ந்தவராக இருந்தபோதிலும் கடந்த இரு  தேர்தல்களிலும் கெ அடிலான் சின்னத்தின் கீழ் போட்டியிட்டுள்ளார்.

மும்முனைப் போட்டி நிலவினால் தேசிய முன்னணியின் சார்பில் யார் வேட்பாளராக களமிறக்கப்படுவர் என்பது கேள்விக்குறியாக உள்ளது. ஆனால் ஜசெக சார்பில் அ.சிவநேசன் போட்டியிடலாம் என நம்பப்படுகிறது.

அ.சிவநேசன் தற்போது சுங்காய் சட்டமன்ற உறுப்பினராக பதவி வகிப்பதோடு கடந்த 2008ஆம் ஆண்டு பக்காத்தான் ராக்யாட் பேராக் மாநில ஆட்சியை கைப்பற்றிய வேளையில் மாநில ஆட்சிக்குழு உறுப்பினராகவும் திகழ்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.