Thursday 31 December 2020

கோவிட்- 19 காலகட்டத்தில் தைப்பூச விழா கொண்டாட்டம் அவசியமானதா?

ரா.தங்கமணி

கோலாலம்பூர்-

உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலாக மாறியுள்ள கோவிட்-19 வைரஸ் தொற்று பரவல் காரணமாக மலேசியாவில் பொது கூட்டங்களுக்கும் இனம், சமயம் சார்ந்த நிகழ்வுகளுக்கும் அதிகபடியான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது அரசாங்கம்.

இச்சூழலில் இங்கு வாழும் இந்துக்களின் பெருவிழாவாக கருதக்கூடிய தைப்பூச விழா நடத்தப்பட வேண்டும் என்றும் நடத்தப்படக்கூடாது என்றும் இருவாறான கருத்துகள் தற்போது எதிரொலிக்கக் தொடங்கியுள்ளன.

முருகப் பெருமானை தரிசிக்க ஆண்டுக்கொருமுறை பத்துமலை திருத்தலத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரள்வதுண்டு. உள்ளூர் மக்கள் மட்டுமன்றி வெளிநாட்டினரும் பெருமளவில் கூடும் தைப்பூச விழா இவ்வாண்டு மிகப்  பெரிய கருத்து மோதலை உருவாக்கியுள்ளது.

தைப்பூச விழாவை ஒருமுறை ரத்து செய்தால் அதுவே சில தரப்பினருக்கு சாதகமான சூழலை உருவாக்கி தொடர்ந்து தைப்பூச விழாவை ரத்து செய்யக்கோருவதற்கு வாய்ப்பாக அமைந்திடலாம். என்ன நடந்தாலும் பத்துமலை தைப்பூச விழா நடந்தே ஆக வேண்டும். வெள்ளி ரதம் கோலாலம்பூர் மகா மாரியம்மன் ஆலயத்திலிருந்து புறப்பட்டு பத்துமலையை சென்றடைய வேண்டும். ஆனால் புதிய நடைமுறையில் மக்கள் கூட்டம் இல்லாமல் அர்ச்சனை செய்வதற்கு ரதம் எங்கும் நிறுத்தப்படாமல் தண்ணீர் பந்தல் எங்கும் அமைக்கப்படாமல் புதிய நிபந்தனையுடன் தைப்பூச ரத வெள்ளோட்டம் நடந்தேற வேண்டும் என்று கோலாலம்பூர் ஶ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானத்தின் தலைவர் டான்ஶ்ரீ ஆர்.நடராஜா கோரிக்கை விடுத்துள்ளார்.

அடுத்தாண்டு தைப்பூச விழா நடத்தப்படக்கூடாது, கோவிட்-19 தொற்று பரவல் அச்சம் காரணமாக தைப்பூச விழா ரத்து செய்யப்பட வேண்டும். இவ்விழாவினால் 'தைப்பூச திரள்' உருவெடுத்து விடக்கூடாது என்று ஆகமம் அணி தலைவர் அருண் துரைசாமி உட்பட பல்வேறு தரப்பினர் சமூக ஊடகங்களில் தங்களது ஆதங்கத்தை தெரிவித்து  வருகின்றனர்.

இவ்விரு கருத்து மோதல்களுக்கு மத்தியில் பினாங்கில் தைப்பூச விழாவை முன்னிட்டு நடத்தப்படும் ரத வெள்ளோட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் தலைவரும் பினாங்கு துணை முதல்வருமான பேராசிரியர் பி.இராமசாமி அறிவித்துள்ளார்.

நாட்டில் கொண்டாடப்படும் ஒரு சமய விழாவுக்கு பின்னாளில் பாதகமான சூழல் ஏற்பட்டு விடக்கூடாது என்ற டான்ஶ்ரீ நடராஜாவின் வாதத்தில் தவறேதும் இல்லை. அதேபோல் மக்கள் நலன் பாதுகாக்க வேண்டியது அவசியம். பெருந்திரளான மக்கள் கூட்டத்தினால் வைரஸ் தொற்று பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துவிடக்கூடாது என்ற எதிர்ப்பாளர்களின் கருத்துகளும் கவனிக்கப்பட வேண்டியவைதான்.

எது எப்படியாயினும் மக்கள் உயிர் பாதுகாக்கப்பட வேண்டியது அவசியம் என்ற சூழலில் அரசாங்கமும் தேசிய பாதுகாப்பு மன்றமும் பத்துமலை தேவஸ்தானமும் ஆழ்ந்து சிந்தித்து தீர முடிவெடுக்க வேண்டும்.

குறிப்பு; கோவிட்- 19 காலகட்டத்தில் தைப்பூச விழா கொண்டாட்டம் அவசியமானதா? என்ற கேள்விக்கு வாசகர்கள் தங்கள் கருத்துகளை கீழே குறிப்பிடலாம்.

No comments:

Post a Comment