Monday 4 March 2019

'மகாதீரிச'த்தை வீழ்த்துமா 'போஸ் கூ'?

ரா.தங்கமணி

கோலாலம்பூர்-
கடந்த 14ஆவது பொதுத் தேர்தலின்போது சுனாமியாக எழுந்து சுழன்றடித்த 'மகாதீரிசம்' எனும் முழக்கத்தை இன்றைய 'போஸ் கூ' முழக்கம் சிதறடித்துள்ளது.

60 ஆண்டுகால தேசிய முன்னணி ஆட்சியை கவிழ்ப்பதற்கு அன்று எதிர்க்கட்சியாக இருந்த நம்பிக்கை கூட்டணி 'மகாதீரிசத்தை' ஓர் ஆயுதமாக பயன்படுத்தி ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது.

துன் மகாதீரால் மட்டுமே தேமுவை வீழ்த்த முடியும் என்ற உண்பையின் அடிப்படையில் அக்கூட்டணியின் ஆட்சி அதிகாரத்தில் பிரதமர் பதவி மகாதீருக்கு தாரை வார்க்கப்பட்டது.

முன்னாள் பிரதமர் என்ற தோரணையில் இன்றைய நம்பிக்கை கூட்டணியின் ஆட்சி அதிகாரம் யாவும் துன் மகாதீர் வசமே வீழ்ந்து கிடக்கும் நிலையில் 9 மாதங்களில் மக்களின் அதிருப்தி அலையை இக்கூட்டணி சம்பாதித்ததன் விளைவுதான் கேமரன் மலை, செமினி இடைத் தேர்தலில் தேசிய முன்னணி மீண்டும் வெற்றி பெற்றுள்ளதற்கான காரணம் ஆகும்.

'மகாதீரிசத்தால்' கட்டியெழுப்பப்பட்ட நம்பிக்கை கூட்டணி ஆட்சியை வீழ்த்தக்கூடிய ஆயுதமாக 'போஸ் கூ' சுலோகம் தற்போது விஸ்வரூபம் எடுத்து வருகிறது.

முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கை குறிக்கும் வகையில் பெலும் பரப்புரையாக மாறியுள்ள 'போஸ் கூ' சுலோகம் ஏற்படுத்தியுள்ள தாக்கமாகவே செமினியில் தேமு வெற்றி அமைந்துள்ளது.

'Malu Apa BosKu' என தொடங்கப்பட்ட இந்த பரப்புரை குறித்து பிரதமர் துன் மகாதீர் கூட விமர்சனம் செய்திருந்தார்.

தமது ஆட்சி காலத்தின்போது 1எம்டிபி நிறுவனத்தில் நிகழ்ந்த நிதி முறைகேடுகள் தொடர்பில் நீதிமன்ற வழக்குகளை எதிர்கொண்டுள்ள டத்தோஸ்ரீ நஜிப்புக்கு ஆதரவளிக்கும் வகையில் தொடங்கப்பட்டதே ‘Malu Apa Bossku' பிரச்சாரம் ஆகும்.

No comments:

Post a Comment