Monday, 27 July 2020

மலைப்படி மாரியம்மன் ஆலயப் பிரச்சினைக்கு இரு பரிந்துரைகள் முன்மொழிவு- கணபதிராவ்

ரா.தங்கமணி

ஷா ஆலம்-

ஷா ஆலம், செக்‌ஷன் 11இல் அமைந்துள்ள ஶ்ரீ மகா ஆலயம் (மலைப்படி மாரியம்மன்) ஆலயம் அகற்றப்பட வேண்டும் என்ற விவகாரத்திற்கு சுமூகமான முறையில் தீர்வு காணப்பட வேண்டும் என்று மத்திய நில அலுவலகத்திடம் வலியுறுத்தப்பட்டதாக சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் வலியுறுத்தினார்.

இவ்வாலயம் விவகாரம் தொடர்பில் மத்திய நில அலுவலகம், ஆலய தரப்பு  உட்பட பல்வேறு தரப்பினரை உள்ளடக்கிய கலந்துரையாடல் நடத்தப்பட்டது.

150 ஆண்டுகால வரலாற்றைக் கொண்டுள்ள இவ்வாலயப் பிரச்சினைக்கு சுமூகமான முறையில் தீர்வு காண்பதற்காக இரு பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டன.


முதலாவதாக, ஆலயத்திற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் அருகிலுள்ள பள்ளி மேம்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். இரண்டாவதாக ஆலயத்தை அகற்றுவற்கு முன்னர் வேறு இடம் ஆலயத்திற்கு (செக்‌ஷன் 11இல் மட்டும்) மாற்று நிலம் ஒதுக்கப்பட வேண்டு என்று கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்னரே தோட்டப்புற இந்தியர்களால் வழிபாடு செய்யப்பட்ட இந்த ஆலயம் வெறுமனே அகற்றப்படுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்பதை சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு அழுத்தமாக தெரிவிக்கப்பட்டது.


இந்த மாரியம்மன் ஆலய விவகாரத்திற்கு சுமூகமான முறையில் தீர்வு காணவே அனைத்துத் தரப்பினரும் விரும்புகின்றனர். இதில் அரசியல் ஆதாயம் தேட யாரும் முற்பட வேண்டாம், ஆலயம், தமிழ்ப்பள்ளி, சமூகம் சார்ந்த பிரச்சினைகளுக்கு கட்சி பேதமின்றி அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும் என்று கணபதிராவ் குறிப்பிட்டார்

செக்‌ஷன் 11இல் அமைந்துள்ள மலைப்படி மாரியம்மன் ஆலயம் அந்நிலத்திருந்து அகற்றப்பட வேண்டும் என்று அண்மையில் எச்சரிக்கை கடிதம் வழங்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.


Friday, 24 July 2020

வறுமைகோட்டில் வாழும் தாய்மார்களுக்கு ''கிஸ்'' அட்டைகள் வழங்கப்பட்டன

ரா.தங்கமணி

ஷா ஆலம்-
வறுமை நிலையில் வாழும்  தாய்மார்களின் குடும்பச் சுமையை குறைக்கும் வகையில் சிலாங்கூர் மாநில அரசு  அறிமுகப்படுத்திய கிஸ் திட்டத்தில் பதிந்து கொண்ட தகுதியானவர்களுக்கு கிஸ் அட்டைகளை சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் எடுத்து வழங்கினார். 
கோத்தா கெமுனிங் பகுதியில் பகுதியில் வசிக்கும் 18 வயதுக்கும் வயதுக்கும் குறைவான பிள்ளைகளை கொண்டுள்ள தனித்து வாழும் தாய்மார்கள் கிஸ் திட்டத்தில் பதிந்து கொண்ட நிலையில் அவர்களில் தகுதியானவர்களுக்கு கிஸ் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.

தமது சட்டமன்றத் தொகுதி அலுவலகத்தில் வாயிலாக பதிந்து கொண்டவர்களில் 50 பேருக்கு இந்த கிஸ் அட்டைகள் புதிதாக வழங்கப்பட்டுள்ளன. 

தாய்மார்களின் சுமையை குறைக்கும் வகையில் அரசாங்கத்தினால் வழங்கப்படும் உதவியை பெறுபவர்கள் அதனை சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினருமான கணபதிராவ் குறிப்பிட்டார்.

நேற்று முன்தினம் கோத்தா கெமுனிங் சட்டமன்றத் தொகுதி சேவை மையத்தில் கோவிட்-19 எஸ்ஓபி-பின்பற்றி  இந்த 50 பேருக்கும் இரு கட்டங்களாக கிஸ் அட்டைகள் வழங்கப்பட்டன.

Wednesday, 22 July 2020

ராணுவ ஹெலிகாப்டர் விபத்து; 9 வீரர்களின் உடல்கள் கண்டெடுப்பு

பொகோத்தா-
 பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையின்போது ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான சம்பவத்தில் காணாமல் போன 11 ராணுவ வீரர்களில் 9 பேரின் சடலங்களை கண்டுபிடித்துள்ளதாக கொலம்பியா ராணுவம் தெரிவித்துள்ளது. 
செவ்வாய்க்கிழமை நிகழ்ந்த இந்த விபத்தில் ஒன்பது பணியாளர்களின் சடலங்களை கண்டுபிடித்துள்ளதாக ராணுவப் பேச்சாளர் ஒருவர் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

உணவகத்தில் உணவருந்திய பெண் அடையாளம் காணப்பட்டார்

சுங்கை சிப்புட்-
வீட்டுக்குள் கட்டாயம் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற உத்தரவை மீறி உணவகத்தில் உணவருந்திய பெண் அடையாளம் காணப்பட்டுள்ளார் என்று பேரா மாநில சுகாதார ஆட்சிக்குழு உறுப்பினர் அஹ்மாட் சைடி முகமட் டாவுட் தெரிவித்தார். 

கையில் இளஞ்சிவப்பு வளையத்துடன் வீட்டுக்குள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டிய பெண் ஒருவர் பண்டார் மேரு ராயாவில் உள்ள உணவகம் ஒன்றில் உணவருந்தும் புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலானது.

பிகேபி மீறல்; வெ.6 லட்சம் அபராதத் தொகை வசூலிப்பு

கோலாலம்பூர்-
கோவிட்-19 நோய் தொற்று காரணமாக நாட்டில் அமல்படுத்தப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை மீறிய குற்றத்திற்காக தனிநபர், நிறுவனங்களுக்கு எதிராக வெளியிடப்பட்ட அபராதத் தொகையாக 6 லட்சம் வெள்ளி வசூலிக்கப்பட்டுள்ளது. 

கடந்த மார்ச் முதல் ஜூன் மாதம் வரை வெளியிடப்பட்ட அபராதத் தண்டனையின் வாயிலாக 5,928.000 வெள்ளி வசூலிக்கப்பட்டுள்ளது என்று உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

சுழல் முறையில் 54 பள்ளிகள் செயல்பட தொடங்கின

கோலாலம்பூர்-
இன்று முழுமையாக செயல்பட்டுள்ள பள்ளித் தவணையில்  54 பள்ளிகள் சுழல் முறையில் செயல்படுத்தப்பட்டுள்ளன. போதிய இடப் பற்றாக்குறையை எதிர்நோக்கியிருப்பதால் இந்த பள்ளிகள் அனைத்தும் காலை, மாலை என இரு வேளை பள்ளிகளாக செயல்படுகின்றன கல்வித்துறை தலைமை இயக்குனர் டாக்டர் ஹபிபா அப்துல் ரஹிம் தெரிவித்தார். 

கோவிட்-19 தாக்கத்தின் பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டிருந்த நிலையில் இன்று முதலாம் வகுப்பு நான்காம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டன.

''Murder In Malaysia'' ஆவணப்படம்; ஆஸ்ட்ரோவுக்கு அபராதம் விதித்தது SKMM

கோலாலம்பூர்-
மங்கோலிய மாடல் அழகி அல்தான்துயா கொலை செய்யப்பட்ட சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு அல் ஜஸீராவில் ஒளியேறிய ''Murder In Malaysia'' எனும் ஆவணப்படத்திற்காக தனியார் ஒளிபரப்பு நிலையமான ஆஸ்ட்ரோவுக்கு தகவல் தொடர்பு, பல்லூடக ஆணையம் (SKMM) அபராதம் விதித்துள்ளது.
101  EAST எனும் நிகழ்ச்சியின் வாயிலாக ''Murder In Malaysia'' ஆவணப்படம் ஒளிபரப்பப்பட்டது. ஆஸ்ட்ரோவின் முதன்மை நிறுவனமான Measat Broadcast Network Systems Bhd இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 2015ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் தேதி ஒளிபரப்பப்பட்ட இந்த ஆவணப்படம் தொடர்பில் ஐந்தாண்டுகளுக்கு பின்னர் அபராதம் விதிக்கப்படுகிறது.

Tuesday, 21 July 2020

உழைப்பால் உயரம் தொட்ட டத்தோஶ்ரீ ஏ.கே.சக்திவேல்

ரா.தங்கமணி

"'மகிழ்ச்சி''.... கபாலி திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உச்சரித்த இந்த வாசகம் அன்றைய காலகட்டத்தில்பெரும் புகழை அடைந்தது. இத்திரைப்படத்தில் ரஜினிகாந்த் சொன்னதை காட்டிலும் பல மடங்கு தன்வாழ்நாளில் ''மகிழ்ச்சி'' எனும் வார்த்தையை அன்றாடம் உச்சரிக்கும் வேதச் சொல்லாக கொண்டிருக்கிறார் தொழிலதிபர் டத்தோஶ்ரீ ஏ.கே.எஸ் என்று அழைக்கப்படும் ஏ.கே.சக்திவேல்.
உழைப்பு மட்டுமே ஒரு மனிதன் வாழ்வில் முன்னேற்றம் காண்பதற்கான அடிப்படையான ஆணிவேர் என்பதை தனது உழைப்பின் மூலம் வெற்றி சிகரத்தை தொட்டுள்ளார் ஈப்போவைச் சேர்ந்த டத்தோஶ்ரீ சக்திவேல்.

சுங்கை சிப்புட் சந்தைப் பகுதியில் காய்கறி விற்பனையாளராக தனது வியாபார தளத்தை தொடங்கிய சக்திவேல், இன்று அடைந்திருக்கும் உயரம் பிறரை வியப்படையச் செய்துள்ளது. காய்கறி விற்பனையை தொடங்கி செய்துக் கொண்டிருக்கும்போதே இது மட்டுமே தனது மைல்கல் அல்ல என்பதை உணர்ந்து உணவு விநியோக (Food Catering) தொழிலையும் மேற்கொண்டார்.
திருமணங்களுக்கு உணவு விநியோகச் சேவையை மேற்கொண்ட டத்தோஶ்ரீ சக்திவேல், பின்னர் மண்டப அலங்காரச் சேவை (Wedding Decoration) முன்னெடுத்து செயல்படுத்தினார். இதன் மூலம் திருமண ஜோடிகள் விரும்பும் வகையில்  பலவிதமான டிசைன்களின் மண்டப அலங்காரச் சேவையிலும் கால் பதித்தார்.

இது மட்டுமல்லாது, மண்டப அலங்காரம், உணவு விநியோகச் சேவையை மட்டும் வழங்கினால் போதாது. திருமண வைபவத்தை முன்னிட்டு தன்னை நாடி வரும் வாடிக்கையாளர்களுக்கு அனைத்து  சேவைகளும் ஒரே இடத்தில் கிடைக்கப்பெறும் வகையில் ஶ்ரீ ஏ.கே.எஸ். மண்டபத்தை நிர்மாணித்து திருமணம், கலைவிழா, பொது கூட்டம் என அனைவருக்கும் தனது சாதனையில் வாசலை திறந்துள்ளார்.
காலம் எப்போதும் நின்றுக் கொண்டிருப்பதில்லை. காலவோட்டத்தின் மாறுதலுக்கு ஏற்ப தன்னை மாற்றி கொள்பவர்களே சாதிக்க முடியும் என்பதால் அந்த மாற்றத்தை தனது தொழில்துறையிலும்  கடைபிடித்து வந்தேன். அதன் பலனையே இன்று எனது வெற்றியாக சுவைத்துக் கொண்டிருக்கிறேன் என்று தனது அனுபவங்களை விவரிக்கிறார் டத்தோஶ்ரீ ஏ.கே.சக்திவேல்.

இன்று தனது 47ஆவது பிறந்தநாளை கொண்டாடும் "மகிழ்ச்சி" நாயகன் டத்தோஶ்ரீ ஏ.கே.சக்திவேலுக்கு  "பாரதம்இணைய ஊடகம் தனது பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறது.

Saturday, 18 July 2020

சிலிம் இடைத் தேர்தல்; மஇகா போட்டியிட வேண்டும்- டத்தோ முருகையா

ரா.தங்கமணி

கோலாலம்பூர்-

இடைத் தேர்தலை எதிர்நோக்கியுள்ள சிலிம் சட்டமன்றத் தொகுதியில் அம்னோவுக்கு பதிலாக மஇகா வேட்பாளர் களமிறக்கப்பட வேண்டும் என்று மஇகாவின் உதவித் தலைவர் டத்தோ டி.முருகையா கோரிக்கை விடுத்துள்ளார்.

பேரா மாநில அரசில் மஇகாவின் பிரதிநிதி அங்கத்துவம் பெறுவதற்கு ஏதுவாக சிலிம் சட்டமன்றத் தொகுதி தற்காலிமாக இரவல் (Pinjam) அடிப்படையில் மஇகாவுக்கு வழங்கப்பட  வேண்டும்.

பேரா மாநிலத்தை தற்போது பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணி ஆட்சி செய்து வருகின்ற போதிலும் அக்கூட்டணியில் இடம்பெற்றுள்ள மஇகாவுக்கு ஓர் நியமனப் பதவிகளை வழங்கக்கூட இன்றைய மந்திரி பெசார் தயக்கம் காட்டுகிறார்.

கடந்த பொதுத் தேர்தல்களில் மஇகாவுக்கு வெற்றி வாய்ப்பிருந்த தொகுதிகளை அம்னோ எடுத்துக் கொண்டு தோல்வி அடையக்கூடிய தொகுதிகளான ஜெலாப்பாங், சுங்காய் போன்ற தொகுதிகளை வழங்கப்பட்டன. தோல்வி என்றாலும் அதனை ஏற்றுக் கொண்டு போட்டியிட்டு தோல்வியை ஏற்றுக் கொண்டது மஇகா.

நாடாளுமன்றத்தில் தேசிய முன்னணியின் எண்ணிக்கை சரிந்து விடக்கூடாது எனும் நோக்கி இடைத் தேர்தலை எதிர்கொண்ட கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதியை அம்னோவுக்கு தற்காலிகமாக விட்டுக் கொடுத்தது மஇகா. அங்கு மஇகா வெற்றி பெற்றிருந்த போதிலும் மஇகாவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருந்த போதிலும்  பெருந்தன்மையுடன் அம்னோவுக்கு விட்டுக் கொடுத்தது மஇகா.

அதேபோன்று பேரா மாநில அரசில் இந்தியர் பிரதிநிதி இடம்பெறும் வகையில் சிலிம் சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலில் கருணை மனதோடு பங்காளி கட்சியான மஇகா மீண்டும் தனது செல்வாக்கை நிலைநிறுத்திக் கொள்ள அம்னோ பெருந்தன்மையுடன் இத்தொகுதியை தற்காலிகமாக மஇகாவுக்கு இரவல் கொடுக்க வேண்டும் என்று டத்தோ முருகையா குறிப்பிட்டார்.

சிலிம் சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்த டத்தோ குசாய்ரி அப்துல் தாலிம் அண்மையில் காலமானதை அடுத்து அங்கு இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது.


Thursday, 16 July 2020

பேரா மந்திரி பெசாரின் சிறப்பு அதிகாரியாகிறார் விஜயதாமரை?

ரா.தங்கமணி

ஈப்போ-
பேரா மாநில மந்திரி பெசாரின் சிறப்பு ஆலோசகர், சிறப்பு அதிகாரி ஆகிய பதவிகள் ம இகாவுக்கு வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை வலுத்து வரும் நிலையில் தற்போது மந்திரி பெசாரின் சிறப்பு அதிகாரியாக குமாரி விஜயதாமரை நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் உலா வருகின்றன.

பேரா மந்திரி பெசார் டத்தோஶ்ரீ  அஹ்மாட் பைசால் அஸுமுவின் தம்புன் நாடாளுமன்றத் தொகுதி அலுவலகத்தில் பணியாற்றும் விஜயதாமரை அங்குள்ள இந்தியர்களின் பிரச்சினையை கவனித்து வரும் நிலையில், மாநில மந்திரி பெசாரின் சிறப்பு அதிகாரியாக நியமனம் செய்யப்படுவதன் வழி  இம்மாநிலத்திலுள்ள இந்தியர்களின் பிரச்சினையை கவனிக்கப்படும்.

இது குறித்து விஜயதாமரையிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது, மந்திரி பெசாரின் சிறப்பு அதிகாரி நியமனம் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில் இப்பொறுப்பில் பணியாற்றும்படி கேட்டுக் கொண்டதன் பேரில் தாம் கடமையாற்றி வருவதாக கூறினார்.

ஆலயம் உட்பட பேரா மாநில இந்தியர்களின் பிரச்சினைகள் தமது நேரடி பார்வையின் கீழ் கவனிக்கப்படும் என்று டத்தோஶ்ரீ பைசால் அஸுமு அண்மையில் அறிவித்திருந்த நிலையில் தேசிய முன்னணி ஆட்சியில் மஇகாவுக்கு  வழங்கப்பட்ட சிறப்பு ஆலோசகர், சிறப்பு அதிகாரி ஆகிய பதவிகள் கேள்விக்குறியாகின.

மஇகாவுக்கு சிறப்பு ஆலோசகர், சிறப்பு அதிகாரி பதவிகள் வழங்கப்பட வேண்டும் என்று அரசு சார்பற்ற பொது இயக்கங்கள் மந்திரி பெசார் அலுவலகத்தில் மகஜர் வழங்கின.

 மேலும், மந்திரி பெசாரின் சிறப்பு அதிகாரியாக குமாரி விஜயதாமரை நியமனம் செய்யப்படுவது சிறப்பான முடிவு என்று சுங்கை சிப்புட் பிகேஆர் கட்சியைச் சேர்ந்த உமாபரன் குறிப்பிட்டார்.
எவ்வித கட்சி பேதமுமின்றி பொதுநிலையில் அனைத்தத் தரப்பினருடனும் இணங்கி பணியாற்றக்கூடிய ஒருவரை தனது சிறப்பு அதிகாரியாக டத்தோஶ்ரீ அஹ்மாட் பைசால் அஸுமு நியமனம் செய்வது வரவேற்கக்கூடியது ஆகும் என்று சமூகச் சேவையாளருமான அவர் மேலும் சொன்னார். 

Wednesday, 15 July 2020

மது அருந்தி வாகனம் செலுத்தினால் வெ.1 லட்சம் அபராதம்

கோலாலம்பூர்-
மது அருந்தி விட்டு வாகனமோட்டும் ஓட்டுனர்களுக்கு அதிகபட்சமாக 1 லட்சம் வெள்ளி வரை அபராதம் விதிக்க வகை செய்யும் சட்ட திருத்த மசோதா தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்றக் கூட்டத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளது.

தற்போது நடப்பில் உள்ள இக்குற்றத்திற்கான  முதற்கட்ட அபராதத் தொகை 20,000 வெள்ளியிலிருந்து 1 லட்சமாக உயர்த்தப்படுவதோடு தொடர்ந்து இக்குற்றங்களை புரிபவருக்கு 150,000 வெள்ளி வரையிலும் அபராதம் விதிக்கப்படும் என்று இந்த சட்டத் திருத்தத்தில் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் வீ கா சியோங் தெரிவித்தார்.

அதோடு முதல் முறையாக குற்றம் புரிபவர்களுக்கு 15 ஆண்டுகால சிறையும் தொடர்ந்து குற்றம் இழைப்போருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதிக்கப்படுவதோடு அவர்களின் வானகமோட்டும் உரிமம் (லைசென்ஸ்) 10 ஆண்டுகளிலிருந்து 20 ஆண்டுகளுக்கு ரத்து செய்யப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

பொற்கால ஆட்சியை வழங்கிய கர்மவீரர் காமராஜர்

ரா.தங்கமணி

காமராஜரின் 117ஆவது பிறந்தநாள் சிறப்பு கட்டுரை

இப்போது வரை தமிழ்நாடு ஒருவரின் ஆட்சியை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறது என்றால் அது பெருந்தலைவர் காமராஜர் ஆட்சியை தான். எப்போது தேர்தல் வந்தாலும் காமராஜர் ஆட்சியை வழங்கும் என்ற கட்சிகளின் வாக்குறுதிகளிலே நமக்கு தெரிந்து விடும் காமராஜர் ஆட்சி எவ்வளவு சிறப்பு வாய்ந்தது என்று.

தமிழ்நாட்டில் பொற்கால ஆட்சியை வழங்கிய கர்மவீரர் காமராஜர் பிற தலைவர்களை போல் எளிதில் கடந்து விட முடியாது. தனது ஒன்பது ஆண்டுகால ஆட்சியில் மக்களுக்கான திட்டங்களை முன்னெடுத்து இன்றும் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

1953ஆம் ஆண்டு ராஜாஜி கொண்டு வந்த குலக்கல்வி திட்டத்தின் பெருமளவு எதிர்ப்புகள் கிளம்பியதனால் செல்வாக்கு குறைந்த ராஜாஜி தனது பதவியிலிருந்து விலகினார். ஆனால் தனது பதவிக்கு சி.சுப்பிரமணியத்தை ராஜாஜி முன்னிறுத்திய போதிலும் சட்டமன்ற உறுப்பினர்களின் பேராதரவுடன் 1953இல் தமிழக முதல்வராக பொறுப்பேற்றார் காமராஜர்.

முதல்வராக பதவியேற்றவுடன் முதல் பணியாக ராஜாஜி கொண்டு வந்த குலக்கல்வி திட்டத்தினை கைவிட்டு அவரால் மூடப்பட்ட 6,000 பள்ளிகளை திறந்தார். 17,000க்கும் மேற்பட்ட பள்ளிகளை திறந்ததோடு பள்ளிக் குழந்தைகளுக்கு இலவச மதிய உணவுத் திட்டத்தை ஏற்படுத்தி ஏழை மக்களிடையே கல்வி முன்னேற்றத்தையும் ஏற்படுத்தினார்.இதனாலேயே கல்வி கண் திறந்த காமராஜர் என்ற புகழாரமும் பெற்றார்.

காமராஜர் தன்னுடைய அமைச்சரவையை அனைவரும் வியக்கும்படி அமைத்திருந்தார். தன்னை எதிர்த்து போட்டியிட்ட சி.சுப்பிரமணியத்தையும் அவரை முன்மொழிந்த எம்.பக்தவத்சலத்தையும் அமைச்சராக்கியிருந்தார்.

மூன்று முறை தமிழக முதலமைச்சராக தேர்தெடுக்கப்பட்ட காமராஜர், பதவியை விட தேசப்பணியும், கட்சிப்பணியுமே முக்கியம் என கருதி “கே-ப்ளான்  (K-PLAN)” எனப்படும் “காமராஜர் திட்டத்தினை” கொண்டுவந்தார். அதன்படி, கட்சியின் மூத்த தலைவர்கள் பதவிகளை, இளைஞர்களிடம் ஒப்படைத்துவிட்டு, கட்சிப்பணியாற்ற வேண்டும் என்பது இதன் நோக்கமாகும். அதன் பேரில் அக்டோபர் 2, 1963 ஆம் ஆண்டு தன்னுடைய முதலமைச்சர் பதவியைத் துறந்த காமராஜர் அப்பொறுப்பினை பக்தவத்சலத்திடம் ஒப்படைத்துவிட்டு, டில்லிக்குச் சென்றார். பிறகு, அதே ஆண்டில் அக்டோபர் 9 ஆம் தேதி, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராகப் பொறுப்பேற்றார். இத்திட்டத்தினை நேரு போன்ற பெரும் தலைவர்கள் ஏற்றுக்கொண்டது மட்டுமல்லாமல், லால்பகதூர் சாஸ்திரி, மொரார்ஜி தேசாய் செகசீகன்ராம், எஸ்.கே. பட்டேல் போன்றோர் பதவியைத் துறந்து இளைஞர்களிடம் ஒப்படைத்தனர். இதனால், கட்சியினரிடமும், தொண்டர்களிடமும், மக்களிடமும் மரியாதைக்குரிய ஒருவராக மாறி, அனைவருக்கும் முன்மாதிரியாகவும் கிங் மேக்கர் என்று புகழக்கூடிய காமராஜர் இந்திய நாட்டின் இரு பிரதமர்களை உருவாக்கிய பெருமையையும் பெற்றிருந்தார். 

1964 ஆம் ஆண்டு, ஜவர்ஹலால் நேரு மரணமடைந்தவுடன், லால்பதூர் சாஸ்திரி அவர்களை இந்திய பிரதமராக முன்மொழிந்தார். பிறகு, 1966ஆம் ஆண்டு லால்பதூர் சாஸ்திரியின் திடீர் மரணத்தைத் தழுவ, 48 வயதே நிரம்பிய நேருவின் மகள் இந்திராகாந்தியை இந்தியாவின்  புதிய பிரதமராகவும் உருவாக்கினார் காமராஜர்.

சமூகத் தொண்டையே பெரிதாக நினைத்து வாழ்ந்த காமராஜர், கடைசிவரை திருமணம் செய்துகொள்ளாமலே வாழ்ந்தார். ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக இருந்தபொழுதும் இறுதிவரை வாடகை வீட்டிலேயே வாழ்ந்து இருந்தார். அவருக்காக அவர் சேர்த்து வைத்த சொத்து சில கதர் வேட்டிகள், சட்டைகள், புத்தகங்கள் உட்பட 150 ரூபாய் மட்டுமே.

அரசியல் தடத்தில் தனக்கென ஒரு வரலாற்றை படைத்து இன்றளவும் மக்கள் ஏங்கிக் கொண்டிருக்கும் பொற்கால ஆட்சியை வழங்கிய கர்மவீரர் காமராஜர்  1903 ஜூலை 15இல் பிறந்து 1975, அக்டோபர் 2ஆம் தேதி மறைந்தார்.

நிர்வாகத் திறன், நேர்மை, உழைப்பு, உறுதி,தொலைநோக்குச் சிந்தனை என்று பொற்கால ஆட்சியை வழங்கிச் சென்ற காமராஜரின் சிந்தனைகளையும் செயல்பாடுகளையும் மனதில் நிறுத்தி தலை வணங்கி வாழ்த்துவோம்.



Tuesday, 14 July 2020

வறுமை ஒழிப்பு திட்டத்தில் சிலாங்கூர் முன்மாதிரியாக உருவெடுக்கும்- கணபதிராவ்

ரா.தங்கமணி

ஷா ஆலம்-
சிலாங்கூர் மாநிலத்தில் வாழும் வசதி குறைந்த மக்களுக்கு உதவிடும் வகையில் முன்னெடுக்கப்படும் உதவித் திட்டத்தின் வாயிலான பெறப்படும் தகவல்களைக் கொண்டு துரித குடிமக்கள் உதவி நலத் திட்ட அமைப்பு (SSIPR) உருவாக்கப்பட்டு வருகிறது என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் தெரிவித்தார்.

நேற்று நடைபெற்ற சிலாங்கூர் மாநில சட்டமன்றக் கூட்டத்தொடரின்போது உரையாற்றிய கணபதிராவ், இம்மாநிலத்திலுள்ள வசதி குறைந்த மக்களுக்கு வழங்கப்பட்டு வரும் உதவி நலத் திட்டங்கள் குறித்து விவரித்தார்.

தற்போது மாநில அரசு வழங்கும் புளூபிரிண்ட் வறுமை ஒழிப்பு உதவித் திட்டம், பெருநாள் காலத்தின்போது வறுமை குறைந்தவர்களுக்கு வழங்கப்படும் பற்றுச்சீட்டு ஆகியவற்றின் வழி வறுமை கோட்டில் உள்ள மக்களின் தரவுகள் திரட்டப்படுகின்றன.

இந்த தரவுகளை அடிப்படையாகக் கொண்டு துரித குடிமக்கள் உதவி நலத் திட்ட அமைப்பு உருவாக்கப்பட்டு வருகிறது.

இதன் மூலம் 2025ஆம் ஆண்டில் துரித வளர்ச்சி கண்ட முதன்மை மாநிலமாக சிலாங்கூரை உருமாற்றும் மாநில அரசின் குறிக்கோளுக்கு ஏற்ப இந்த SSIPR-ஐ வலுப்படுத்தும் என்று கணபதிராவ் தெரிவித்தார்.