Wednesday, 3 June 2020

பேரா மந்திரி பெசாரின் சிறப்பு ஆலோசகர் பதவிக்கு புதுமுகத்தை நிரப்புமா மஇகா?

ரா.தங்கமணி

ஈப்போ-
பேரா மாநிலத்தில் புதிதாக ஆட்சிமையத்துள்ள பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கத்தில் இந்தியர்களுக்கான பிரதிநிதி இன்னமும் நியமிக்கப்படாமல் இருப்பது அரசியல் வட்டாரத்தில் மட்டுமல்லாது மக்களிடையேயும் அதிருப்தியான சூழல் நிலவுகிறது.

பேரா மாநிலத்தில் இந்தியர் பிரதிநிதியாக சட்டமன்றத்தில் யாரும் இல்லாத சூழலில் மாநில மந்திரி பெசாரின் சிறப்பு ஆலோசகர், சிறப்பு அதிகாரி ஆகிய பதவிகள் தேசிய முன்னணி ஆட்சியில்  கடந்த 2009ஆம் ஆண்டு முதல்  2018ஆம் ஆண்டு வரை வழங்கப்பட்டு வந்தது.

2009இல் டான்ஶ்ரீ எஸ்.வீரசிங்கமும் 2013இல் டத்தோ வ.இளங்கோவும் இப்பதவியை அலங்கரித்து வந்த நிலையில் 2018ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்குப் பின்னர் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியில் சுங்காய் சட்டமன்ற உறுப்பினர் அ.சிவநேசன் ஆட்சிக்குழு உறுப்பினராக பொறுப்பேற்றார்.

அதேபோல் 2013ஆம் ஆண்டு பொதுத்  தேர்தலுக்குப் பின்னர் மஇகா இளைஞர் பிரிவின் முன்னாள் தலைவர் டத்தோ சி.சிவராஜுக்கு மந்திரி பெசாரின்  சிறப்பு அதிகாரி பதவி வழங்கப்பட்டது. அதுவும் தற்போது காலியாக கிடக்கிறது.
இப்போது பக்காத்தான் ஹராப்பான் ஆட்சி கவிழ்க்கப்பட்டு பெரிக்காத்தான் நேஷனல் ஆட்சி புரியும் இம்மாநிலத்தில் இன்னுமும் இந்தியருக்கான பிரதிநிதி நியமிக்கப்படாதது பெரும் மர்மமாகவே இருக்கிறது.

இதனிடையே, இம்மர்மத்திற்கு விடை காணும் வகையில் இந்தியர் பிரதிநிதியாக புதுமுகத்தை மாநில மந்திரி பெசார் டத்தோஶ்ரீ ஃபைசால் அஸுமு விரும்புவதாகவும் ஆனால் மஇகாவின் சார்பில் பரிந்துரைக்கப்பட்டவரில் பழைய முகமே இடம்பெற்றுள்ளதுதான் இந்திய பதவி நியமனத்திற்கு காலதாமதம் என்று அறியப்படுகிறது.

பேரா மஇகாவின் தலைவராக டத்தோ இளங்கோவே பதவி வகித்து வரும் சூழலில் மந்திரி பெசாரின் ஆலோசகர் பதவிக்கும் அவர் குறி வைத்துள்ளார் என்பதும் வெள்ளிடைமலை. ஆனால் பதவியில் இருந்தவர்களை காட்டிலும் புதுமுகத்தை மஇகா சிபாரிசு செய்ய வேண்டும் என்று மந்திரி பெசார் எதிர்பார்ப்பதாக தகவல்கள் பரவுகின்றன.
 
மஇகாவில் புதுமுகங்களே இல்லையா? என சில ஆய்வுகளை மேற்கொண்டதில் அரசியலும் கட்சிப் பணிகளிலும் சமூகச் சேவைகளும் திறம்பட சேவையாற்றி வருபவர்கள் பலர் உள்ளனர். 
ஈப்போ பாராட் மஇகா தொகுதித் தலைவர் எஸ்.ஜெயகோபி, தைப்பிங் தொகுதி மஇகா தலைவர் எம்.வீரன்,புக்கிட் கந்தாங் மஇகா தொகுதித் தலைவர் ஜி.சண்முகவேலு,கோலகங்சார் மஇகா தொகுதித் தலைவர் ராமச்சந்திரன், தாப்பா மஇகா தொகுதித் தலைவர் சந்தனசாமி, சுங்கை சிப்புட் மஇகா தொகுதி செயலாளர் கி.மணிமாறன், பேரா மஇகா இளைஞர் பிரிவுத் தலைவர் ஜெயகணேஷ் என புதுமுகங்களின் பட்டியல் நீண்டுக் கொண்டே போகலாம்.

ஜெயகோபி ஈப்போ வட்டாரத்தில் நன்கு அறிமுகமானவர் ஆவார். கடந்த பொதுத் தேர்தலின்போது புந்தோங் தொகுதி தேமு ஒருங்கிணைப்பாளராக இருந்து சிறந்த முறையில் சேவையாற்றினார். புந்தோங் தொகுதியில் வேட்பாளராக களமிறக்கக்கூடிய தகுதியும் அரசியலில் நிறைந்த முதிர்ச்சியும்  கொண்டவர் ஜெயகோபி.




மஇகாவின் மத்திய செயலவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட வீரன், தைப்பிங் தொகுதியில் சிறந்த சேவைகளை ஆற்றி வருவதோடு தற்போது தைப்பிங் நகராண்மைக் கழக உறுப்பினராக பதவி வகித்து வருகிறார். முன்பு பேரா மாநில மஇகா இளைஞர் பிரிவுத் தலைவராகவும் பொறுப்பேற்றுள்ளார்.




புக்கிட் கந்தாங் மஇகா தொகுதித் தலைவர் ஜி.சண்முகவேலு அத்தொகுதியில் நிறைவான சேவையை வழங்கி  வந்துள்ளதோடு பேரா மஇகாவின் இளைஞர் பிரிவுத் தலைவராகவும் பொறுப்பு வகித்து வந்துள்ளார்.






கோலகங்சார் மஇகா தொகுதித் தலைவர் ராமசந்திரன் அத்தொகுதியில் நன்கு அறியப்பட்ட சமூகச் சேவராக திகழ்கிறார். கோலகங்சார் மாநகர் மன்ற உறுப்பினராகவும் பேரா மஇகா இளைஞர் பிரிவிலும் திறம்பட சேவையாற்றியுள்ளார்.





தாப்பா மஇகா தொகுதித் தலைவர் சந்தனசாமி, தன் தொகுதியில் பல சேவைகளை திறம்பட ஆற்றி வருகிறார். தாப்பா நாடாளுமன்ற உறுப்பினரும் மனிதவள அமைச்சர் டத்தோஶ்ரீ எம்.சரவணன் நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்து வரும் இத்தொகுதியில் இந்தியர்களின் பலதரப்பட்ட பிரச்சினைகளுக்கு சுமூகமாக தீர்வு கண்டு வரும் சந்தனசாமி தற்போது தாப்பா மாநகர் மன்ற உறுப்பினராகவும் சேவையாற்றி வருகின்றார்.



அரசியலின் அடையாளமாக திகழும் சுங்கை சிப்புட் வட்டாரத்தில் நன்கு அறியப்பட்ட கி.மணிமாறன், இங்குள்ள இந்தியர்களுக்கு பல்வேறு சேவைகளை ஆற்றி வந்துள்ளார். மஇகா தலைமைத்துவம், மாநில அரசு, சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஆட்சிக்குழு உறுப்பினர்கள் என பலரின் நன்மதிப்பையும் பெற்று சிறந்த சேவையை இங்கு வழங்கி வருகின்றார். பேரா மஇகா இளைஞர் பிரிவிலும் இவர் சேவையாற்றியுள்ளார்.


சமூகச் சேவையில் இளைய ரத்தம் பாய்ச்சப்படும் வகையில் பேரா மஇகா இளைஞர் பிரிவுத் தலைவர் ஜெயகணேஷின் சேவையையும் நாம் புறக்கணிக்க முடியாது. தம்புன் தொகுதி மஇகா இளைஞர் பிரிவுத் தலைவரான இவர், மலேசிய தமிழ் இளைஞர் மணிமன்றத்தின் பேரா மாநில முன்னாள் தலைவராகவும் பணியாற்றி சிறந்த சேவைகளை பதிவு செய்துள்ளார்.


மேலும், மஇகாவை தவிர்த்து மலேசிய தமிழ் இளைஞர் 
மணிமன்றத்தின் பேரா மாநிலத் தலைவராக பதவி வகித்து வரும் ஆனந்தனும் தற்போது வளர்ந்து வரும் தலைவர்களில் ஒருவராகவும் திகழ்கிறார். சமூகச் சேவையில் இவரின் ஈடுபாடும் பாராட்டும் வகையில்தான் உள்ளது.



பேரா மாநில மந்திரி பெசார் ஆலோசகர், சிறப்பு அதிகாரி ஆகிய  பதவிகளுக்கு தகுதியானவர்கள் கட்சிக்குள்ளேயே இருக்கும் நிலையில்  மஇகா தலைமைத்துவம் புதுமுகத்தை அப்பதவியில் நிரப்புமா? அல்லது நான்தான் ராஜா நானே மந்திரி எனும் போக்கில் இருக்கும் வாய்ப்பை தவற விட்டு காலம் கடந்து சிந்திப்பார்களா? எனும் முடிவை மஇகாவிடமே விட்டு விடுவோம்.

கோவிட்-19: கோலலங்காட்டில் பிகேபிபி மீண்டும் அமலாக்கம்

பந்திங்-
கோவிட்-19 வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்ததை அடுத்து சிலாங்கூர், பந்திங்கில் கோலலங்காட், தாமான் உத்தாமா, தாமான் லங்காட் முர்னி ஆகிய பகுதிகளில் விதிமுறைக்குட்பட்ட நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணை மீண்டும் அமல்படுத்தப்பட்டுள்ளது.

அந்த வட்டாரத்தில் உள்ள 20 வெளிநாட்டினருக்கு கோவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து இந்நடவடிக்கை அமல்படுத்தப்பட்டது என்று கோலலங்காட் மாவட்ட மன்றம் கூறியது.

இவ்விரு பகுதிகளை சுற்றிலும் முட்கம்பிகள் போடப்பட்டுள்ளன. இரண்டு மாடி கட்டடங்களை கொண்ட மூன்று தொகுதிகளை இந்த பகுதி உள்ளடக்கியுள்ளது. இங்கு உள்ளூர்வாசிகளுடன் அந்நிய நாட்டவர்களும் வசித்து வருகின்றனர்.

ஜோகூர் சட்டமன்றத்தை கலைத்து விடுவேன் - சுல்தான் எச்சரிக்கை

ஜோகூர்பாரு-
சட்டமன்ற உறுப்பினர்களிடையே தொடர்ந்து அதிகாரப் போராட்டம் நீடிக்குமானால் மாநில சட்டமன்றத்தை கலைத்து விடுவேன் என்று ஜோகூர் மாநில சுல்தான் சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கண்டார் எச்சரித்தார்.

தமது ஃபேஸ்புக் பக்க்த்தில் கருத்து பதிவிட்ட அவர், அதிகாரப் போராட்டத்தில் ஜோகூரை வீணடிக்க ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன்.

மக்கள் பிரதிநிதிகளிடையே தொடர்ந்து அதிகார மோதல் நீடிக்குமானால் மாநில சட்டமன்றத்தை கலைத்து விடுவேன்.

மக்கள் பிரதிநிதியாக தாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டது மக்களுக்கும் மாநிலத்தின் வளர்ச்சிக்கும் சேவையாற்ற தானே தவிர சொந்த விருப்பு வெறுப்புகளுக்கு கட்சிக்கும் சேவையாற்ற அல்ல என்று அவர் கூறினார்.

15ஆவது பொதுத் தேர்தலுக்கு தயார்- அம்னோ

கோலாலம்பூர்-
நாட்டின் 15ஆவது பொதுத்  தேர்தலுக்கு தாங்கள் தயாராக இருப்பதாக அம்னோ தெரிவித்துள்ளது.

நாட்டில் நிலவும் நிலைத்தன்மையற்ற அரசியல் சூழலை அடுத்து முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப்பை சந்தித்தப் பின்னர் அம்னோவின் தலைவர் டத்தோஶ்ரீ ஸாயிட் ஹமிடி முகநூலில் பதிவிட்டார்.

15ஆவது பொதுத் தேர்தலுக்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். நீங்கள்  தயாரா? என அவர் டத்தோஶ்ரீ நஜிப்பை சந்தித்த புகைப்படத்துடன் பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.

பள்ளிகளை மீண்டும் திறப்பதற்கு புதிய SOP வரையப்பட்டுள்ளது

கோலாலம்பூர்-
கோவிட்-19 தொற்றால் மூடபட்ட பள்ளிகள் மீண்டும் திறப்பதற்கு ஏதுவா புதிய நடைமுறை வழிகாட்டல் (SOP) வரையப்பட்டுள்ளது.

பள்ளி தினம் குறைப்பு, வகுப்பறையில் மாணவர்கள் எண்ணிக்கை குறைவு, மாணவர்கள், ஆசிரியர்கள், பணியாளர்கள் முககவசம் பயன்படுத்துதல் போன்ற நடைமுறைகளை உள்ளடக்கி இந்த புதிய நடைமுறை வழிகாட்டல் வரையப்பட்டுள்ளது.

மேலும், பாட நேரங்கள், குறைப்பது, பள்ளிகளில் சமூக இடைவெளியை கடைபிடிப்பது போன்றவற்றுக்கு புதிய நடைமுறை வழிகாட்டலை NUTP எனப்படும் தேசிய ஆசிரியர் பணியாளர் சங்கம் வரைந்துள்ளது.

ஆசிரியர்கள், கல்வியாளர்கள் ஆகியோரின் நலன், கருத்துகள் கவனத்தில் கொள்ளப்பட்டு வரையப்பட்டுள்ள இந்த புதிய நடைமுறை வழிகாட்டி கல்வி அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்படும்  என்ற அச்சங்கத்தின் தலைவர் அமிருடின் அவோங் கூறினார்.

இறுதி தோட்டா வரை போராடிய பிரபாகரன் - சரத் பொன்சேகா பெருமிதம்

கொழும்பு-
தமிழீழம் அவைவதற்காக தனது இறுதி மூச்சுவரை போராட்டம் நடத்திய விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை தாம் பெரிதும் மதிப்பதாக இலங்கை முன்னாள் ராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்தார்.

யுத்தம் நிறைவடையும் இறுதி தோட்டா வரை பிரபாகரம் போராடியுள்ளார்.  ஒரு பயங்கரவாதியாக இருந்தாலும் இறுதி தோட்டா வரை பிரபாகரன் போராடியுள்ளதை பார்க்கும்போது ஒரு ராணுவ வீரனாக அவரை பெரிதும் மதிக்கிறேன்.

விடுதலைப் புலிகளின் அனைத்துப் பகுதிகளையும் இலங்கைப் படை கைப்பற்றியதாக 2009 மே 18ஆம் தேதி உலகிற்கு அறிவித்தோம். ஆனால், மே 19ஆம்   முல்லைத்தீவு- முள்ளிவாய்க்கால், நந்திக்கடல் ஆகிய பகுதிகளில் ஆங்காங்கே சில தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக நினைவுகூர்ந்த அவர், 19ஆம் தேதி நாடாளுமன்றக் கூட்டத் தொடரை நிறைவு செய்து அலுவலகத்திற்கு செல்லும் வேளையிலே பிரபாகரன் உயிரிழந்தது தொடர்பான தகவல்கள் தமக்கு கிடைக்கப் பெற்றன.
யுத்தம் முடிவடைந்ததாக அறிவித்த போதிலும், அங்காங்கே சில தாக்குதல்கள் நடத்தப்பட்டு, அந்த தாக்குதல்களும் முறியடிக்கப்பட்டதன் பின்னரே பிரபாகரனின் சடலம் காயங்களுடன் மீட்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

பிரபாகரனை கொன்றதே சரியான விஷயம் என தான் எண்ணுவதாக அவர் சுட்டிக்காட்டினார்..

ஏனெனில், பிரபாகரன் உயிருடன் பிடிக்கப்பட்டிருந்தால், அவர் இன்றைய காலப் பகுதியில் ஒரு பிரபலமான நபராக இருந்திருப்பார் என அவர் குறிப்பிடுகின்றார்.

பிரபாகரனை உயிருடன் பிடித்திருந்தாலும், இன்றைய தினத்தில் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளை அவர் தனது அதிகாரத்திற்குட்பட்ட பகுதியாக மாற்றியிருப்பார் என்பதில் சந்தேகம் கிடையாது.
 
பிரபாகரன் பயங்கரவாதியாக இருந்தாலும், இறுதித் தோட்ட வரை அவர் போராடியதை பார்க்கும்போது, தான் ஒரு ராணுவ வீரனாக அவரை பெரிதும் மதிப்பதாக சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.

கருத்து: ஜோர்ஜ் ஃபிலாய்ட்டின் மரணம் உணர்த்தும் பாடம் என்ன? கணபதிராவ்


எழுத்து: வீ. கணபதிராவ்
(சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்)


அமெரிக்காவில் ஏழை ஆன்மா ஜார்ஜ் ஃபிலாய்டின் மரணம் போலீஸ்காரரால் மட்டுமல்ல, ஒரு தலைமையால் கட்டவிழ்த்து விடப்பட்ட இனவெறியின் விளைவாகும்.

சமீப காலமாக இனவெறி தொடர்பான வெறுக்கத்தக்க பேச்சுகளும் செயல்களும் தங்கள் தலைவர்களிடம் நுழைந்தன. அது தலைவர்களிடமிருந்து  கீழாக இறங்கி இன்று அனைத்துத் தரப்பினரிடமும்  இனவெறியை வெளிப்படுத்தத் தொடங்கியுள்ளது.

தலைவர்கள் தங்கள் இனவெறி தன்மையை காட்டும்போது, ​​நிச்சயமாக மற்ற தலைவர்கள், அமலாக்க அதிகாரிகள் உட்பட அரசு ஊழியர்கள் அனைவரும் தங்கள் தலைவரின்  அடிச்சுவடுகளைப் பின்பற்றுவார்கள். இந்த நடவடிக்கைகள் ஆரம்பத்தில் மன்னிக்கப்படவில்லை, ஆதலால்தான்  இப்போது அமெரிக்கா ஒரு பெரிய பேரழிவை சந்தித்துக் கொண்டிருக்கிறது.

இன்று எழுந்துள்ள போராட்டம் இதைதான் நிரூபிக்கின்றன.  இனவெறியை ஆதரிக்காத, அதை கடைப்பிடிக்காத, ஆனால் ஒவ்வொரு குடிமகனையும் சமமாக கவனித்துக்கொள்ளும் சரியான எண்ணம் கொண்ட தலைவர்கள் ஒரு நாட்டை அதிக உயரத்திற்கு அழைத்துச் செல்ல தேர்வு செய்யப்பட வேண்டும். "நான் முதலில் ஒரு மலாய்", அல்லது "மலாய்க்காரர்கள் முட்டாள், சோம்பேறி", அல்லது "சீனர்கள் ஆளுமையாளர்கள்", அல்லது "இந்தியர்கள் குண்டர்கள்" போன்ற இனவெறியை தூண்டும் தலைவர்களை நம்  நாட்டில் தலைவர்களாக அனுமதிக்கக்கூடாது.

அனைவரையும் தங்கள் சொந்த மக்களாக ஏற்றுக்கொள்ளக்கூடிய தலைவர்கள்தான் நமக்குத் தேவை. தனிப்பட்ட சமூகங்களின் ஒவ்வொரு தேவையும் கைவிடப்பட வேண்டும் என்று இது அர்த்தப்படுத்துவதில்லை, ஆனால் அது மற்றொன்றைப் பாதிக்காத வகையில் கையாளப்பட வேண்டும்.

ஒவ்வொரு சமூகத்தின் உரிமைகளும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும், மேலும் சமூகத்தை மேம்படுத்துவதற்கான எந்தவொரு சிறப்புத் தேவைகளும் மற்றவர்களின் உரிமையை பாதிக்காமல் ஊக்குவிக்கப்பட  வேண்டும்.

ஒரு  சமூகத்தை மேம்படுத்த தலைவர்கள் மற்ற சமூகங்களின் உரிமைகளைத் திருடும் சூழலில்  அதிருப்திகள், ஏமாற்றங்கள் பொறாமை ஆகியவை மக்களை போராட்டத்திற்கு இட்டுச் செல்லும்.
அவ்வகையில்  டிஏபி மூலம் மக்களுக்கு  சேவை செய்ய நான் தேர்வு செய்யப்பட்டதற்கும்  இதுவே காரணம். நான் 2007இல் ஹிண்ட்ராஃப் வழியாக இந்திய உரிமைகளுக்காகப் போராடினேன், பின்னர் ஐ.எஸ்.ஏ.வின் கீழ் கைது செய்யப்பட்டு கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டேன். ஆம், நாங்கள் இந்திய உரிமைகளுக்காகப் போராடினோம், ஏனென்றால் நாங்கள் அதிகபட்சமாக முடக்கப்பட்டோம். நாங்கள் பதிலடி கொடுத்தோம், ஆனால் மற்றவர்களின் உரிமைகளைத் திருடவில்லை, அதை பற்றி நாங்கள் கேள்வி கேட்கவில்லை. ஆனால் நாங்கள் எங்கள் உரிமையை  கேட்டுக்கொண்டிருந்தோம்.

அடுத்த ஆண்டுகளில், மெதுவாக இந்தியர்கள் 2008 ஆம் ஆண்டு முதல் பக்காத்தான் ஹரப்பன் கூட்டணியின் கீழ் தங்கள் உண்மையான சுதந்திரத்தையும் உரிமைகளையும் உணரத் தொடங்கினர். என் பார்வையில், டிஏபி என்பது அதிக ஒருமைப்பாடு, ஒழுக்கத்தைக் கொண்ட ஒரு கட்சி, அங்கு அனைத்து மலேசியர்களுக்கும் போராட வேண்டும் என்பதே முக்கிய நோக்கம். மற்றவர்களை பாதிக்காமல் அவர்களின் தனிப்பட்ட அல்லது சமூக உரிமைகளுக்காக அதை பயன்படுத்தினோம். 

"மலேசியா மலேசியர்களுக்கே" என்ற ஒற்றை கோட்பாட்டை வலியுறுத்தி வருங்கால தலைமுறைக்காக நாடு முன்னேற்றம் காண டிஏபி போராடுகிறது. டிஏபி-இன் மூலம் எனது போராட்டமும் இதை நோக்கிதான் பயணிக்கிறது.; அது அனைவருக்குமானது.  ஒவ்வொரு மலேசியரின் மனதிலிருந்தும் இனவெறியை ஒழிப்பதே நமது அடுத்த நோக்கமாகும்.

ஒரு சமூகத்தின் சிறப்புத் தேவைகளைப் பூர்த்தி செய்வதை விட அனைத்து மலேசியர்களுக்கும்  சமமாக கொள்கைகள் இயற்றப்பட வேண்டும். மற்றவர்களின் உரிமைகளைத் திருடாத வரை வெவ்வேறு சமூகங்களுக்கான உறுதியான கொள்கைகள் வரவேற்கப்படுகின்றன. தங்கள் சொந்த சமூகங்களை கவனித்துக்கொள்வது ஒரு குற்றம் அல்ல, அதை இனவெறி என்று கருதக்கூடாது.

எனவே, சவாலான உலகில் முன்னேற அனைத்து வகையான இன பாகுபாடுகளையும் அகற்றுவதற்கான அனைத்துலக மாநாட்டில் மலேசியா கையெழுத்திட வேண்டும் என்பதை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன். நம் நாட்டின் முன்னேற்றத்திற்காக கையெழுத்திடும் தைரியம் தலைவர்களுக்கு இருக்க வேண்டும். அவர்கள் நாட்டை இனவாதத்தின் எதிர் திசையில் நகர்த்த வேண்டும்.

இனவெறியை ஒழிக்க நாம் தவறினால், மலேசியாவில் எந்த நேரத்திலும் ஒரு "ஜார்ஜ் ஃபிலாய்ட் சம்பவம்" நிகழக்கூடும். ஒரு தலைவராக, எனது மலாய், சீன, இந்திய, ஈபான், கடாசன், டயாக், முருத், சீக்கியர், பூர்வக்குடியின சகோதர சகோதரிகள் அல்லது மலேசியாவின் எந்தவொரு சரியான குடிமகனுக்கும் இது நடக்க நான் அனுமதிக்க மாட்டேன்!

குறிப்பு: இந்த படைப்பு எழுத்தாளரின் சொந்த கருத்துகளை உள்ளடக்கியவை ஆகும். 

Tuesday, 2 June 2020

கறுப்பினத்தவர் படுகொலைக்கு பற்றி எரியும் அமெரிக்கா

வாஷிங்டன் -
பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ்காரர் கறுப்பினத்தவர் ஒருவர் மீது மேற்கொண்ட நடவடிக்கையின்போது அவர் மரணித்ததை கண்டித்து மேற்கொண்டு வரும் போராட்டங்களால் அமெரிக்கா பற்றி எரிகிறது.

ஜோர்ஜ் ஃப்ளாய்ட் எனும் கறுப்பினத்தைச் சேர்ந்த ஆடவரை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போலீசார் அவரின் கழுத்தில் காலை வைத்து நசுக்கியதில் மூச்சுத் திணறி இறந்துள்ளார்.

போலீசாரின் இந்த அராஜகச் செயல் சமூக வலைத்தளங்களில் கசிந்ததை அடுத்து கொதித்தெழுந்த அமெரிக்கர்கள் போலீசாரின் செயலுக்கு எதிராக போராட்டத்தை முன்னெடுத்தனர்.

ஆறாவது நாளாக நடந்தேறிய  இந்த போராட்டத்தின் உச்சக்கட்டமாக போலீஸ் வாகனங்கள் தீவைத்து கொளுத்தப்பட்டதோடு பல்வேறு கடைகளும் சூறையாடப்பட்டன.

நியூயார்க், சிக்காகோ, லாஸ் ஏஞ்சல்ஸ், ஃபிலடெல் ஃபியா போன்ற நகரங்களில் போராட்டம் கலவரமாக மாறியதை அடுத்து போராட்டக்காரர்களை கலைக்கும் நடவடிக்கையாக போலீசார் கண்ணீர் புகைக் குண்டுகளையும் பெப்பர் குண்டுகளையும் பயன்படுத்தினர்.

இந்த போராட்டத்தின் விளைவாக 40 நகரங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள சூழலில் மக்கள் அந்த உத்தரவை மக்கள் மீறி செயல்படுவது பதற்றமான சூழலை உருவாக்கி உள்ளது.

Monday, 1 June 2020

முடி திருத்தும் சேவைக்கு தடை நீடிக்கிறது

கோலாலம்பூர்-
முடி திருத்தும் சேவைக்கு இன்னும் அனுமதிக்கப்படவில்லை. அதற்கான தடை தொடர்ந்து நீடிக்கிறது என்று முதன்மை பாதுகாப்பு அமைச்சர் டத்தோஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்தார்.

முடி வெட்டும் கடைகள் திறப்பது உட்பட வீட்டுக்கு அழைத்து முடி வெட்டுவதற்கும் இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை.

இந்த சேவைக்கான தர நிர்ணய செயல்பாடு (SOP) இன்னும் வரையறுக்கப்பட்டு கொண்டிருக்கிறது எனவும் அப்பணி நிறைவடைந்த பின்னர் தேசிய பாதுகாப்பு மன்றம் அதனை தாக்கல் செய்யும்.

சுகாதார அமைச்சுடன் இணைந்து வரையப்படும் தர நிர்ணய செயல்பாட்டுக்கு பின்னர் முடி திருத்தும் கடைகளை திறப்பது குறித்த முடிவெடுக்கப்படும். SOP வரைதிட்டத்திற்கு  பின்னரே முடிவெடுக்கப்படும் என்று இன்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் இவ்வாறூ கூறினார்.

குடிபோதையில் மற்றொரு விபத்து; ஆடவர் பலி

கோலாலம்பூர்-
மது அருந்தியதாக நம்பப்படும் 21 வயது இளைஞர் செலுத்திய வாகனத்தால்  மோதி தள்ளப்பட்ட 44 வயது மதிக்கத்தக்க உணவு விநியோகிப்பாளர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

இன்று அதிகாலை 1.30 மணியளவில் சுல்தான் இஸ்கண்டார் நெடுஞ்சாலையில் நிகழ்ந்ததாக கோலாலம்பூர் போக்குவரத்து விசாரணை, கண்காணிப்புப் பிரிவின் தலைவர் ஏசிபி சூல்கிப்ளி யாஹ்யா தெரிவித்தார்.

குத்தகைத் தொழிலாளியான  44 வயது முகமட் ஸைலி முகமட் மனைவிக்கு உணவை கொடுத்து விட்டு புக்கிட் அந்தாராபங்சாவிலுள்ள தனது வீட்டுக்கு செல்லும் வழியில் நிஸ்ஸான் கிராண்ட் லிவினா ரகக் காரினால் மோதப்பட்டு சாலையில் தூக்கியெறியப்பட்டார். கடுமையான காயங்களுக்கு இலக்கான அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

இந்த விபத்துக்கு காரணமான வாகனமோட்டி மது அருந்தியிருந்தது பரிசோதனையில் தெரிய வந்ததாக கூறிய அவர், இவ்விபத்து 1987 சாலை போக்குவரத்து சட்டம் செக்‌ஷன் 44 (1) கீழ் விசாரிக்கப்பட்டு வருவதாக சொன்னார்.

முஹிடினுக்கு தேவை பெரும்பான்மை; நஜிப்புக்கு தேவை பொதுத் தேர்தல்- ஜோகூர் டிஏபி சாடல்

ஜோகூர்பாரு-
நாட்டின் இன்றைய நடப்பு சூழலில் முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப்புக்கு பொதுத் தேர்தலும் பிரதமர் டான்ஶ்ரீ முஹிடின் யாசினுக்கு நாடாளுமன்றத்ததில் பெரும்பான்மை தேவைபடுவதாகவும் ஜொகூர் மாநில டிஏபி தலைவர் லியூ சின் தொங் கூறினார்.

பொதுத் தேர்தலை தவிர்த்து விட்டு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிப்பதற்காக நாடாளுமன்ற உறுப்பினர்களை தன் பக்கம் இழுக்கும் நடவடிக்கையை முஹிடின் யாசின் முன்னெடுக்கின்றார்.


அதன் அங்கமாக பக்காத்தான் ஹராப்பானைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களை தன் பக்கம் இழுப்பதில் அதி தீவிரமாக செயல்படுகிறார். ஆனால் நஜிப் பொதுத் தேர்தல் நடத்தப்படுவதையே விரும்புகிறார்.

முஹிடின் யாசின் பிரதமராக பதவி வகிப்பதை அவர் (நஜிப்) விரும்பவில்லை எனும் தகவல் ஒன்று பரவும் நிலையில் இவ்வாண்டு பிற்பகுதியில் நாடாளுமன்றம் கலைக்கப்படுவதற்கு  அம்னோ நெருக்குதல் கொடுக்கலாம் என்று அவர் மேலும் சொன்னார்.

டிஏபி, பிகேஆர், அமானா இல்லாத ஒற்றுமை அரசாங்த்தை மகாதீர் முன்மொழிந்தார்- ஸாயிட் ஹமிடி குற்றச்சாட்டு

கோலாலம்பூர்-
டிஏபி, பிகேஆர்,அமானா ஆகிய கட்சிகள் இல்லாத ஒற்றுமை அரசாங்கம் அமைப்பது தொடர்பிலான சந்திப்புக் கூட்டமே பிப்ரவரி 23ஆம் தேதி நிகழ்ந்தது என்று அம்னோ தலைவர் டத்தோஶ்ரீ ஸாயிட் ஹமிடி தெரிவித்தார்.

ஷெராட்டன் நடவடிக்கைக்கு முன்னதாக நடைபெற்ற இந்த சந்திப்புக் கூட்டத்தில் சில ஒப்புதல்கள் முடிவெடுக்கப்பட்டதாகவும் ஆனால் துன் மகாதீர் அந்த ஒப்புதல்களை மீறிவிட்டார் என்று அவர் கூறினார்.

சமூக ஊடகங்களில் கசிந்த அரசியல் கட்சித் தலைவர்களுடனான சந்திப்பில் டிஏபி, பிகேஆர் (அன்வார்), அமானா ஆகிய கட்சிகள் இல்லாத ஒற்றுமை அரசாங்கம் அமைவதை துன் மகாதீர் முன்மொழிந்தார்.

இதுதான் இந்த சந்திப்பில் செய்து கொள்ளப்பட்ட ஒப்பதல் ஆகும் என்று அவர் விவரித்தார்.

ஆனால் அந்த சந்திப்பில் ஒப்புக் கொள்ளப்பட்ட அனைத்துக் கட்சிகளையும் உள்ளடக்கிய ஒற்றுமை அரசாங்கம் அமைக்கும் முடிவை துன் மகாதீர் மீறியதால் அப்போது வழங்கப்பட்ட ஆதரவை தாங்கள் மீட்டுக் கொண்டதாக ஸாயிட் ஹமிடி விவரித்தார்.

சமூக ஊடகங்களில் கசிந்த சர்ச்சைக்குரிய புகைப்படத்தில் ஸாயிட் ஹமிடி, ஜிபிஎஸ் கட்சியின் தலைவர் அபாங் ஜோஹாரி ஒபெங், பெர்சத்து கட்சியின் தலைவர் டான்ஶ்ரீ முஹிடின் யாசின், வாரிசான் கட்சியின் தலைவர் ஷாபி அப்டால், பிகேஆர் கட்சியின் முன்னாள் துணைத் தலைவர் அஸ்மின் அலி, பாஸ் கட்சியின் தலைவர் ஹாடி அவாங் ஆகியோர் துன் மகாதீர் காணப்படுள்ளனர்.

Sunday, 31 May 2020

இன்னும் 20 ஆண்டுகளில் இந்தியர்களுக்கான பிரதிநிதி மக்களவையில் இருப்பார்களா? கணபதிராவ் ஆதங்கம்

ரா.தங்கமணி

கோலாலம்பூர்-
இந்திய சமுதாயத்தில் எத்தனை அமைச்சர்கள் உள்ளனர் என்ற விவாதத்தை முன்னெடுத்துக் கொண்டிருக்கும் நாம், அடுத்த 20 ஆண்டுகளில் நமக்கான மக்கள் பிரதிநிதிகள் மக்களவையில் இருப்பார்களா? என்பதை பற்றி சிந்திக்க மறுக்கிறோம் என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் தமது ஆதங்கத்தை வெளிபடுத்தினார்.

இந்திய சமுதாயத்தை இன்று சூழ்ந்திருக்கும்  ஏழ்மையால் மக்கள் தொகையில் நாம் மிகப் பெரிய சரிவை சந்தித்து வருகிறோம்.

நமது மக்கள் தொகையை காட்டிலும் இந்தோனேசியர், அந்நிய நாட்டுவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

நாம் இன்னும் சமுதாய மேம்பாடு காணாமல், ஒற்றுமையை வளர்த்துக் கொள்ளாமல் இருந்தோமானால் வரும் காலம் இந்திய சமுதாயம் மிகப் பெரிய பின்னடைவை சந்திக்கலாம்.

பக்காத்தான் ஹராப்பான் ஆட்சியின் போது 4 அமைச்சர்கள், ஒரு துணை அமைச்சர் பதவி இந்திய சமுதாயத்திற்கு  வழங்கப்பட்டது.

ஆனால் இன்றைய அரசாங்கத்தில் ஓர் அமைச்சர் பதவி மட்டுமே இந்திய சமுதாயத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்த பதவி போராட்டத்தை பற்றி மட்டுமே பேசி கொண்டிருக்கும் நாளைய சமுதாயத்தை பற்றி சிந்திக்க தவறுகிறோம்.

சமுதாயத்திற்கு ஒரு பிரச்சினையென்றால் ஆளும்கட்சியானாலும் எதிர்க்கட்சியானாலும் அதிலுள்ள இந்திய பிரதிநிதிகள் ஒன்று சேர்ந்து போராட தவறுகிறோம்.

இந்த பிரிவினைவாதம் தான் வரும்காலத்தில் இந்தியரை பிரதிநிதிக்க மக்களவையில் ஒருவர் கூட இல்லாத துரதிர்ஷ்ட சூழலை உருவாக்கி விட்டுச் செல்லும் என்று அவர் எச்சரித்தார்.

மக்கள் நீதி கட்சியின் ஏற்பாட்டில் 'அட்சயப் பாத்திரம்' எனும் தலைப்பில் இணையம் வழி நடத்தப்பட்ட நேர்காணலில் கணபதிராவ் இவ்வாறு கூறினார்.

பிகேஆர் கட்சியின் தினேஷ் செல்வராஜு வழிநடத்திய இந்த நேர்காணலில் ஜொகூர் மாநில பிகேஆர் கட்சியின் பொருளாளர் சுப்பிரமணியம் மற்றொரு பேச்சாளராக கலந்து கொண்டார்.