Friday 28 July 2017

"கலாம்... கலாம்... சலாம்... சலாம்..." 'அப்துல் கலாம்' அனைவருக்குமான தலைவர்


'ஓர் ஊரே புகழும்படி வாழ்ந்தால் அது ஒரு சிறந்த கிராமத் தலைவனுக்கு அழகு. ஒரு மாநிலமே சேர்ந்து புகழ்ந்தால் அது அந்த மாநிலத் தலைவனுக்கு கிடைத்த கெளரவம். ஒரு தேசமே ஒன்று திரண்டு புகழ் பாடினால் அது அந்த தேசத் தலைவனின் சிறந்த தலைமைத்துவத்திற்கு கிடைத்த அங்கீகாரம். ஆனால் கிராமம், மாநிலம், தேசம், கண்டங்கள் என ஓர் எல்லைக்கோட்டு அப்பாற்பட்டு   இந்த உலகமே புகழ் பாடினால் அவரை விட சிறந்த மாமனிதர்  இம்மண்ணில் இருக்க முடியாது. இத்தகைய சிறப்புக்குரிய மாமனிதர் இந்தியாவின் முன்னாள் அதிபர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம்  ஆவார்.

இன்றைய இளைஞர்களும் மாணவர்களும் தங்களின் முன்னோடியாக கொண்டாடி மகிழ்கின்ற மாமனிதர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் இந்த பூவுகை விட்டு சென்ற இரண்டாமாண்டு நினைவு நாள் நேற்று.

'நீ தூங்கிக் கொண்டிருக்கும்போது காண்பது கனவல்ல; உன்னை தூங்க விடாமல் செய்வதே கனவு' என மாணவர், இளைய சமுதாயத்தின் உணர்வை தூண்டிவிட்டு தன் வாழ்நாளை அவர்களுக்காக அர்ப்பணித்த அப்துல் கலாம், இந்தியாவின் முன்னாள் அதிபர் மட்டுமின்றி அணு விஞ்ஞானியாகவும் திகழ்ந்தவர்.

தமிழகத்தின், ராமேஸ்வரம் ஊரில் மீனவக் குடும்பத்தில் பிறந்த அப்துல் கலாம் அவர்கள், இந்தியா விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (இஸ்ரோ) தலைவராகவும் நாட்டின் 11ஆவது குடியரசு தலைவராகவும் விளங்கினார்.

'இளைஞர்கள், மாணவர்களால் மட்டுமே ஒரு சிறந்த நாட்டை கட்டியெழுப்ப முடியும்என்பதை தன்னம்பிக்கையாகக் கொண்டு குடியரசுத் தலைவர் பதவிக்குப் பின்னர் மாணவர்களிடையே கலந்துரையாடல் நடத்துவதை தனது வாழ்நாள் கடமையாகக் கொண்டார்.


அவருடைய 'இந்தியா 2020' என்ற நூலில் கலாம், இந்தியா அறிவியலில் வல்லரசு நாடாகவும், வளர்ந்த நாடாகவும் 2020 ஆம் ஆண்டிற்குள் மாறுவதற்குரிய வரைத் திட்டத்தை அறிவித்திருந்தார்


அறிவியல் ஆலோசகர் பதவியிலிருந்து 1999இல் பதவி விலகிய பிறகு, ஒரு லட்சம் மாணவர்களுடன் இரண்டு ஆண்டுகளுக்குள் கலந்துரையாட வேண்டுமென்று குறிக்கோள் வைத்திருந்தார்.

அவர் அவரது சொந்த வார்த்தைகளில் "நான் இளம் வயதினருடன் குறிப்பாக உயர்நிலைப் பள்ளி மாணவர்களுடன் இருக்கும்போது நிறைவாக உணர்கிறேன்" என்று கூறியுள்ளார்.

இனிமேல் என்னுடைய பட்டறிவை பகிர்ந்து கொள்ளும் நோக்கமும் அவர்களுடைய கற்பனைத்திறனை ஊக்குவிக்கவும் இந்தியாவை வல்லரசாக மாற்றும் திட்டத்திற்கு அவர்களை தயார்படுத்தவும் வரை திட்டம் ஏற்கனவே தயாரித்துள்ளேன்  என்றார்.

எந்த மாணவர் சமுதாயத்திற்காக தனது வாழ்நாட்களை கடத்திக் கொண்டிருந்ததாரோ அந்த மாணவர் சமுதாயத்தின் முன்னிலையில் உரையாற்றிக் கொண்டிருக்கும்போதே மயங்கி விழுந்து உயிர் நீத்த 'மகான்' அப்துல் கலாம் ஆவார்.

ஜூலை 27, 2015இல் இந்தியாவின் மேகாலயா மாநிலத் தலைநகரான ஷில்லாங்கில் இந்திய மேலாண்மை கல்வி நிறுவனத்தில் மாணவர்களிடையே உரையாற்றுகையில் மயங்கி விழுந்தார். தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி காலமானார்.

ராமேஸ்வரம், பேய்க்கரும்பு மண்ணில் புதைக்கப்பட்டுள்ள அப்துல் கலாம் மீளாத் துயில் கொண்டிருந்தாலும் அவரின் ஆன்மா இன்னமும் லட்சக்கணக்கான இளைஞர்கள் மனதில் எழுச்சி தீபமாய் சுடர் விட்டுக் கொண்டிருக்கின்றார்.

இளைஞர்கள் எளிதில் ஒருவரை  தலைவராக ஏற்பதில்லை. அப்படி ஒருவரை தலைவராக ஏற்றுக் கொண்டால் அவரை விட சிறந்த தலைவர் உலகில் வேறெங்கும் இருக்க முடியாது.

அவ்வகையில் இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதும் உள்ள பிற நாடுகளில் வாழ்கின்ற இளைஞர்கள் ஒரு தலைவராகவும் முன்னோடியாகவும், வழிகாட்டியாகவும் 'அப்துல் கலாமை' ஏற்றுக் கொண்டதற்கு தலை வணங்கி சொல்வோம்  " கலாம்... கலாம்... சலாம்... சலாம்...!"

No comments:

Post a Comment