Saturday, 23 June 2018

நாட்டின் கடனை அடைக்க வெ.92 மில்லியன் நிதி திரண்டது

புத்ரா ஜெயா-
நாட்டின் கடனை அடைக்க பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி தொடங்கிய 'தாபோங் ஹராப்பான் மலேசியா' திட்டத்திற்கு  இன்று வரை 92 மில்லியன் வெள்ளி நன்கொடை திரண்டுள்ளது.

நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலுக்குப் பின்னர் ஆட்சியை கைப்பற்றிய பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி நாட்டின் கடன்  1 டிரில்லியன் வெள்ளி (ஒரு லட்சம் கோடி வெள்ளி) என அறிவித்தது.

இந்த கடனை அடைக்க கடந்த மே 30ஆம் தேதி தொடங்கப்பட்ட 'தாபோங் ஹராப்பான் மலேசியா' திட்டத்திற்கு இன்று பிற்பல் 3.00 மணி வரை வெ.92,108,427.94 நிதி திரண்டுள்ளது என நிதியமைச்சின் அகப்பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

நாட்டின் பொருளாதார நிலைத்தன்மையில் பேங்க் நெகாரா கவனம் செலுத்தும்- புதிய கவர்னர்

புத்ராஜெயா-
நாட்டின் பொருளாதார நிலையை உறுதி செய்யும் வகையில் அதில் முக்கியத்துவம் வழங்குவதை பேங்க் நெகாரா கவனத்தில் கொள்ளும் என பேங்க் நெகாராவின் புதிய கவர்னர் டத்தோ நோர் ஷம்சியா முகமட் யூனுஸ் கூறினார்.

நாட்டின் நிர்வாகம் சீராக நடைபெறுவதற்கு ஏதுவாக பொருளாதார நிலைத்தன்மை சிறப்பாக அமைந்திடுவதற்கு பேங்க் நெகாரா தொடர்ந்து முன்னுரிமை வழங்கும் என அவர் சொன்னார்.

பேங்க் நெகாராவின் புதிய கவர்னராக டத்தோ நோர் ஷம்சியா நியமனம் செய்யப்படுவதை நிதியமைச்சர் லிம் குவான் எங் இன்று தெரிவித்தார்.

நோர் ஷம்சியாவின் நியமனம் வரும் ஜூலை 1ஆம் தேதி முதல் அடுத்த ஐந்தாண்டுகளுக்கு நீடிக்கும்.

உணவங்களில் உள்ளூர் சமையல்காரர்களை பணியில் அமர்த்துக- அமைச்சர் உத்தரவு

புத்ராஜெயா- 
அடுத்தாண்டு ஜனவரி தொடக்கம் நாட்டிலுள்ள அனைத்து உணவகங்களிலும் உள்ளூர் சமையல்காரர்கள்  பணியாற்றுவது உறுதி செய்யப்பட வேண்டும் என மனிதவள அமைச்சர் எம்.குலசேகரன் தெரிவித்தார்.

அனைத்து உணவகங்களிலும் உள்ளூர் சமையல்காரர்கள் பணியாற்றுவது அவசியமாகும். இதல் ஒருபோதும் சமாதானம் செய்து கொள்ள மாட்டோம். ஜூலை 1ஆம் தேதி முதல் டிசம்பர் 31ஆம் தேதி வரை உணவக நிறுவனங்களுக்கு கால அவகாசம் வழங்கப்படுகிறது.

இந்த கால அவகாசத்தில்  உள்ளூர் சமையல்காரர்களுக்கு உரிய பயிற்சிகள் வழங்கி அவர்கள் பணியாற்றுவதில்  உணவகங்கள் ஊக்குவிக்க வேண்டும். இதில் உள்ள பிரச்சினைகளை அரசாங்கம் கவனத்தில் கொள்ளும். அதற்கேற்ப தேவையான உதவிகளையும் அரசாங்கம் வழங்கும் என மலேசிய இந்திய உணவக உரிமையாளர் சங்கம் (பிரிஸ்மா), மலேசிய இந்திய முஸ்லீம் உணவக உரிமையாளர் சங்கம் (பிரெஸ்மா) ஆகியவற்றுடனான சந்திப்பின்போது குலசேகரன் இவ்வாறு வலியுறுத்தினார்.

உணவகங்களில் உள்ளூர் சமையல்காரர்கள் பணியாற்றும் நடைமுறை பினாங்கில் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் அது நாடு தழுவிய நிலையில் மேம்படுத்தப்பட வேண்டும் என அவர் சொன்னார்.

Friday, 22 June 2018

நடிகர் விஜயின் 'சர்கார்' பர்ஸ்ட் லுக் வெளியீடு

சென்னை-
நாளை 22ஆம் தேதி நடிகர் விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு 'விஜய் 62'இன் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டது.

'சர்கார்' என  பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் நடிகர் விஜய், இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்துள்ளது.

'துப்பாக்கி, கத்தி' ஆகிய படங்களை தொடர்ந்து இணைந்துள்ள 'சர்கார்' திரைப்படம் தீபாவளி பெருநாளை முன்னிட்டு திரைக்கு வரவுள்ளது என படக்குழு அறிவித்துள்ளது.

இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

துன் சம்பந்தனின் 99ஆவது பிறந்த நாள் விழா

சுங்கை சிப்புட்-
மஇகாவின் 5ஆவது தேசியத் தலைவரும் கூட்டுறவு தந்தையுமான துன் வீ.தி.சம்பந்தனின் 99ஆவது பிறந்தநாள் பிரார்த்தனை விழா வரும் 24ஆம் தேதி பிற்பகல் 3.00  மணிக்கு சுங்கை சிப்புட்,  தாமான் ஹீவூட், சத்திய சாய் பாபா மையத்தில் துன் சம்பந்தன் சமூகநல பொது இயக்கம், சுங்கை சிப்புட் துன் சம்பந்தன் பிறந்தநாள் விழா குழு ஆகியவற்றின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ளது.

'சங்கநதி' எனும் சுங்கை சிப்புட் நகருக்கு பெருமை சேர்த்த துன் சம்பந்தனின் பிறந்தநாள் பிரார்த்தனை கூட்டத்தில் கலந்து நிகழ்வை சிறப்பிக்குமாறு நிகழ்வு ஏற்பாட்டுக் குழுத் தலைவர் கி.மணிமாறன் கேட்டுக் கொண்டார்.

தமிழ்ப்பள்ளி, மாணவர்கள் மேம்பாட்டை உறுதி செய்ய தலைமையாசிரியர்களின் பங்களிப்பு அவசியம்- சிவநேசன்

ரா.தங்கமணி

ஈப்போ-
பேரா மாநிலத்திலுள்ள தமிழ்ப்பள்ளிகள், மாணவர்கள் நலனை மேம்படுத்த தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர்கள் மாநில அரசுக்கு பேராதரவு வழங்க வேண்டும் என  மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் அ.சிவநேசன் வலியுறுத்தினார்.

134 தமிழ்ப்பள்ளிகளைக் கொண்டுள்ள பேரா மாநிலத்தில் பல தமிழ்ப்பள்ளிகள் அடிப்படை பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளன. அதே போன்று பல மாணவர்கள் பல்வேறு இன்னல்களை அனுபவித்து வருகின்றனர்.
இதுபோன்ற பிரச்சினைகளை களைய மாநில அரசு எப்போதும் தயாராக இருக்கும். அதற்கு நான் உறுதி கூறிகிறேன். தமிழ்ப்பள்ளி, மாணவர்கள் நலனுக்கு யார் தடையாக இருந்தாலும் அது மந்திரி பெசாராகவே இருந்தாலும்  எதற்கும் அஞ்ச மாட்டேன்.

தமிழ்ப்பள்ளி, மாணவர்களின் நலனுக்காக ஆக்ககரமான திட்டங்களை முன்னெடுக்க தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர்களின் பங்களிப்பு மிக அவசியமாகிறது. உங்களது ஒத்துழைப்பு முழுவதுமாக இருந்தால் நிச்சயம் இந்த ஐந்தாண்டுக்குள் பல்வேறு மாற்றங்களை நாம் முன்னெடுக்க முடியும் என இன்று காலை மாநில அரசு செயலக  சந்திப்பு கூடத்தில் நடைபெற்ற பேரா மாநில தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் மன்ற செயலவைக் கூட்டத்திற்கு பின்னர் உரையாற்றியபோது சிவநேசன் இவ்வாறு கூறினார்.

இந்த மன்றத்திற்கு மாநில அரசின் சார்பாக 10,000 வெள்ளி வழங்குவதாக சிவநேசன் உறுதியளித்தார்.

இந்நிகழ்வில் மன்றத்தின் தலைவர் பத்மா, பேரா மாநில கல்வி இலாகா உதவி இயக்குனர் சந்திரசேகரன், பேரா மாநில தமிழ்ப்பள்ளிகளின் கண்காணிப்பாளர் சுப.சற்குணன் உட்பட செயலவையினர் கலந்து கொண்டனர்.

அல்தான் துயாவை சந்தித்ததற்கான எவ்வித ஆதாரமும் கிடையாது- டத்தோஶ்ரீ நஜிப்

லங்காவி-
மங்கோலிய மாடல் அழகி அல்தான் துயாவை தான் சந்தித்ததற்கான ஆதாரங்கள் ஏதும் கிடையாது என  முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக் கூறியுள்ளார்.

டத்தோஶ்ரீ நஜிப்பை நேர்காணல் செய்த 'ராய்ட்டர்ஸ்' நிறுவனம் அல்தான் துயா  பற்றி கேள்வி எழுப்பியபோது, 'அல்தான் துயா வழக்கு முடிந்துபோன ஒன்று. நான் அவரை சந்தித்ததற்கான எவ்வித ஆதாரங்களும் கிடையாது. அவரை எனக்கு தெரியும் என்பதற்காக எவ்வித ஆவணங்களும் புகைப்படங்களும் கிடையாது.

இந்த வழக்கு நேர்மையாக நடந்து முடிந்து விட்டது. வழக்கு விசாரணையின்போது கூட என் பெயர் ஓரிடத்திலும் இடம்பெறவில்லை' என அவர் இந்த நேர்காணலின்போது கூறினார்.

Thursday, 21 June 2018

அல்தான் துயா கொலை வழக்கை மீண்டும் விசாரிக்க பிரதமர் ஒப்புதல்- வழக்கறிஞர்

புத்ராஜெயா-
சுட்டு கொலை செய்யப்பட்டு வெடி வைத்து தகர்க்கப்பட்ட மங்கோலியா மாடல் அழகி அல்தான் துயா ஷாரிபு  கொலை வழக்கை மீண்டும் விசாரணை நடத்துவதற்கு பிரதமர் துன் மகாதீர் ஒப்புதல் வழங்கியுள்ளதாக வழக்கறிஞர் ராம் கர்ப்பால் சிங் தெரிவித்தார்.

பிரதமர் துன் மகாதீரை அல்தான் துயாவின் தந்தை ஷாரீபு ஸ்டீவ் சந்தித்த பின்னர் இந்த ஒப்புதல் வழங்கப்பட்டது.

இந்த வழக்கை மீண்டும் ஏன் நடத்த வேண்டும் என்பதற்கான உண்மை காரணங்களை குறிப்பாக 'கொல்ல உத்தரவிட்டது யார்' என்ற உண்மையை வெளிகொணர வேண்டும் என்ற விளக்கத்தை அளித்த பின்னர் சட்டவிதிகளுக்கு ஏற்ப இந்த வழக்கை மீண்டும் விசாரணை நடத்துவதற்கு அவர் ஒப்புதல் வழங்கியுள்ளார் என வழக்கறிஞர் ராம் கர்ப்பால் கூறினார்.

பிரதமருடனான சந்திப்புக்கு பின்னர் டாங் வாங்கி போலீஸ் நிலையத்தில் அல்தான் துயா வழக்கு தொடர்பான புகாரை ஷாரிபு ஸ்டீவ் வழங்கினார்

பிரதமரை சந்தித்தார் சிலாங்கூர் மந்திரி பெசார்


ஷா ஆலம்—
சிலாங்கூர் மாநிலத்தின் புதிய மந்திரி பெசாராக பதவியேற்றுள்ள அமிருடின் ஷாரி தனது முதல் நாள் பணியை இன்று தொடங்கியதைத் தொடர்ந்து, பிற்பகல் 2.30 மணியளவில் பிரதமர் துன் டாக்டர் மகாதீரை நேரடியாகச் சென்று சந்தித்தார்.

சிலாங்கூர் மாநிலத்தின் மேம்பாட்டு திட்டங்கள் குறித்து ஆலோசனை பெறுவதற்கு அமிருடின் சுமார் 40 நிமிடங்கள் பிரதமரிடம் கலந்து பேசினார்.

சிலாங்கூர் மாநிலத்தை ஆட்சி செய்வதற்கு பிரதமர் வழங்கிய ஆலோசனை முக்கியமானதாகவும் பயனுள்ளதாகவும் அமைவதால் அதை தாம் முழுமையாக ஏற்றுக் கொண்டு இம்மாநிலத்தின் மேம்பாட்டுக்கு நிச்சயம் பாடுபடுவேன் என்றார் அமிருடின்.

மனித உரிமை கவுன்சிலிலிருந்து அமெரிக்கா விலகல்

வாஷிங்டன்-
அரசியல் சார்பின் முரண்பாடு காரணமாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை கவுன்சிலிலிருந்து அமெரிக்கா விலகுகிறது என்று ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்கா தூதர் நிக்கி ஹலே தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை கவுன்சில் கடந்த 2006ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பில் 47 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.

மனித உரிமைகள் பற்றிய கேலிக்குரிய ஒரு பாசாங்குத்தனமான, சுய சேவை நிறுவனத்தின் ஒரு பகுதியாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை கவுன்சில் செயல்பட்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாகவே நாங்கள் இந்த அமைப்பில் இருந்து விலகுவது என்ற நடவடிக்கை எடுத்துள்ளோம் என தெரிவித்துள்ளார்.





உலக பணக்காரர் பட்டியலில் ஜெப்பெசோஸ் முதலிடம்

நியூயார்க்-
உலகின் மிகப் பெரிய பணக்காரர்கள் பட்டியலில் அமேசான் நிறுவனத்தின் ஜெப்பெசோஸ் முதலிடம் பிடித்துள்ளார்.

இவரின் மொத்த சொத்து மதிப்பு 141.9 பில்லியன் டாலர். ஜெப்பெசோஸ் அமேசான் நிறுவனத்தை 1994ஆம் ஆண்டு தொடங்கினார்.

தற்போது இந்த நிறுவனம் உலகின் மிகப்பெரிய வணிக நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. இங்கு சுமார் 5 லட்சம் ஊழியர்கள் பணிபுரிகின்றனர். உலகின் மிகப்பெரிய மதிப்பு கொண்ட நிறுவனங்கள் பட்டியலில் ஆப்பிளுக்கு அடுத்த படியாக அமேசான் 2ஆவது இடத்தை பிடித்துள்ளது.

உலக பணக்காரர்கள் குறித்த போர்ப்ஸ் பட்டியலில் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இந்த தடவை 2ஆவது இடத்தை பிடித்துள்ளார். இவரது சொத்து மதிப்பு 92.9 பில்லியன் டாலர் ஆகும்.

இவருக்கு அடுத்தப்படியாக பெர்னாட் அர்னால்ட் 3ஆவது இடத்தை பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



எதிர்க்கட்சியாக இருந்து திறம்பட செயலாற்றுவோம்- டான்ஶ்ரீ விக்னேஸ்வரன்


புனிதா சுகுமாறன்

ஈப்போ-
நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தல் முடிவை அடுத்து இக்கட்டான சூழலை எதிர்கொண்டுள்ள மஇகாவை அடுத்த தேர்தலுக்கு தயார்படுத்த வலுவான ஒரு தலைமைத்துவம் அவசியம் என்பதை கட்சியினர் உணர வேண்டும் என மஇகா தேசியத் தலைவர் பதவிக்கு போட்டியிடவிருக்கும் டான்ஶ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

மிகவும் இக்கட்டான காலகட்டத்தில் மஇகா தற்போது நிற்கிறது. ஆட்சி அதிகாரத்தை இழந்து விட்ட தேமு கூட்டணியில் இடம்பெற்றுள்ள மஇகா இப்போது தன்னை வலுபடுத்தி கொள்ள வேண்டியது அவசியமாகிறது.

முன்பு ஆட்சி அதிகாரத்தில் இருந்த நாம் இப்போது எதிர்க்கட்சியாகி விட்டோம். எதிர்க்கட்சியாய் இருந்தவர்கள் ஆளும் கட்சியாக மாறியுள்ளனர். இப்போது நாம் செய்ய வேண்டியது எதிர்க்கட்சி வேலையை தான்.  முன்பு எதிர்க்கட்சியாய் இருந்தவர்கள் என்ன வேலையை செய்தார்களே அதையே தான் நாம் இப்போது செய்யவிருக்கிறோம்.

ஆட்சி மாற்றம் நிகழ்ந்துள்ளதால் சிலர் ம இகாவிலிருந்து வெளியேறி பிற கட்சிகளுக்கு செல்லலாம். அதை நாம் குறை சொல்லவில்லை. தற்போது 6 லட்சம் உறுப்பினர்களைக் கொண்டுள்ள மஇகாவில் உறுப்பினர் எண்ணிக்கை 1 லட்சமாக சரிந்தாலும் கட்சியை வலுபடுத்து அடுத்த தேர்தலை துணிவுடன்  எதிர்கொள்வோம்.

இந்தியர்களின் ஆதரவு பெற்ற கட்சியாக மஇகா மீண்டும் உருவெடுக்க சிறந்த தலைமைத்துவம் அவசியம் என்பதால் வரும் கட்சித் தேர்தலில் தேசியத் தலைவர் பதவிக்கு போட்டியிடும் தனக்கு கிளைத் தலைவர்கள் முழுமையான ஆதரவை வழங்க வேண்டும் என நேற்று பேரா மாநிலத்திலுள்ள கிளைத் தலைவர்கள் சந்திப்பு நிகழ்வில் உரையாற்றியபோது டான்ஶ்ரீ விக்னேஸ்வரன் இவ்வாறு கூறினார்.

முதல் நாள் பணியை தொடங்கினார் சிலாங்கூர் மந்திரி பெசார்


ஷா ஆலம்—
சிலாங்கூர் மாநிலத்தின் புதிய மந்திரி பெசாராக பதவியேற்றுள்ள அமிருடின் சாரி தனது முதல் நாள் பணியை இன்று அதிகாரப்பூர்வமாக தொடங்கினார்.

ஷா ஆலமிலுள்ள அரசு செயலகத்தில் மாநில மந்திரி பெசார் அலுவலகத்திற்கு இன்று வருகை புரிந்த அவர், காலை 7.55 மணிக்கு தனது முதல் நாள் பணியை தொடங்கினார்.
சிலாங்கூர் மாநிலத்தின் 16ஆவது மந்திரி பெசாராக சுங்கை துவா சட்டமன்ற உறுப்பினர் அமிருடின் சாரி நேற்று ஷா ஆலம் அரண்மனையில் சுல்தான் சராஃபுடின் ஷா முன்னிலையில் பதவியேற்று கொண்டார்.