Saturday, 11 May 2019

வெடிபொருளை பயன்படுத்தி ஏடிஎம் இயந்திரத்தை கொள்ளையிட முயற்சி

பாங்கி-

ஏடிஎம் இயந்திரத்தை கொள்ளையிடும் முயற்சியின்போது சந்தேகத்திற்குரிய இரு கொள்ளையர்கள் வெடிபொருளை பயன்படுத்தியுள்ளதாக நம்பப்படுகிறது.
இங்கு விஸ்மா யுனிகேப் வளாகத்தில் உள்ள ஏடிஎம் இயந்திரத்தை இரவு 8.00 மணியளவில் கொள்ளையிட இருவர் முயன்றுள்ளனர்.
காரில் வந்திறங்கிய அவ்விருவரும் ஏடிஎம் இயந்திரத்தை கொள்ளையிடும் வகையில் வெடிபொருளை பயன்படுத்தியுள்ளது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது என்று காஜாங் மாவட்ட போலீஸ் தலைவர் அஹ்மாட் ஸாரிஃப் முகமட் யுசோப் தெரிவித்தார்.
இருமுறை கொள்ளையிட முயற்சித்தபோதும் அவர்களின் முயற்சி தோல்வியடைந்துள்ளது என குறிப்பிட்ட அவர், முன்னதாக மாலை 7.53 மணிக்கும் அவர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டனர் என்றார்.
இது தொடர்பில் அங்குள்ள சிசிடிவி கேமிரா உதவியுடன் சந்தேக நபர்கள் அடையாளம் காணப்படுவர் எனவும் அவர் சொன்னார்.

Friday, 10 May 2019

39% வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன- பிரதமர்

புத்ராஜெயா-

நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலின்போது வழங்கிய வாக்குறுதிகள் பலவற்றை நிறைவேற்றுவதில் தாமதம் ஏற்பட்டாலும் அதனை நிறைவேற்றுவதற்கான பணி தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்று பிரதமர் துன் மகாதீர் கூறினார்.

பக்காத்தான் ஹராப்பானின் தேர்தல் கொள்கை அறிக்கையான BUKU HARAPAN-இல் வழங்கப்பட்ட வாக்குறுதிகளில் 39 விழுக்காடு வாக்குறுதிகள் நிறைவேற்றம் கண்டுள்ளன.
ஏற்கெனவே அமலாக்கம் செய்யப்பட்ட வாக்குறுதிகளும் அமலாக்கத்தில் இருந்து வரும் வாக்குறுதிகளும் இதில் அடங்கும்.

128 முன்னெடுப்பு திட்டங்களில் 53 திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அதே போன்று 283 முன்னெடுப்பு திட்டங்கள்  திட்ட வடிவில் இருக்கின்றன. அவை செயலாக்கம் காண்பதில் காலதாமதம் ஏற்பட்டாலும் அவை நிறைவேற்றப்படுவதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்று பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கத்தின் ஓராண்டு நிறைவு விழாவில் உரையாற்றும்போது கூறினார்.

ஓராண்டு கொண்டாட்டத்தில் நம்பிக்கைக் கூட்டணி; சாதித்ததா? சோதித்ததா?- பகுதி -2


ரா.தங்கமணி


மே 9….. இன்றைய நாள் மலேசிய அரசியல் வரலாற்றை ஒரு நிமிடம் புரட்டி போட்ட நாள். உலக நாடுகளே எதிர்பார்த்து காத்துக்  கொண்டிருந்த ஒரு வரலாற்று அத்தியாயத்தை மலேசியர்கள் சாதித்து காட்டிய நாள்.

நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலில் 60 ஆண்டுகளாக ஆட்சி புரிந்த தேசிய முன்னணி அரசாங்கத்திற்கு மாற்றாக நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கம் ஆட்சி புரிய மலேசிய வாக்காளர்கள் தங்களின் வாக்குரிமையை நிலைநாட்டிய வரலாற்றுப்பூர்வ நாளின் ஓராண்டு நிறைவு விழாவே இன்றைய கொண்டாட்டம் ஆகும்.

ஆட்சி மாற்றம் நிகழுமா? 60 ஆண்டுகால தேசிய முன்னணிக்கு முடிவு கட்டப்படுமா? என்ற கேள்விகளுக்கு மத்தியில் மாற்றத்தை முன்னெடுக்க நாங்கள் தயார் என துணிச்சலுடன் வீறுகொண்டு எழுந்த இளம் தலைமுறை வாக்காளர்களின் கனவு நிஜமானது நாளாக மே 9 கருதப்படுகிறது.

ஆட்சி மாற்றம், புதிய தலைமைத்துவம், புதிய விடியலுக்கு மத்தியில் மலேசியர்களின் ஒருமித்த மக்களாட்சியாக ‘புதிய மலேசியா’ எனும் சித்தாந்தத்துடன் ஆட்சி பீடத்தில் அரியணை அமர்ந்தது நம்பிக்கைக் கூட்டணி  (PAKATAN HARAPAN) அரசாங்கம்.

இன்றைய நாள் நம்பிக்கைக் கூட்டணி ஆட்சியமைத்தது என்பதை விட சிறந்த சேவை செய்யாத அரசாங்கத்தை ஆட்சியிலிருந்து வீழ்த்தும் வாக்காளனின் ‘ஒரு விரல் புரட்சி’ நாள் என்று சொல்வதே சாலச் சிறந்ததாகும்.

ஒரு விரல் புரட்சிக்கு பின்னர் ஆட்சியமைத்த நம்பிக்கைக் கூட்டணி மக்களுக்கு சிறந்த சேவையாற்றும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் மேலோங்கி இருந்த நிலையில் நம்பிக்கைக் கூட்டணியின் செயல்பாடுகள் மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன. இந்த உண்மையை நம்பிக்கைக் கூட்டணி தலைவர்களே ஒப்புக் கொள்வர்.

இந்த ஓராண்டு காலத்தில் மக்களிடத்தில் மேலோங்கியிருக்கும் அதிருப்திக்கு காரணம் தேர்தல் கொள்கை அறிக்கையில் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் பல நிறைவேற்றப்படாததும் மக்கள் பிரதிநிதிகளின் ஆக்கப்பூர்வமற்ற செயல்பாடுகளுமே ஆகும்.

வெ.1,500.00 அடிப்படைச் சம்பளம், பிடிபிடிஎன் கல்விக் கடன் ஒத்திவைப்பு, டோல் கட்டணம் அகற்றப்படும், வெ.1.50க்கு பெட்ரோல் விலை நிர்ணயம் போன்ற நம்பிக்கைக் கூட்டணியின் வாக்குறுதிகள் இளம் வாக்காளர்களை பெரிதும் கவர்ந்தது. ஆனால் ஆட்சி அமைத்த பின் இந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமல் சுணக்கம் கண்டதன் எதிரொலியே இன்று மக்கள் மத்தியில் எழுந்துள்ள அதிருப்திக்கு அடித்தளம் ஆகும்.

நாட்டின் நிதி நிலைமை படுமோசமாக உள்ளதால் இந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது என்று ஆட்சி அதிகாரத்தில் உள்ள தலைவர்கள் கூறினாலும் எதிர்பார்ப்புகளை சுமந்தபடி ஆட்சி மாற்றம் செய்த வாக்காளருக்கு இந்த அறிவிப்பு ஓர் ஏமாற்றமே ஆகும். அந்த ஏமாற்றமே நம்பிக்கைக் கூட்டணிக்கு எதிரான எதிர்ப்பு அலையை உருவாக்கி விடும் சூழலில் வந்து நிற்கிறது.

நாடு கொண்டுள்ள கடனையும், முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் மீதான 1எம்டிபி ஊழலையும் சொல்லி சொல்லியே ஓராண்டு காலத்தை கடந்து விட்ட நம்பிக்கைக் கூட்டணி அரசு மக்கள் மத்தியில் ஓர் பலவீனமாக அரசாக தன்னை காட்டி வந்துள்ளதும் இந்த அதிருப்திக்கு காரணமாக அமைந்துள்ளது.


அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளவர்கள் போதிய அனுபவம் பெறாதவர்கள் என்பதால் சில திட்டங்களில் முக்கிய முடிவை எடுக்க முடிவதில்லை என்ற கூற்று ஏற்றுக் கொள்ளக்கூடியதாக இருந்தாலும், அனுபவத்தை வளர்த்துக்  கொள்ள ஓராண்டு காலம் எடுத்துக் கொண்டோம் என கூறுவது எவ்வள்வு பெரிய பலவீனம் என்பதை மதிப்பிற்குரிய மாண்புமிகுகள் உணரவில்லையா?

நாளை தொடரும்… 

Thursday, 9 May 2019

விரைவு பேருந்தில் கோழிகளை கொண்டுச் சென்ற நால்வருக்கு வெ.1000 அபராதம்

ஜோகூர்பாரு-

முறையான ஆவணங்கள் இன்றி கோழிகளை விரைவு பேருந்தில் கொண்டுச் சென்ற நான்கு ஆடவர்களுக்கு ஜோகூர்பாரு மாஜிஸ்திரேட் நீதிமன்றம் தலா ஒருவருக்கு 1,000 வெள்ளி அபராதம் விதித்தது.

கடந்தாண்டு ஏப்ரல் 7ஆம் தேதி லார்க்கின் சென்ட்ரல் பேருந்து முனையத்தில் பொது தரை போக்குவரத்து ஆணையத்தைச் சேர்ந்த 3 அதிகாரிகள் ஒரு விரைவு பேருந்தில் சோதனை மேற்கொண்டபோது இந்த நான்கு ஆடவர்கள் மீதும் புகார் பதவு செய்யப்பட்டது.

உயிருள்ள கோழிகள் 9 கோழிகளையும் உயிரற்ற 4 கோழிகளையும் விரைவு பேருந்தில் கொண்டுச் செல்வதற்கு  ஜோகூர் மாநில கால்நடை இலாகவின் அனுமதியை பெறாததால் இவர்கள் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

நால்வரும் தலா 1,00 வெள்ளி அபராதத்தை செலுத்துவதோடு நிக் நோரிலாம்  716.04 வெள்ளியையும் ஃபைசால், ஃபவுசி ஆகியோர்  109.51 வெள்ளியையும் கூடுதல் அபராதம் விதித்ததோடு உயிரற்ற கோழிகளை எடுத்துச் சென்ற முகமட் ஸூலில்மி எவ்வித கூடுதல் அபராதமும் விதிக்காமல் மாஜிஸ்திரேட் நுராசிடா ரஹ்மான் உத்தரவிட்டார்.

ஸாகீர் நாய்க்கிற்கு நிலம் வழங்கப்பட்டதா? பிரதமர் துறை இலாகா மறுப்பு

கோலாலம்பூர்-

சர்ச்சைக்குரிய சமய போதகர் டாக்டர் ஸாகீர் நாய்க்கிற்கு ‘அமைதி டிவி’ (Peace TV) வழிநடத்துவதற்கு நிலமும் தேசிய தொலைகாட்சி அலைவரிசையில் தனி நேரம் ஒதுக்கப்படுவதற்கான அனுமதியும் வழங்கப்பட்டதாக வெளிவந்த செய்தியை பிரதமர் துறை இலாகா மறுத்துள்ளது.

இந்தியாவின் தொலைகாட்சி ஒன்று வெளியிட்ட இந்த தகவல் உண்மைக்கு புறம்பானது என ஓர் அறிக்கையில் வழி பிரதமர் துறை இலாகா கூறியது.

இந்தியாவில் தடை செய்யப்பட்ட அமைதி டிவியை வழிநடத்த நிலமும் அதற்கான அனுமதியும் மலேசிய அரசாங்கம் வழங்கியுள்ளதாக இந்தியாவின் தொலைகாட்சி வெளியிட்ட செய்தி சமூக ஊடகங்களில் வைரலானது.

Wednesday, 8 May 2019

ஓராண்டு கொண்டாட்டத்தில் நம்பிக்கைக் கூட்டணி; சாதித்ததா? சோதித்ததா? -பகுதி 1

ரா.தங்கமணி


கோலாலம்பூர்-
2018 மே 9இல் நிகழ்ந்த நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலுக்குப் பின்னர் நம்பிக்கைக் கூட்டணி (பக்காத்தான் ஹராப்பான்) ஆட்சியமைத்து நாளையுடன் ஓராண்டு பூர்த்தியாகிறது.

நாட்டின் சுதந்திரத்திற்கு பின்னர் 60 ஆண்டுகளாக நாட்டை ஆட்சி புரிந்த தேசிய முன்னணி அரசாங்கத்திற்கு மக்கள் கிடைத்ததன் விளைவாக நம்பிக்கைக் கூட்டணி மத்திய அரசாங்கத்தையும் சிலாங்கூர், நெகிரி செம்பிலான், மலாக்கா, ஜோகூர், பேராக், பினாங்கு, கெடா ஆகிய மாநிலங்களின் ஆட்சி உரிமையையும் கைப்பற்றியது. (2008 முதல் சிலாங்கூர், பினாங்கு ஆகியவை நம்பிக்கைக் கூட்டணி வசம் உள்ளது).

தேசிய முன்னணியின் 60 ஆண்டுகால ஆட்சிக்கு முடிவு கட்ட துணிந்த மலேசியர்கள் ‘புதிய ஆட்சி’ மக்களாட்சியாக திகழும் என்றே ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தினர்.

பக்காத்தான் ஹராப்பான் ஆட்சியை கைப்பற்றிய பின்னர் துன் மகாதீர் பிரதமராகவும் டத்தோஶ்ரீ வான் அஸிஸா துணைப் பிரதமராகவும்  இந்தியர்களின் சார்பில் குலசேகரன், கோபிந்த் சிங், சேவியர் ஜெயகுமார், செனட்டர் பி.வேதமூர்த்தி, ஆகியோர் அமைச்சர்களாகவும் ஆர்.சிவராசா துணை அமைச்சராகவும் பதவியேற்றுக் கொண்டனர்.

ஆனால் பக்காத்தான் ஹராப்பான் ஆட்சி அமைத்த இந்த  ஓராண்டு காலத்தில் மக்களின் ஆதரவை தக்கவைத்துக் கொள்வதில் சாதித்தது என்பதை விட கொஞ்சம் அதிகமாகவே சோதித்து விட்டது எனலாம்.

தேர்தல் நேரத்தில் வழங்கப்பட்ட வாக்குறுதிகளும் அதன் பின்னர் இடம்பெற்ற நம்பிக்கைக் கூட்டணி தலைவர்களின் செயல்பாடுகளும் மக்கள் மத்தியில் அதிருப்தியை எழச் செய்தது.

1. மீறப்பட்ட வாக்குறுதிகள்

நாட்டின் பொதுத் தேர்தலின்போது மக்களின் வாக்குகளை கவர்வதற்காக தேசிய முன்னணி, பக்காத்தான் ஹராப்பான் கூட்டணிகள் வானளாவிய வாக்குறுதிகளை வழங்கின.

இதில் ஆட்சியை பிடித்த நம்பிக்கைக் கூட்டணியின் முக்கியமான வாக்குறுதிகள் சிலவற்றை பார்ப்போம்.

            ஜிஎஸ்டி வரி (பொருள், சேவை வரி) அகற்றப்படும்
        -     தனியார் துறை ஊழியர்களின் மாதாந்திரச் சம்பளம் வெ.1500.00
-         பிடிபிடிஎன் கல்வி கடன் ரத்து
-         பெட்ரோல் விலை வெ.1.50ஆக குறைக்கப்படும்
-         வாழ்க்கைச் செலவீனம் குறைக்கப்படும்
-         நெடுஞ்சாலை டோல் கட்டணங்கள் அகற்றப்படும்

அனைவருக்கும் பொதுவாக வழங்கப்பட்ட இந்த வாக்குறுதிகளில் பக்காத்தான் ஹரப்பான் கூட்டணி சாதித்துள்ளதா? என்று கேள்வி கேட்டால் பலர் கடுப்பாகி விடுவர். அந்தளவுக்கு மக்களை சோதித்துள்ளது நம்பிக்கைக் கூட்டணி.

ஜிஎஸ்டி அகற்றப்படும் என்ற வாக்குறுதியே பெரும்பாலான வாக்காளர்கள் நம்பிக்கைக் கூட்டணியை ஆதரிக்க காரணமாக அமைந்தது. ஆனால் ஆட்சிக்கு வந்தவுடன் ஜிஎஸ்டி வரி ரத்து செய்யப்படுகிறது என்ற இனிப்பான செய்தியை சொல்லிவிட்டு எஸ்எஸ்டி வரி (விற்பனை, சேவை வரி) விதிக்கப்படும் எனும் இடியை மக்கள் தலையில் இறக்கி விட்டனர்.

ஜிஎஸ்டி வரிக்கு மக்கள் எதிராக திரண்டு நின்றதற்கு காரணமே பொருள் விலையேற்றம்தான். அதிகரித்துக் கொண்டே போகும் பொருட்களின் விலையால் மக்கள் அடைந்த ஆத்திரத்தின் வெளிப்பாடே தேசிய முன்னணியை மண்ணைக் கவ்வச் செய்தது.
ஜிஎஸ்டி வரியை நீக்கியதாக பக்கத்தான் ஹராப்பான் தம்பட்டம் அடித்துக் கொண்டாலும்  சரிவு காணாத பொருட்களின் விலையால் மக்களின் வாழ்வாதாரச் சூழலில் எவ்வித மாற்றமும் இல்லை.

அதோடு, தேர்தல் கொள்கை அறிக்கையில் இல்லாத எஸ்எஸ்டி வரியை அமல்படுத்தியதன் விளைவாக மக்களை மடையர்களாக்கிய சாமர்த்தியதனம்தான் நம்பிக்கைக் கூட்டணி  தலைவர்களின் சாதனையாக உள்ளது.

ஜிஎஸ்டி+ எஸ்எஸ்டி விவகாரத்தில் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி மீது மலேசியர்கள் கொண்டிருந்த நம்பிக்கை கொஞ்சம் கொஞ்சமாக ஆட்டம் காண தொடங்கியது.

நாளை தொடரும்...

நஜிப் தோல்வி- கோபால் ஶ்ரீராமை அகற்றும் மனு தள்ளுபடி


கோலாலம்பூர்-
1எம்டிபி தொடர்பான வழக்கில் அரசு வழக்கறிஞராக டத்தோஶ்ரீ கோபால் ஶ்ரீராம் ஆஜராவதை தடுக்கும் வகையில் முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக் செய்திருந்த  மேல்முறையீட்டு மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

நஜிப் செய்துள்ள மனுவில் ஏற்புடைய காரணங்கள் இல்லை என்பதால் இம்மனுவை நிராகரிப்பதாக மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி டத்தோ ஸபாரியா முகமட் யூசோப் தெரிவித்தார்.

கோபால் ஶ்ரீராம் ஆஜராவதால் நஜிப்பின் வழக்கில் எவ்வித பாதிப்பும் வராது. அவருக்கு நீதி கிடைக்காது என்பதில் உண்மை இல்லை.  அந்த பாதிப்பை நஜிப்பின் வழக்கறிஞர்கள் உறுதிப்படுத்தவில்லை என்று அவர் சொன்னார்.

தமக்கு எதிரான வழக்கில் ஶ்ரீராம் ஆஜராவதை தடுக்க கடந்தாண்டு டிசம்பர் 1ஆம் தேதி டத்தோஶ்ரீ நஜிப் மனுதாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை இவ்வாண்டு உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.


மலாய் மாணவர்களுக்கான ‘கொல்லைப்புற கதவே’ மெட்ரிக்குலேஷன்- பிரதமர்

புத்ராஜெயா-

மலாய் மாணவர்கள் எளிதாக பல்கலைக்கழகங்களில் நுழைவதற்கான ‘கொல்லைப்புற கதவே’ மெட்ரிக்குலேஷன் ஆகும் என்று பிரதமர் துன் மகாதீர் தெரிவித்தார்.
எஸ்டிபிஎம் தேர்வை எழுதாத மலாய்க்கார  மாணவர்கள் பல்கலைக்கழகங்களில் நுழைய முடியாது என்பதால் அவர்களுக்காக உருவாக்கப்பட்ட எளிமையான முறையே மெட்ரிக்குலேஷன் ஆகும்.

எஸ்டிபிஎம் தேர்வு கடினமான ஒன்று என்பதோடு  பல்கலைக்கழகங்களில் நுழைவதற்கு  அதில் உத்தரவாதம் வழங்கப்படுவதில்லை. ஆனால் மெட்ரிக்குலேஷன் பயிலும் மாணவர்களுக்கு பல்கலைக்கழக நுழைவு உறுதி செய்யப்படுகிறது.
எஸ்பிஎம் முடித்த மலாய் மாணவர்கள் எளிய முறையில் பல்கலைக்கழகம் செல்வதற்காக உருவாக்கப்பட்டதே  மெட்ரிக்குலேஷன் ஆகும் என்று அவர் சொன்னார்.

Tuesday, 7 May 2019

அமைச்சரவையில் மாற்றம் இல்லை- பிரதமர்

புத்ராஜெயா-
தற்போதுள்ள அமைச்சரவையில் எவ்வித மாற்றமும் கிடையாது என்று பிரதமர் துன் மகாதீர் முகம்மது தெரிவித்தார்.

பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி ஆட்சியை கைப்பற்றி ஓராண்டை கடக்கின்ற நிலையில் அமைச்சர்களின் செயல்பாடுகள் மனநிறைவளிக்கும் வகையில் உள்ளதால் அமைச்சரவையில் மாற்றம் ஏற்படாது.

சில அமைச்சர்களின் செயல்பாடுகள் பின் தங்கி கிடப்பதால் அமைச்சரவையில் மாற்றம் ஏற்படுமா? என கேள்வி எழுப்பப்பட்ட போது அவர் இவ்வாறு கூறினார்.


பூச்சோங் நாடாளுமன்றத் தொகுதி ஏற்பாட்டில் உடற்குறையுடையோர், முதியோருக்கு நிதியுதவி


எஸ்.ஷாண்

பூச்சோங்-
உடற்பேறு குறைந்தவர்கள், நோயால் பாதிக்கப்பட்ட முதியோர்கள், பிள்ளைகளால் கைவிட்டப்பட்ட வயதான பெற்றோர்கள் ஆகியோருக்கு பூச்சோங் நாடாளுமன்றத் தொகுதி சார்பில் 14 பேருக்கு தலா 1,000 வெள்ளி (ஒருவருக்கு மட்டும் 500 வெள்ளி) நன்கொடை வழங்கப்பட்டது.

பூச்சோங் நாடாளுமன்ற உறுப்பினர், தொடர்பு,பல்லூடக அமைச்சர் கோபிந்த் சிங் தலைமையில் இந்நிதி கிடைக்கப்பெற்றது என்று அதன் ஏற்பாட்டாளர் மெலிசா கூறினார்.
அதுமட்டுமின்றி இத்தகைய சூழலில் பாதிக்கப்பட்டு வரும் பூச்சோங், செர்டாங் தொகுதியில் நன்கொடை கிடைக்காத மக்களுக்கு 14ஆவது மைல், செர்டாங் இக்கியூன் பார்க் உள்ள நாடாளுமன்றத் தொகுதி அலுவலகத்திற்கு வந்து பதிவு செய்து கொள்ளலாம் என பத்திரிகையாளர் கூட்டத்தில் அவர் சொன்னார்.

இதற்கு மாண்புமிகு செனட்டர் சுரேஷ் சிங் முழு ஆதரவு வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Sunday, 5 May 2019

மக்கள் பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் கேசவன் தோல்வி- மணிமாறன் குற்றச்சாட்டு

ரா.தங்கமணி

சுங்கை சிப்புட்-
சுங்கை சிப்புட் நாடாளுமன்ற உறுப்பினராக எஸ்.கேசவன் தேர்ந்தெடுக்கப்பட்டு ஓராண்டை கடக்கின்ற நிலையில் இன்னமும் இத்தொகுதியில் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண தவறிவிட்டார் என்று சுங்கை சிப்புட் மஇகா செயலாளர் கி.மணிமாறன் குற்றம் சாட்டினார்.

இத்தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்த துன் வீ.தி.சம்பந்தன், துன் ச.சாமிவேலு ஆகியோர் தந்தி துறை (தொலை தொடர்பு) அமைச்சராக பதவி வகித்தனர். அவர்கள் முயற்சியில் சுங்கை சிப்புட் நகரம் தொலைதொடர்பு போக்குவரத்து ஆகியவற்றில் முன்னேற்றம் கண்டு வந்தது. இங்குள்ள மக்களின் வசதிக்காக டெலிகோல் மலேசியா அலுவலகமும், 4 முறை மின்சார ரயில் சேவையையும் இயக்கப்பட்டு வந்தன.

ஆனால் 14ஆவது பொதுத் தேர்தலுக்குப் பின்னர் இத்தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக கேசவன் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் டெலிகோம் மலேசியாவின் அலுவலகம் மூடப்பட்டது, 4 முறையாக இருந்த ரயில் சேவை ஒரு பயணமாக குறைக்கப்பட்டது.

முன்பு இங்கிருந்து கோலாலம்பூர், பினாங்கு ஆகிய பகுதிகளுக்குச் செல்ல பேருந்து வசதி இருந்தது. ரயில் சேவை தொடங்கப்பட்டதில் இருந்து பேருந்து சேவையும் நிறுத்தப்பட்டது.

இவ்விவகாரம் குறித்து கேசவனிடம் முறையாக மகஜர் கொடுத்தும் இன்றுவரையிலும் இப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படவில்லை.
ஊத்தான் மெலிந்தாங் சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது தொகுதியில் ஆவி வாக்காளர் பிரச்சினைக்காக மாநில தேர்தல் ஆணையம் அலுவலத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்தார்.

ஆனால் தொலைபேசி கட்டணம் செலுத்துவதற்கும் ரயில் சேவைக்கும் ஈப்போவுக்கும் கோலாகங்சாருக்கும் அலைய வேண்டிய நிலை  ஏற்படுகிறது. இங்குள்ள மக்களின் பிரச்சினைக்காக எத்தகைய ஆக்ககரமான நடவடிக்கையும் எடுக்காத கேசவனின் சாதனை இந்த ஓராண்டில் பூஜியமாகவே உள்ளது.

ஒரு நகரத்தின் வளர்ச்சியில் போக்குவரத்தும் தொலை தொடர்பு வசதியும் அவசியமானது. இவை இரண்டுமே இல்லாத சுங்கை சிப்புட் நகரம் வளர்ச்சியிலிருந்து பின் தள்ளப்பட்டு இங்குள்ள மக்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படும் என்பதை உணர்ந்து கேசவன் செயலாற்ற வேண்டும் என மணிமாறன் கேட்டுக் கொண்டார்.

Friday, 3 May 2019

எஸ்டிபிஎம் vs மெட்ரிக்குலேஷன்; பல்கலைக்கழகத்தில் நுழைய இரு நடைமுறைகள் ஏன்?- கணபதிராவ் கேள்வி

ரா.தங்கமணி

ஷா ஆலம்-

எஸ்பிஎம் தேர்வுக்குப் பின்னர் பல்கலைக்கழகங்களில் நுழைவதற்கு எஸ்டிபிஎம், மெட்ரிக்குலேஷன் என மாணவர்களுக்கு இருவகையான நடைமுறைகள் விதிக்கப்படுவது கல்வித்துறை மீதான வெளிப்படைத்தன்மையை கேள்விக்குறியாக்கியுள்ளது என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் தெரிவித்தார்.

மெட்ரிகுலேஷன் விவகாரத்தில் இந்திய மாணவர்களுக்கு முந்தைய ஆட்சியில் வழங்கப்பட்ட 2,200 இடங்களை தற்போது கல்வி அமைச்சு வெகுவாக குறைத்ததற்கு இந்திய சமுதாயம் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியது. அந்த எதிர்ப்பின் எதிரொலியாக 25,000ஆக இருந்த மெட்ரிக்குலேஷன் இடங்கள் 40,000ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஆயினும் மெட்ரிக்குலேஷன் இட ஒதுக்கீட்டில் 90/10 என்ற அடிப்படையில் பூமிபுத்ராவினருக்கு 90 விழுக்காடும் பூமிபுத்ரா அல்லாதோருக்கு 10 விழுக்காடும் வழங்கப்படுவது  ஏற்புடையது அல்ல.

அதேபோன்று இப்போது மெட்ரிக்குலேஷன் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டிருப்பதால் எஸ்டிபிஎம் பயிலக்கூடிய மாணவர்களின் எண்ணிக்கை சரிவு காண்பதோடு தற்போதைய எஸ்டிபிஎம் மாணவர்கள் பல்கலைக்கழகம் பயில்வதற்கான நெருக்கடியும் ஏற்படக்கூடும்.

18 மாதங்கள் கஷ்டப்பட்டு பயிலக்கூடிய எஸ்டிபிஎம் மாணவர்கள் பல்கலைக்கழகங்களில் நுழைவதற்கு இட நெருக்கடியை எதிர்நோக்குவதோடு இதனால் தர்மசங்கடமான நிலை கூட ஏற்படலாம்.

பொது பல்கலைக்கழகங்களில் நுழைவதற்கு எஸ்டிபிம், மெட்ரிக்குலேஷன் என இருவகையான கல்வி முறை நடைமுறைப்படுத்துவது கல்வி துறை மீதான நம்பகத்தன்மையை மக்கள் மத்தியில்  கேள்விக்குறியாக்கி விடும் என்று சிறப்பு செய்தியாளர் சந்திப்பின்போது கணபதிராவ் குறிப்பிட்டார்.

Wednesday, 1 May 2019

தமிழ்ப்பள்ளிகளையும் இந்திய மாணவர்களையும் சிலாங்கூர் அரசு கைவிட்டதில்லை- மந்திரி பெசார்

ரா.தங்கமணி

ஷா ஆலம்-
சிலாங்கூர் மாநிலத்திலுள்ள தமிழ்ப்பள்ளிகள் மேம்பாட்டிற்கும் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கும் மாநில அரசு பல ஆக்ககரமான திட்டங்களை வகுத்து செயல்படுத்தி வருகின்றது என்று மாநில மந்திரி பெசார் டத்தோ அமிருடி சாரி தெரிவித்தார்.

இந்திய மாணவர்களின் கல்வி நலனில் அக்கறை கொண்டுள்ள மாநில அரசு பல்வேறு நிதி ஒதுக்கீடுகளை வழங்கி அவர்களை கல்வியில் சிறந்தவர்களாக உருவாக்க முனைகிறது.

தமிழ்ப்பள்ளிகள் சார்ந்த எத்தகைய பிரச்சினைகளாக இருந்தாலும் அவற்றுக்கு சுமூகமான தீர்வு காணும் அதே வேளையில் இந்திய மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காக அதிகமான மானியங்களை ஒதுக்கீடு செய்யும் முதன்மை மாநிலமாக சிலாங்கூர் மாநிலம் திகழ்கிறது என்று 2018ஆம் ஆண்டு யூபிஎஸ்ஆர் தேர்வில் சிறந்த தேர்ச்சி பெற்ற  மாணவர்களுக்கு விருது வழங்கும் நிகழ்வில் உரையாற்றியபோது அவர் இவ்வாறு கூறினார்.


எந்த மொழி பள்ளியாக இருந்தாலும் அதனை புறக்கணிக்காமல் அப்பள்ளிகளின் தேவையறிந்து உதவிகளை வழங்கி வருகிறோம். ஒவ்வோர் ஆண்டும் இம்மாநிலத்திலுள்ள தமிழ்ப்பள்ளிகளின் வளர்ச்சிக்காக 50 லட்சம் வெள்ளி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

மேலும், வறுமை சூழலில் உள்ள இந்திய மாணவர்களுக்கு இலவச பேருந்து கட்டணமாக 300 வெள்ளி வழங்கப்படுகிறது.
இந்திய சமுதாயம் கல்வி துறையில்  பிங்தங்கி விடக்கூடாது எனும் நோக்கில் மாநில நம்பிக்கைக் கூட்டணி அரசு பல்வேறு திட்டங்களை  முன்னெடுத்து வருகிறது. வருங்காலத்திலும் அத்திட்டங்கள் தொடரப்படும் என்ற டத்தோ அமிருடின் சாரி,  யூபிஎஸ்ஆர் தேர்வில் சிறந்த தேர்ச்சியை பெற்றுள்ள மாணவர்கள் அடுத்தடுத்த தேர்வுகளில் சிறந்த அடைவு நிலையை பெறுவதோடு வாழ்விலும் சிறந்து விளங்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும் சீனாவில் நடந்த ஆசிய பனிச்சறுக்கு போட்டியில் ஐந்து தங்கத்தை வென்று சாதனை படைத்த சிறுமி ஶ்ரீ அபிராமியை டத்தோ  அமிருடின் சாரி பாராட்டி சிறப்பு செய்தார்.


சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் தலைமையில் நடந்தேறிய இந்நிகழ்வில் மாணவர்கள், பெற்றோர்கள், இந்திய கிராமத் தலைவர்கள், பொது இயக்கத்தினர் உட்பட பலர் திரளாக கலந்து கொண்டனர்.