Saturday 3 October 2020

மக்கள் பிரச்சினையில் அதிரடி காட்டிய நாயகன் டத்தோ முருகையா/ #HBDDatoMurugiah

ரா.தங்கமணி

கோலாலம்பூர்-

ஒரு பொதுத் தேர்தல் நடக்கிறது. அதில் கட்சித் தலைவர் தோல்வி காண்கிறார். ஆட்சி அமைக்கின்ற கூட்டணியில் அங்கம் வகிக்கின்ற கட்சியின் சார்பாக துணை அமைச்சராக நியமனம் செய்யப்படுகிறார். ஓர் பிரிவிக்கு தலைமையேற்கும் அந்த தனி மனிதரின் அதிரடி நடவடிக்கைகளுக்குப் பின்னர் அதுவரை அறிந்திராத ஓர் அரசு பிரிவு நாடு முழுவதும் அறியப்பட்ட துறையாக மாற்றம் காண்கிறது.  

ஆம்... பிரதமர் துறை அமைச்சின் கீழ் செயல்படும் பொது புகார் பிரிவில் அதிரடியை நிகழ்த்திய நாயக அந்தஸ்துக்கு சொந்தக்காரர் வேறு யாருமல்ல... பிரதமர் துறை அமைச்சின் முன்னாள் துணை அமைச்சர் டத்தோ தோ. முருகையாதான்.

2008ஆம் ஆண்டு அரசியல் சுனாமியை ஏற்படுத்தியிருந்த நாட்டின் 12ஆவது பொதுத் தேர்தலில் தேசிய முன்னணியில் அங்கம் அங்கம் வகித்திருந்த பல்வேறு அம்னோ, மஇகா, மசீச, கெராக்கான் உட்பட பல கட்சிகள் பெருமளவு தோல்வியைச் சந்தித்தன. அதில் பிபிபி எனப்படும் மக்கள் முற்போக்கு கட்சியும் தோல்வியை சந்தித்தது. அக்கட்சியின் தேசியத் தலைவரான டான்ஸ்ரீ எம்.கேவியஸ் தைப்பிங் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவிய பின்னர் கூட்டணி அரசாங்கம் அமைத்த தேசிய முன்னணி அமைச்சரவையில் தனது பிபிபி கட்சியின் பிரதிநிதியாக டத்தோ முருகையாவை நியமித்தார் டான்ஸ்ரீ கேவியஸ்.

செனட்டர் பொறுப்பேற்று பிரதமர் துறை அமைச்சின் துணை அமைச்சராக நியமனம் செய்யப்பட்ட டத்தோ முருகையாவுக்கு பொதுப் புகார் பிரிவு ஒதுக்கப்பட்டது.

பொதுப் புகார் பிரிவில் என்ன சாதிக்க முடியும்? என்ற ஏளனக் கேள்விகளுக்கு மத்தியில் வேலைக்காரனுக்கு வேலையை சொல்லி கொடுக்க வேண்டியதில்லை என்பதை உண்மையாக்கினார் டத்தோ முருகையா.

மக்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது என்பது எளிதல்ல. பலவிதமான பிரச்சினைகள், பலவாறான ரூபங்களில் தினம் தினம் அலுவலக வாயிலை தட்டின.

பிரச்சினைகளை கண்டு சளிக்கவில்லை... சளைக்கவில்லை.. வந்து குவிந்த புகார்களுக்கு தீர்வு காண களமிறங்கினார்.

சுகாதாரம், தூய்மைக்கேடு, வசிப்பிடப் பாதிப்பு, சமூகநலன், வாழ்வாதாரப் பிரச்சினை, அரசு துறைகளின் தீர்வு காணப்படாத கோப்புகள் என்று தனது அலுவலகக் கதவினை தட்டிய அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காண தானே களமிறங்கினார். பிரச்சினைகளுக்கு தீர்வும் கண்டார்.

மக்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண காட்டிய அதிரடி நடவடிக்கையினால் 'மக்கள் நாயகனாக' உயர்ந்தார்.

'உங்களுக்கு ஏதாவது பிரச்சினையா? கவலைபடாதீங்க.. டத்தோ முருகையா அலுவலகத்துக்கு போங்க.. பிரச்சினை தீர்ந்திடும்' என மக்களே கொண்டாடி தீர்க்கும் அளவுக்கு பொதுப் புகார் பிரிவில் சாட்டையை சுழற்றினார் டத்தோ முருகையா.

மற்றவர்களின் பிரச்சினைகளுக்கெல்லாம் தீர்வு கண்ட டத்தோ முருகையா ஒருவருக்கு பிரச்சினையாகவும் மாறினார்.

பிபிபி கட்சிக்கு நானே தேசியத் தலைவர் என்று அக்கட்சியின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ கேவியஸ் பதவியில் இருக்கும்போதே அதிரடியாக அறிவித்த டத்தோ முருகையாவின் அறிவிப்பு அரசியல் அரங்கில் பரபரப்பை கூட்டியது.

தலைமைத்துவப் போராட்டம், சட்ட மோதல் என்று டான்ஸ்ரீ கேவியசுக்கும் டத்தோ முருகையாவுக்கும் மூண்ட அரசியல் போராட்டத்தின் விளைவாக 2009இல் பிபிபி கட்சியிலிருந்து டத்தோ முருகையா  நீக்கப்பட்டார்.

பிபிபி கட்சியிலிருந்து நீக்கப்பட்ட பின்னர் டத்தோ முருகையா புதிய கட்சியை தொடங்கலாம் என ஆருடம் வலுத்த சூழலில் 2010 ஆகஸ்ட் 5இல் அப்போதைய மஇகாவின் தேசியத் தலைவர் துன் ச.சாமிவேலுவின் ஆலோசனையில்  தன்னை மஇகாவில் ஓர் உறுப்பினராக இணைத்துக் கொண்டார்.

10 ஆண்டுகாலமாக தன்னை மஇகாவில் இணைத்துக் கொண்டுள்ள டத்தோ முருகையா கட்சியின் உதவித் தலைவராக உயர்வு கண்டுள்ளதோடு தெலுக் இந்தான் நாடாளுமன்றத் தொகுதியின் தேசிய முன்னணி ஒருங்கிணைப்பாளராக இப்போதும் பம்பரம் போல் சுழன்றுக் கொண்டிருக்கிறார்.

துணை அமைச்சராக தன்னை மஇகாவில. இணைத்துக் கொண்ட டத்தோ முருகையாவின் ஒரு தவணைக்கான செனட்டர் பதவிக் காலம் நீட்டிக்கப்படாததால் துணை அமைச்சர் பதவியிலிருந்து விலகிய அவரோடு பொதுப் புகார் பிரிவும் செயலிழந்தது... மக்கள் சிந்தனையிலிருந்தும் மறைந்தே போனது.

இன்று பிறந்தநாள் கொண்டாடும் டத்தோ முருகாயாவுக்கு 'பாரதம்' இணைய ஊடகம் பிறந்தநாள்  வாழ்த்துகளை. தெரிவித்துக் கொள்கிறது.

No comments:

Post a Comment