Thursday 19 December 2019

பல்வேறு பிரிவுகளில் சாதித்த தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு ஊக்குவிப்பு நிதி

ரா.தங்கமணி

ஷா ஆலம்-
அனைத்துலக ரீதியில் பல்வேறு  அறிவியல், விளையாட்டு, கலாச்சாரம், புத்தாக்கப் போட்டிகளில் பங்கேற்று வெற்றிகளை அள்ளி குவித்த தமிழ்ப்பள்ளி மாணவர்களை சிறப்பிக்கும் வகையில் சிலாங்கூர் மாநில அரசு மானிய ஊக்கத்தொகையை வழங்கியது.
சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள 8 தமிழ்ப்பள்ளிகளைச் சேர்ந்த 59 மாணவர்களுக்கு சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் ஊக்கத்தொகையை எடுத்து வழங்கினார்.

மாணவர்களிடையே புதைந்து கிடக்கும் திறமைகளை ஆசிரியர்களும் பெற்றோரும் கண்டறிந்து அவர்களை ஊக்குவித்து அனைத்துலக ரீதியில் வெற்றியாளராக உயர்த்தியுள்ளனர்.
மாணவர்களை திறமைகளை உணர்ந்து அவர்களை ஊக்கப்படுத்துவதன் மூலம் அவர்களின் திறமை இன்னும் பல மடங்கு உயர்வதோடு அது அடுத்து வரும் தலைமுறைக்கு உந்துசக்தியாகவும் அமையும்.

அதன் அடிப்படையிலேயே அறிவியல், விளையாட்டு, கலாச்சாரம், புத்தாக்கப் போட்டிகளில் பங்கேற்றவர்களை ஊக்குவிக்கும் வகையில் இந்த ஊக்குவிப்பு நிதி வழங்கப்படுகிறது.
இந்திய சமுதாயத்திற்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட மானியத்தை பொங்கல், தீபாவளி கலை இரவு என நிகழ்ச்சிகளை நடத்தி அந்த பணத்தை வீணாக செலவழிப்பதை விட மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்காக செலவிடப்பட்டு வருகிறது.

பள்ளி மாணவர்களின் பேருந்து கட்டணம், உயர்கல்வி மாணவர்களுக்கான கல்வி நிதி, யூபிஎஸ்ஆர் மாணவர்களுக்கான பாராட்டு விழா அந்நிதியின் மூலம் செய்யப்பட்டு வருகிறது. அதேபோன்று தற்போது சாதனையார் ஊக்குவிப்பு நிதியும் வழங்கப்படுவதாக அவர் மேலும் சொன்னார்.

மிட்லண்ட்ஸ், ஜெஞ்ஜாரோம்,சிம்பாங் லீமா, காஜாங், சுங்கை சோ, சுங்கை ரெங்கம், தெலுக் டத்தோ ஆகிய 8 தமிழ்ப்பள்ளிகளைச் சேர்ந்த 59 மாணவர்களுக்கு 33,500 வெள்ளி மதிப்புடைய ஊக்குவிப்பு நிதி வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் இந்திய சமூகத் தலைவர்களும் ஆசிரியர்களும் பெற்றோர்களும் திரளாக கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment